Last Updated : 03 Feb, 2015 02:36 PM

 

Published : 03 Feb 2015 02:36 PM
Last Updated : 03 Feb 2015 02:36 PM

ஸ்கர்விக்கு மருந்து கண்ட ஜேம்ஸ் குக்

அறிவியல் ஆராய்ச்சியுடன் டெர்ரா ஆஸ்திரலிஸ் என்ற புதிய கண்டத்தையும் கண்டறிவதற்கு அனுப்பப்பட்ட ஜேம்ஸ் குக், நியூஸிலாந்தைச் சுற்றிவிட்டு இங்கிலாந்து திரும்பியிருந்தார். அந்தப் பயணத்தில் கிழக்கு ஆஸ்திரேலியக் கடற்கரையை அவர் வரைபடமாக்கியிருந்தார்.

ஆனால், டெர்ரா ஆஸ்திரலிஸ் என்ற பெரிய கண்டம், அவர் சென்ற பகுதிக்கும் தெற்கே இருந்ததாக பிரிட்டிஷ் ராயல் சொசைட்டியைச் சேர்ந்த அலெக்சாண்டர் டால்ரிம்பிளும் மற்றும் பலரும் நம்பினர்.

அதையடுத்து அந்தக் கண்டத்தைத் தேட ஜேம்ஸ் குக் தலைமையில், மீண்டும் ஒரு கப்பல் பயணத்துக்கு ராயல் சொசைட்டி ஏற்பாடு செய்தது. கமாண்டர் பதவிக்கு உயர்ந்திருந்த ஜேம்ஸ் குக், 1772-ல் ரெசல்யூஷன், அட்வெஞ்சர் ஆகிய கப்பல்களுடன் புதிய பயணத்தைத் தொடங்கினார்.

புதிய தீவுகள்

இந்தப் பயணத்தின்போது ஹவாய் பகுதியில் பசிஃபிக் தீவுகளில் ஒன்றான சாண்ட்விச் என்ற குட்டித் தீவை அவர் கண்டறிந்தார். சாண்ட்விச் தீவுகள் என்று அவர் பெயரிட்டதன் காரணம், பிரெட் சாண்ட்விச் உணவு கிடையாது. அவரது பயணத்துக்கு நிதியளித்த சாண்ட்விச் பிரபுவைக் கவுரவிக்கும் வகையில்தான், இந்தப் பெயரை அவர் இட்டார்.

ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடல் வழியாக நியூஸிலாந்தையும், முன்பு சென்றிருந்த தஹிட்டியையும் ஜேம்ஸ் குக் சென்றடைந்தார். அவரைக் கவுரவிக்கும் விதமாக அப்பகுதியில் அவரது பெயரிடப்பட்ட தீவுகளையும் அவர் பார்த்தார்.

பிறகு நாடு திரும்பிய ஜேம்ஸ் குக், மூன்றாவது முறையாகவும் பசிஃபிக் தீவுகளுக்குத் தலைமை வகித்துக் கப்பல் பயணம் மேற்கொண்டார். அதனால் பசிஃபிக் தீவுவாசிகளைப் பற்றி அவருக்கு அதிகம் தெரிந்திருந்தது. பசிஃபிக் பிராந்தியத்தில் இன்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதன் காரணம், கேப்டன் ஜேம்ஸ் குக்கின் கடல் பயணங்கள்தான்.

ஸ்கர்வியை விரட்டியவர்

தனது பயணங்கள் குறித்து அவர் நிறைய எழுதியும் உள்ளார். கப்பல் பயணங்களில் ஒரு முக்கிய விஷயத்தை ஜேம்ஸ் குக் கண்டறிந்தார். அவர் மேற்கொண்டதற்கு முந்தைய நீண்ட கடற் பயணங்களில் பல கடல் பயணிகள் ஸ்கர்வி நோய் தாக்கி இறந்திருந்தார்கள். ஆனால், ஜேம்ஸ் குக்கின் முதல் பசிஃபிக் பயணம் தொடங்கி, ஒருவர்கூட அந்த நோயால் பாதிக்கப்படவில்லை. சிட்ரஸ் - புளிப்புப் பழங்களைச் சாப்பிட்டதால், ஸ்கர்வி நோய் அவர்களைத் தாக்கவில்லை.

நீண்ட நாள் கப்பலில் பயணம் செய்பவர்களுக்குப் புதிய உணவு கிடைக்காது. சேமிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவையே தொடர்ச்சியாக உண்ட கப்பல் பயணிகளை வைட்டமின் சி குறைபாடான ஸ்கர்வி தாக்கியது.

இந்த நோயை எலுமிச்சை, ஆரஞ்சுச் சாறு, வினிகர் மாவு, சாயர்கிராட் என்ற முட்டைக்கோஸ் உணவு ஆகியவற்றின் மூலம் ஜேம்ஸ் குக் சமாளித்தார். இந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட மறுத்தவர்களுக்குக் கசையடி வேறு கொடுக்கப்பட்டதாம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x