Published : 03 Jan 2015 12:25 PM
Last Updated : 03 Jan 2015 12:25 PM

பெருமிதம் தந்த வீடு!

எங்களுக்குத் தோப்பிற்கு நடுவே ஏகாந்தமான, இனிமையான ஒரு மாடிவீடு கட்ட வேண்டும் என்று ஆசை. இடம் வாங்குவதிலோ கட்டிடம் கட்டத் தொடங்குவதிலோ ஒரு தடங்கலும் இல்லை. ஏனெனில் எங்களுக்கு உரிமைப்பட்ட பூர்வீக நிலத்தை விற்றுவிட்டு இடத்தை வாங்கிவிட்டோம். கட்டிடம் பாதி நிறைவடைந்துவிட்டது. அந்தச் சமயத்தில் என் கணவருக்குத் திடீரென மஞ்சள்காமாலை வந்துவிட்டது. அதைச் சரிசெய்ய மருத்துவமனைக்கும் கோயிலுக்கும் நடையாய் நடந்துகொண்டிருந்தோம். நல்லவர்களைவிடத் துரோகிகளும் சந்தர்ப்பவாதிகளும்தான் நம்மைச் சுற்றி வாழ்கின்றனர் என்பதை அந்தநேரத்தில் புரிந்துகொண்டோம்.

உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் வியாபாரத்தைக் கவனிக்க முடியவில்லை. சிலருக்கு வியாபாரத்தில் சிறிது நஷ்டம் வரும். ஆனால் எங்களின் வியாபாரத்தையே முழுமையாக முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டான், எங்களோடு உடனிருந்த ஒரு துரோகி. உடல் மெலிந்து மெல்ல தேறிய வேளையில் மனம் மிக நொந்து செய்வறியாமல் வீடு கட்டும் பணியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார் என் கணவர். ஆறுதல் சொல்ல சில சொந்தங்கள் வந்தன. நத்தை, கூட்டில் முடங்குவது போலாகிவிட்டார் என்னவர்.

எண்ணமே வீடாக…

எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில்விட்டதுபோல் நிலைமை. என் மகள் பொறியியல் கல்லூரியில் அப்போதுதான் முதல் வருடம் சேர்ந்திருந்தாள். மகனோ 6-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

என் பெண், “அம்மா, நான் படிப்பை வேணும்னா நிறுத்திட்டு வேலைக்குப் போட்டா…” என்றாள். நான் அவளைச் சமாதானப்படுத்திப் படிக்கச் சொன்னேன். சிலநாள் கண்ணீர் வடித்தேன். பின் என் மனதில் வைராக்கியம் பிறந்தது. பாதியில் நின்ற வீட்டைக் கட்டிமுடிப்பேன் என உறுதி கொண்டேன்.

ஒருபக்கம் விரக்தியில் என் கணவர். ஆனால் நான் மனம் தளரவில்லை. மேஸ்திரியை அழைத்தேன். வேலையைத் தொடங்குங்கள் என்றேன். பணம்? என் நகைகள் 35 பவுனை விற்றேன். மீதியை வங்கியில் அடமானம் வைத்தேன். மனை ஒன்றும் இருந்தது. அதை உடனே விற்க முடியாதல்லவா? அதனால்தான் நகைகளை விற்கும்படி ஆயிற்று.

இரவு, பகல் ஒவ்வொரு மணித்துளியும் வீட்டை நன்றாகக் கட்டி முடிக்க வேண்டும் என்பதிலேயே என் எண்ணம் முழுதும் இருந்தது. இரவில் தூக்கம் வராது. வேலையாட்கள் வந்தால், கலவையை வீண் பண்ணாமல் எப்படி வேலை செய்வது என்ற எண்ணமே ஓடும். பகலில் சமைக்கும் நேரம் தவிர அவர்களுடனேயே ஏதாவது யோசனை கொடுத்துக் கொண்டிருப்பேன்.

தொலைக்காட்சியில் வந்தது வீடு

கட்டுமானத்தின்போது நல்ல தரமான பொருட்கள் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். என் கணவர் எளிமையான தரத்தில் இருந்தால் போதும் என்றார். சலவைக் கல்தான் தரைக்குப் போடவேண்டும் என்பதில் தொடங்கி நான் தரத்தில் பிடிவாதமாக இருந்தேன். நம்மைவிட்டுப்போன சொந்தங்களை வீட்டைக்கட்டி வரவைப்பேன் எனச் சூளுரைத்தேன். “கல்யாணம்கூட 2 முறை செய்தாலும் செய்வார்கள். ஆனால் வீட்டை ஒருமுறைதான் கட்டுவார். அதனால் நல்லபடியாக கட்டவேண்டும்” எனச் சொல்வேன்.

வீட்டிற்கு அருகில் நடைப்பயிற்சிக்கென 8 அக்குபிரஷர் டைல்ஸ் கொண்டு ஒரு இடம் அமைத்தோம். சேலத்திலேயே வாக்கிங் போவதற்கான தனியிடத்தை உருவாக்கிய பெருமையைப் பெற்றோம். இந்த விஷயம் ஒரு தனியார்த் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. வீட்டை நல்லபடியாகக் கட்டி முடித்து, 2010-ல் குடிவந்தோம்.

சிறு துளிகளில் வீடு

சித்தாள், மேஸ்திரி எனக் கொத்து வேலை செய்பவர்கள், பெயின்டர் என தொழிலாளிகளை மட்டும் அழைத்து விருந்துவைத்துப் பரிசுகளைக் கொடுத்தோம். பிறகு அருகிலுள்ள பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கான பள்ளியில் 80 பேருக்கு திருப்தியாக உணவளித்தோம்.

அன்றைக்கு என்னுடைய மகன் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுவன். எங்களின் குடும்ப வறுமையை நீக்குவதற்கு, `சிறு துரும்பும் பல்குத்த உதவும்’ என்பதைப் போல எனக்கு உதவினான். உறவினர் ஒருவரிடம் டீத்தூள் வாங்கி விற்றேன். என் மகன் சைக்கிளில் கொண்டுபோய் டீத்தூள் மற்றும் எங்கள் தோப்பில் விளைந்த வாழைப் பழங்களை விற்றுவிட்டு வருவான். கோழிகள் வளர்த்து அண்டை அயலாரிடம் விற்று, குட்டி வியாபாரி எனப் பேரெடுத்தான். எல்லாம் சிறிது காலம்தான். பிறகு நிலைமை சரியாகிவிட்டது.

இன்றைக்கு என் மகள் பொறியியல் பட்டதாரியாகி, பெங்களூருவில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். என் மகன் 10-ம் வகுப்பு படிக்கிறான். அவனுக்குத் தனியாகக் குளிர்பதனம் செய்யப்பட்ட அறை. என் கணவர் புதிய தொழிலில் கால் பதித்திருக்கிறார்.

இப்போது என் வீடு?

இன்றும் அது காந்தம்போல் கவர்ந்திழுக்கிறது. 5 வருடங்களாகிய பின்னும் எங்கள் வீட்டைப் பார்க்கும் எவரும் “நன்றாக இருக்கிறது” என உண்மையாகச் சொல்கிறார்கள்.

அக்குபிரஷர் 8 நடைப்பயிற்சி மையம் எப்படி அமைப்பது? என யோசனை கேட்கிறார்கள். என் மகனது நண்பன் ஒருமுறைவந்து வீட்டைப் பார்த்துவிட்டு, `டேய் உங்கள் வீடு மிகவும் அழகாக உள்ளது. நான் இங்கே ஒரு நாள் தங்கிவிட்டுப் போகிறேன்’ என்று தங்கினான்.

எங்களது போர்டிகோவில் உள்ள பிரம்பு ஊஞ்சலில் அமர்ந்துதான் நான் காபி அருந்துவேன். `தி இந்து’ படிப்பேன். அப்பொழுது அங்கே வரும் பலர், “அக்காவுக்கென்ன ஜாலியாக ஊஞ்சல் ஆடுகிறார்கள்?” என்பார்கள். என் மனமோ, வீடு கட்டிமுடிக்கப்பட்ட பாட்டை நினைக்கும். முகமோ பதிலுக்குப் புன்னகை பூக்கும்.

வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பாக உங்களுக்குப் பலவிதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அதிலுள்ள சிரமங்களையும் சுவாரசியங்களையும் எங்களுக்கு எழுதுங்கள்.

மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in

கடிதத் தொடர்புக்கு:

சொந்த வீடு, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை- 600 002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x