Published : 18 Feb 2015 12:18 PM
Last Updated : 18 Feb 2015 12:18 PM

அறிவியல் வளர்க்கும் அங்கிள்

மூன்று வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் சுற்றிலும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களின் கையில் எல்லாம் வண்ண, வண்ண அட்டைகள், தாள்கள். குழந்தைகளோடு குழந்தையாக நின்று அந்தக் காகித அட்டைகளை அப்படி இப்படி மடிக்கச் சொல்லி தானும் மடித்துக் காட்டுகிறார் ஒரு இளைஞர்.

ஒரு கட்டத்தில் கையடக்கமாக ஒரு காகித ராக்கெட் உருவாகிறது. கூல்டிரிங்ஸ் உறிஞ்சப் பயன்படும் ஸ்டிரா ஒன்றை எடுத்து மடித்து அதை வாயில் வைத்து, மடித்த ஸ்ட்ராவில் ராக்கெட்டை வைத்து ஊதுகிறார். குழந்தைகளும் அதேபோல் ஊதுகின்றன. கண்ணில் காணும் இடங்களில் எல்லாம் அந்தக் காகித ராக்கெட் வண்ண வண்ண வடிவில் பறக்கிறது.

ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் உள்ளிட்ட விண்ணில் உள்ள கோள்களுக்குச் செலுத்தப்படும் செயற்கைக் கோள்கள் தாங்கிய ராக்கெட்வரை இந்தத் தத்துவத்தில் இந்த விதத்தில்தான் இயங்குகின்றன என்பதை மழலைகளுக்குப் புரியும் மொழியில் எடுத்துக் கூறுகிறார் இளைஞர்.

‘சத்தி அங்கிள்... இன்னொருவாட்டி.. இன்னொருவாட்டி..!’ குரல்கள் ஒலிக்கின்றன. ராக்கெட் என்றில்லை. சூரியன் ஒரு நட்சத்திரம்தான் என்பது முதல், இதுபோல் எண்ண முடியாத அளவு வளிமண்டலத்தில் நட்சத்திரங்கள் இருக்கின்றன, சூரியக் குடும்பத்தின் கோள்கள் எத்தனை..? கோள்களுக்கும் விண்மீன்களுக்கும், நட்சத்திரங்களையும் எப்படி வித்தியாசப்படுத்துவது என்பதுவரை அந்த இளைஞர் செயல்முறை விளக்கங்களுடன் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

எளிய முறையிலான அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ‘சத்தி அங்கிள்’ எனக் குழந்தைகள் செல்லமாக அழைக்கும் இந்த சத்தியமாணிக்கம் தன் நண்பர்கள் 12 பேர் துணையுடன் 2001-ம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் 80 ஆயிரம் குழந்தைகளுக்கு விஞ்ஞான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

மதுரையில் கலிலியோ அறிவியல் மையம் என்ற அமைப்பை நடத்திவரும் இவர் 30 பேர் அமரும்படியான மொபைல் கோளரங்கம் ஒன்றையும் வைத்துள்ளார்.

இது எப்படிச் சாத்தியமானது? ‘‘1993-ம் ஆண்டிலிருந்து 1998 வரை பாரத்யான் வித்யான் சமிதி (தேசிய அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு) முழுநேரப் பணியாளராகப் பணியாற்றினேன். அந்த புராஜக்ட் முடிவுக்கு வந்தபிறகு குழந்தைகளுக்கான விஞ்ஞானப்பூர்வமான செயல்முறைக் கற்றலை விட்டுவிடக் கூடாது.

இதில் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான குழந்தைகளை ஈடுபடுத்தி விண்வெளி குறித்த பாடப்புத்தக அறிவைத் தாண்டிய அறிவை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காகவே கலிலியோ அறிவியல் மையத்தை உருவாக்கினேன்.

எங்க டீமில் பேராசிரியர், டாக்டர், இன்சினீயர் முதற்கொண்டு, டெய்லர்வரை 12 பேர் உள்ளோம். எங்களுக்குத் தொடர்பு உள்ள பள்ளிகளுக்கு எல்லாம் போனோம். சொல்லிக் கொடுத்தோம். பிறகு அவர்கள் சொல்லி மற்றவர்கள் கூப்பிட ஆரம்பித்தார்கள்.

அறிவியலை வெறுமனே ஏட்டளவில் பாடம் நடத்தினால் புரியாது; அதைச் செய்முறை விளக்கமாகச் செய்தால் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பதை இதன் மூலம் ஆசிரியர்களும் உணர்ந்தார்கள். மங்கள்யான் விண்ணுக்குப் போனதை ஒட்டி ஒரு குறும்படம் எடுத்து நாங்கள் செல்லும் அனைத்துப் பள்ளிகளிலும் காட்டினோம்.

வரும் பிப்ரவரி 28-ந்தேதி கொடைக்கானலில் ஒரே இடத்தில் 5 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்” என்று தகவல்களை அடுக்கினார்.

‘நாசாவில் ஒரு ராக்கெட் அனுப்பும் முன்பு அதை முன்வைத்து 2 வயசுக் குழந்தைகளுக்குக் கூடப் புரிகிற மாதிரி அங்கே பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள். பிறகுதான் அந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறார்கள்.

அப்படிச் செய்யும்போது அங்குள்ள குழந்தைகள் மிதமிஞ்சிய அறிவியல் அறிவைப் பெறுவதோடு, அந்த ராக்கெட்டைத் தானே விண்ணில் ஏவியது போல் உணர்கிறார்கள். அதனால் இங்கே அப்படியான ஒரு நிலை இல்லை” என்று தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x