Last Updated : 03 Jan, 2015 12:28 PM

 

Published : 03 Jan 2015 12:28 PM
Last Updated : 03 Jan 2015 12:28 PM

மிதக்கும் படிக்கட்டுகள்

வீட்டை அலங்கரிப்பதில் படிக்கட்டுகளின் பங்கு முக்கியமானது. ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு அழைத்துச் செல்வதோடு மட்டுமில்லாமல் படிக்கட்டுகள் வீட்டின் தோற்றத்தை அழகாக்குவதற்கும் பயன்படுகின்றன.

கனவு இல்லத்தைக் கட்டும்போதே படிக்கட்டுகளின் வடிவமைப்பு பற்றியும் தனியாக மக்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கின்றனர். வீட்டிற்கு நவீனத் தோற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மிதக்கும் படிக்கட்டுகளைத் (Floating staircases) தேர்ந்தெடுக்கலாம். இவற்றைத் தேர்ந்தெடுப்பதற்குச் சில வழிமுறைகள்:

# மரம், கண்ணாடி, பளிங்குக் கற்கள், உலோகம் எனப் பலவிதமான பொருட்களில் மிதக்கும் படிக்கட்டுகள் செய்யப்படுகின்றன. செலவைக் குறைக்க நினைத்தால் பளிங்குக் கற்களாலான படிக்கட்டுகளைத் தவிர்த்துவிடலாம்.

# மிதக்கும் படிக்கட்டுகளின் முக்கியமான பயன்பாடு இவை வீட்டிற்குள் காற்றோட்டத்தை அதிகரிக்கும். விளக்குகள் பொருத்துகின்ற மாதிரியும் மிதக்கும் படிக்கட்டுகள் இருக்கின்றன. விளக்கு அலங்காரத்தை விரும்புபவர்கள் இந்தப் படிக்கட்டுகளைத் தேர்வு செய்யலாம். மிதக்கும் படிக்கட்டுகள் கீழே உங்களுக்குப் பிடித்த வண்ண விளக்குகளைப் பொருத்தலாம். இதனால் வீட்டின் சுவர், படிக்கட்டுகள் இரண்டும் வண்ண விளக்குகளால் மிளிரும்.

# கண்ணாடியிலான மிதக்கும் படிக்கட்டுகள் பொருத்துவதற்குக் குறைவான இடமே தேவைப்படும். அத்துடன் இந்தப் படிக்கட்டுகள் வீட்டிற்குப் பளிச் தோற்றத்தைக் கொடுக்கக்கூடியவை.

# இந்த மிதக்கும் படிக்கட்டுகளின் பிடிமானம் சுவரின் ஓரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இதுதான் படிக்கட்டுகளுக்கு மிதக்கும் விளைவை ஏற்படுத்துகின்றன. ஆனால், இந்தப் படிக்கட்டுகளைக் கட்டிடக் கலைஞரின் உதவியோடு சுவரின் தரத்தையும் உறுதியையும் பரிசோதித்த பிறகு பொருத்துவது நல்லது.

# படிக்கட்டுகளை வரவேற்பறையில் பொருத்துவதாக இருந்தால், கண்ணாடிப் பொருட்கள் போன்ற கட்டுமானப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம். கூடுமானவரை எளிமையான வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

# வளைவு படிக்கட்டுகள், நேரான படிக்கட்டுகள், சுழல் படிக்கட்டுகள் எனப் பலவிதமான வடிவமைப்புகளில் இந்த மிதக்கும் படிக்கட்டுகள் பிரபலமாக இருக்கின்றன. உங்கள் ரசனைக்கு ஏற்றபடி வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

# மிதக்கும் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பாக உணர விரும்பினால் கைப்பிடிகள் பொருத்திக்கொள்ளலாம். கைப்பிடிகள் பொருத்தவில்லையென்றால் வீட்டிற்குள் வெளிச்சமும் காற்றோட்டமும் அதிகமாக இருக்கும். வீட்டில் குழந்தைகளும் வயதானவர்களும் இருந்தால் கைப்பிடியுடனான மிதக்கும் படிக்கட்டுகளை அமைப்பது சிறந்தது. உலோகத்தினால் செய்யப்பட்ட பிடிமானம் இருக்கும் மிதக்கும் படிக்கட்டுகள் பட்ஜெட்டுக்குள் பொருந்துவதாக இருக்கும்.

# மிதக்கும் படிக்கட்டுகள் வித்தியாசமான வடிவங்களிலும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ரிப்பன், ஜியோமெட்ரிகல் வடிவங்கள் என வித்தியாசத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையிலும் கிடைக்கின்றன.

# மிதக்கும் படிக்கட்டுகளின் இருபுறமும் மெல்லிசான கம்பிகள் வைத்திருக்கும் வடிவமைப்புக்கு இப்போதைக்கு நிறைய வரவேற்பு கிடைப்பதாகக் கட்டிடக் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். உயரத்தைக் கண்டு பயப்படுபவர்கள் இந்த மிதக்கும் படிக்கட்டுகளைத் தவிர்ப்பது நல்லது.

# மரத்தினாலான தரைத்தளம் கொண்ட வீட்டில் மரத்தினாலான படிக்கட்டுகளைப் பொருத்தினால் அது வீட்டிற்குச் சுவாரஸ்யமான தோற்றத்தைக் கொடுக்கும்.

# சுவரின் நிறத்திற்கு ஏற்ற மாதிரி படிக்கட்டுகளின் நிறத்தைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம். உதாரணமாக, வெள்ளைச் சுவரில் கருப்பு நிறப் படிக்கட்டுகளை பொருத்தலாம். இது வீட்டிற்கு ஒரு ‘கான்ட்ராஸ்ட்’தோற்றத்தைக் கொடுக்கும். அப்படியில்லாவிட்டால், சுவரின் நிறத்திலேயே படிக்கட்டுகளின் நிறத்தையும் அமைக்கலாம்.

# பொதுவாக சுழல் படிக்கட்டுகளுக்குத் தனி ரசிகர்களே இருப்பார்கள். அதேபோல மிதக்கும் சுழல் படிக்கட்டுகளும் சுவாரஸ்யமாகவே இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x