Last Updated : 14 Jan, 2015 01:49 PM

 

Published : 14 Jan 2015 01:49 PM
Last Updated : 14 Jan 2015 01:49 PM

குறும்புக்கார எறும்பின் கதை - மலையாள நாட்டுப்புறக் கதை

எறும்புகள் குறும்புக்காரர்களா? இல்லை, இல்லவே இல்லை. அவை ஒற்றுமையுடன் வாழும் நல்லவர்கள் ஆயிற்றே. ஆனால், அவர்களிடையே குறும்பன் என்ற பெயர் கொண்ட ஒரு எறும்பும் இருந்தது. அவனுடைய கதையைச் சொல்கிறேன், கேளுங்கள்.

இயற்கை ஒவ்வொரு உயிரினங்க ளுக்கும் உரிய வாழ்க்கை முறையையும், வசிப்பிடமும் பிரித்துக் கொடுத்திருக்கிற தல்லவா? ஆமாம், எறும்புகள் எத்தனை சிறிய உயிரினங்கள்? அவற்றுக்கு புற்றுகள்தான் இருப்பிடங்கள். அவை சேர்ந்து தங்களைவிடப் பெரியதான இரையைப் பிடித்துப் புற்றுக்குள் கொண்டுவந்து சேர்க்கும். சிறியவர் களானதால் அவர்களுடைய சக்தி என்பது அவைகளுடைய ஒற்றுமையில் தான் இருக்கிறது. அது பரிபூரணமான ஒத்துழைப்பு.

ஆனால் குறும்பன் மாத்திரம் ஒத்துழைக்காது. எறும்புகள் வரிசை வரிசையாகச் செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு போகும்போது குறும்பன் மட்டும் ஏதாவது ஒரு கல்லின் மீது ஏறி சும்மா உட்கார்ந்திருக்கும். அதுக்கு எப்போதுமே யோசனைதான். மற்றவர்கள் புற்றுக்குள் ஏதாவது நல்ல தீனியைக் கொண்டுவந்தால் குறும்பன் கொஞ்சம் உதவி செய்யும். எதற்கு? அதைத் தின்பதற்குத்தான். தின்று முடித்ததும் மறுபடியும் யோசனையில் ஆழ்ந்து விடும். நாட்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தன.

குறும்பனை மற்றவர்கள் கண்டு கொள்வதில்லை. மற்றவர்களின் உழைப்பினால் தன் வயிறு வளர்க்கிற ஒரு அற்பஜீவி என்று மற்றவர்கள் நினைத்தார்கள். குறும்பன் ஒருபோதும் வரிசையில் நடப்பதில்லை. மற்ற எறும்புகள் ஒருவருக்கொருவர் அவர்களுடைய சங்கேதமொழியில் சொல்லிக் கொண்டார்கள்,

“ வெட்கம் கெட்டவன்..”

தெரியுமல்லவா? எறும்புகளின் மொழி ஒருவகையான சங்கேத மொழி. ஒவ் வொரு விஷயத்துக்கும் தனித்தனியான சங்கேத வார்த்தைகளை அவர்களுக்குள் பரிமாறிக்கொள்வது வழக்கம். குறும்ப னால் அவதிக்குள்ளான மற்றவர்கள் அவனைப் புற்றிலிருந்து வெளியே தள்ளி விட்டார்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய கல்லை உருட்டிக் கொண்டுவந்து புற்றின் வாசலை அடைத்து விட்டார்கள். தனியாக வெளியே நின்று கொண்டிருந்த குறும்பன் ஒரு கர்ஜனையைக் கேட்டு நடுங்கினான்.

ஒற்றை யானை. அவன் காட்டினை மிதித்துக் கொண்டு போகிறான். குறும்பனின் மனசில் ஒரு ஆசை. தான் ஒரு யானையாக இருந்தால் எப்படி இருக்கும்? தன்னுடைய சக்தியை இந்த கர்வம் பிடித்த உயிர்களிடம் காண்பிக்கணும்.எறும்புக்கூட்டம் எப்பவாச்சும் புற்றை விட்டு வெளியில் வருமில்லையா? அப்போது ஒரே மிதி. ஒரு தேய்ப்பு. ஆயிரம் எறும்புகளாவது சட்னியாக வேண்டும்.

குறும்பனின் மனசு பொங்கியது. யானையாக வேண்டுமே! அவனுடைய வாழ்க்கையில் ஒரு உறுதியான தீர்மானம் எடுத்தான். தீனி கிடைக்காதல்லவா? அதனால் பட்டினியுடன் கடும் தவம் செய்ய வேண்டும். அப்படி இயற்கையன்னையைச் சந்தோஷப் படுத்தி வரம் கேட்க வேண்டும்.

குறும்பன் தவமிருந்தான். இரவும் பகலும் இருந்தான். மழையிலும் வெயிலி லும் பனியிலும் இருந்தான். தவமான தவம். குறும்பன் மெலிந்து துரும்பாகி விட்டான். அவனுடைய பக்தியைக் கண்டு மனமிறங்கிய இயற்கையன்னை அங்கே தோன்றினாள்.

குறும்பன் ஒரே ஒரு வரம் தான் கேட்டான். ஒரு யானையாக மாற வேண்டும். இயற்கையன்னை சிரித்தாள். பௌர்ணமி நிலவைப் போல, பனியைப் போல அருளும் வழங்கினாள். குறும்பன் யானையாகிவிட்டான். அவன் பிளிறினான். காடு சிலிர்த்தது. தன்னுடைய கூட்டாளிகள் குடியிருக்கிற பாறைகளுக்கு அருகில் சென்று கர்ஜனை செய்தான். பாறையினைப் போல அவனுடைய மொழி இறுகிப் போயிருந்தது. ஒரே ஒரு எறும்பு மட்டுமே வெளியில் அலைந்து திரிந்துகொண்டிருந்தது. அதை மிதித்துத் தேய்த்துக் கொல்ல முயன்றான். உற்றுக் கவனித்த அந்த எறும்பு புற்றுக்குள் இறங்கி மறைந்தது.

குறும்பன் யோசித்தது. ஒரு பிரச்சினை இருக்கிறதே. யானையால் எறும்பின் புற்றுக்குள் இறங்க முடியாது. இறங்கினால் தானே எறும்புக் கூட்டத்துக்குத் தன்னுடைய சக்தியைப் பற்றித் தெரியும். அதற்கு என்ன செய்ய? ம்... அதற்கும் வழி உண்டு. என்ன வழி? தவம்தான்.

மறுபடியும் கடுமையான தவம். இயற்கையன்னையின் நிம்மதி போச்சு. மறுபடியும் தோன்றினாள். குறும்பன் சொன்னான்.

“அன்னையே.. யானையாக இருக்கும் போதே எனக்கு எறும்புப் புற்றுக்குள் நுழையவும் வேணும்..”

இயற்கையன்னையின் கண்கள் சிவந்தன. சேட்டைக்கார இந்தச் சிறிய எறும்பு தன்னுடைய தவறை உணர்ந்து கொள்ள என்ன வழி? அன்னை சிரித்தாள். மழைக்கால இடி மின்னலைப் போல. பின்பு அன்னை சொன்னாள்.

“குறும்பா.. ஒவ்வொரு உயிருக்கும் அதற்குரிய தகுதியும் வாழ்க்கை முறைகளும் இருக்கிறது. ஆனால் உனக்கு அது புரியவில்லை. உனக்கு ஒரே சமயத்தில் யானையாகவும் எறும்பாகவும் ஆக வேண்டும், அதுதான் திருப்தி, இல்லையா? அது பேராசை. பேராசைக்காரனுக்கு ஒருபோதும் திருப்தி வராது… நீ இன்று முதல் மணலில் குழி பறித்து குடியிருக்கிற குழிநரி ஆவாய்!..”

அன்னை ஒரு சாரல் மழையின் துல்லியமான சத்தத்துடன் மறுபடியும் சிரித்தாள், பின்பு மறைந்துவிட்டாள். குறும்பன் மணலில் வட்டம் சுற்றிச் சுற்றிக் கீழே இறங்கினான். மணலுக்குள் குடியிருந்தான். பாவம் எறும்புகளையே இரையாகப் பிடிப்பதற்கு சபிக்கப்பட்ட ஒரு குழிநரியாக வாழ்ந்தான்.

குறும்பன் என்ற எறும்புதான் இப்போது நாம் பார்க்கிற குழிநரி!

மலையாளத்தில் – வைசாகன்
ஓவியம்: ராஜே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x