Last Updated : 11 Feb, 2015 12:01 PM

 

Published : 11 Feb 2015 12:01 PM
Last Updated : 11 Feb 2015 12:01 PM

ஒரு சிறுவனின் கிரிக்கெட் கனவு

அந்தச் சிறுவன் மிகவும் முரடன். பள்ளிக் கூடத்தில் எப்போதும் மற்ற பசங்களுடன் சண்டை போட்டுக் கொண்டே இருப்பான். டென்னிஸ் விளையாட்டு என்றால் அவனுக்கு உசுரு. எப்பவும் டென்னிஸ் பேட்டோட சுற்றிக்கொண்டே இருப்பான்.

ஒரு சமயம் அவனோட அண்ணன் அஜித் அவனுக்கு கிரிக்கெட் விளையாட்டை அறிமுகப்படுத்தினான். அப்போதுதான் இந்தியாவும் கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பையை ஜெயித்திருந்தது. அதனால் அவனுக்கும் கிரிக்கெட் மேல ஆர்வம் வந்தது.

கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததுமே, வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்றுதான் அந்தச் சிறுவன் விரும்பினான். பள்ளிக்கு விடுமுறை விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களைப் போன்ற குட்டிப் பசங்க எல்லாம் சேர்ந்து தெருவில் கிரிக்கெட் விளையாடுவீர்கள் இல்லையா?

அப்படித்தான் அந்தச் சிறுவனும் விளையாடினான். மும்பையில் உள்ள அவனது வீட்டுத் தெருவில் வேகமாக ஓடி வந்து பந்து வீசுவான். அவனோட கிரிக்கெட் ஆசையைப் பார்த்து அவருடைய அண்ணன், அவனை ஒரு பயிற்சியாளரிடம் சேர்த்துவிட்டார்.

பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் கிரிக்கெட் மைதானத்திலேயே இருந்தான் அந்தச் சிறுவன். அவனுடைய பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கர் சிறுவனுக்கு கிரிக்கெட் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்.

ஒரு சமயம் எம்.ஆர்.எஃப். பவுண்டேஷன் நடத்திய கிரிக்கெட் பயிற்சியில் கலந்துகொள்ள அந்தச் சிறுவனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி வேகப்பந்து பயிற்சி கொடுத்தார். அதனால், அவரிடம் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு பெரிய பந்து வீச்சாளராக வேண்டும் என்று நினைத்தான் சிறுவன்.

டென்னிஸ் லில்லியிடம் ஓடி வந்து பந்து வீசிக்காட்டினான் அவன். அவனோட பந்துவீச்சு முறையும், வேகமும் டென்னிஸ் லில்லியைப் பெரிதாகக் கவரவில்லை. உடனே அந்தச் சிறுவனைக் கூப்பிட்டு, “வேகப்பந்து வீச்சு உனக்குச் சரிப்பட்டு வராதுப்பா. நீ நன்றாக பேட்டிங் செய்கிறாய். அதில் மட்டும் உன் கவனத்தைச் செலுத்து” என்று சொன்னார்.

அதைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினான். அவனுடைய பயிற்சியாளர் அச்ரேக்கரும் பேட்டிங் நுணுக்களைக் கற்றுக் கொடுத்தார். மெனக்கெட்டு பயிற்சி எடுத்து பேட்டிங்கில் ஜொலிக்க ஆரம்பித்தான் அந்தச் சிறுவன்.

மீண்டும் உலகக் கோப்பை கிரிக்கெட் எப்போதும் வரும் என்று அந்தச் சிறுவன் காத்திருந்தான். 1987-ம் ஆண்டில் இந்தியாவிலேயே உலகக் கோப்பை நடைபெற்றது. அரையிறுதி போட்டி ஒன்று சிறுவனின் சொந்த ஊரான மும்பையில் நடைபெற்றது. கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது இப்போதுகூட நீங்கள் அந்தக் காட்சியைப் பார்க்கலாம்.

நான்கு, ஆறு ரன்கள் எனப் பந்து எல்லைக் கோட்டுக்கு வரும்போது சிறுவர்கள் அந்தப் பந்தை எடுத்து விளையாடும் வீரர்களிடம் தூக்கி எறிவார்கள். அப்படித்தான் அரையிறுதிப் போட்டியில் அந்தச் சிறுவன் பந்தை எடுத்து தூக்கிப் போட மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டான்.

போட்டியைப் பார்த்த அந்தச் சிறுவன், தானும் இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் விளையாட முடியுமா என்று ஆசையில் ஏங்கினான். அந்த ஆசை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பூர்த்தியானது. 1992-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் அந்தச் சிறுவன் இந்தியாவுக்காக விளையாடினான்.

அப்போது அந்தச் சிறுவனுக்கு 18 வயதுதான். இந்திய அணி சார்பில் மிகவும் இளைய வயதில் உலகக் கோப்பையில் விளையாடியவர் என்ற பெருமையும் அவனுக்குக் கிடைத்தது. அந்தச் சிறுவன் யார் என்று ஊகித்துவீட்டீர்களா?

சச்சின் டெண்டுல்கர்தான் அந்தச் சிறுவன். உலகக் கோப்பையில் அதிக முறை விளையாடியவர்கள் இரண்டே பேர்தான். சச்சின் டெண்டுல்கரும், நம் பக்கத்து நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவித் மியாண்டட்டும்தான் அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்கள்.

இவர்கள் இருவரும் ஆறு முறை உலகக் கோப்பையில் விளையாடியிருக்கிறார்கள். இப்படி ஒரு பெருமை இவர்களுக்கு மட்டுமே உண்டு. 17 வயதில் உலகக் கோப்பையில் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவித் மியாண்டட்டும் சிறு வயதில் கராச்சி தெருக்களில் கிரிக்கெட் விளையாடிவர்தான்.

யார் கண்டது, இன்று தெருக்களில் கிரிக்கெட் விளையாடும் நீங்களும் இவர்களைப் போல பெரிய கிரிக்கெட் வீரராகலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x