Published : 13 Dec 2014 01:43 PM
Last Updated : 13 Dec 2014 01:43 PM

திரை விமர்சனம்: போபால் - ஏ பிரேயர் ஃபார் ரெய்ன்

உலகின் மிக மோசமான தொழிற் சாலை பேரழிவான போபால் பேரழிவின் முப்பதாவது ஆண்டு இது. 1984-ல் யுனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதன் பின்னணியைப் பேசுகிறது ‘போபால் - ஏ பிரேயர் ஃபார் ரெய்ன்’ திரைப்படம். போபால் பேரழிவின் முப்பதாவது ஆண்டை நினைவுப்படுத்தும் விதமாக இந்தப்படம் வெளியாகி இருக்கிறது.

பல நிஜ கதாபாத்திரங்களுடன் சில நிழல் கதாபாத்திரங்களையும் சேர்த்து போபால் பேரழிவைப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் ரவிக்குமார். திலீப்(ராஜேஷ் யாதவ்) என்ற ஏழை ரிக் ஷா தொழிலாளி தன் மனைவி லீலா(தனிஷ்தா சாட்டர்ஜி), குழந்தை மற்றும் தங்கையுடன் யுனியன் கார்பைடு ஆலைக்கு அருகில் இருக்கும் சேரியில் வாழ்ந்துவருகிறார். கார்பைடு ஆலைக்குள் நடக்கும் விபத்து காரணமாக அங்கே வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பணியாளர் ஒருவர் இறந்துவிட, அந்த வேலை திலீப்புக்கு கிடைக்கிறது. ஆனால், அந்த வேலைக்கான எந்தத் தகுதியும் திலீப்புக்கு கிடையாது. இப்படி திலீப் மாதிரி பல அப்பாவிகளை வேலைக்குச் சேர்க்கிறார் ஆலையின் பாதுகாப்பு மேலாளர்.

ஆலையில் நடந்த விபத்தைப் பற்றி விசாரிக்கும் உள்ளூர் பத்திரிகையாளர் மோத்வானிக்கு (கால் பென்) கார்பைடு ஆலையில் நடக்கும் பல முறைகேடுகள் தெரியவருகின்றன. ஒவ்வொரு முறைகேடுகளையும் தொடர்ந்து அவர் தன் பத்திரிகையில் எழுதிவருகிறார். அங்கிருக்கும் உள்ளூர் மருத்துவமனையின் மருத்துவராக சந்திரா(மனோஜ் ஜோஷி) இருக்கிறார். ஆலையில் வேலை பார்ப்பவர்கள் ஏன் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்று டாக்டர் சந்திராவிடம் தொடர்ந்து கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கிறார் மோத்வானி.

ஆலையைப் பார்வையிட வரும் வாரன் ஆண்டர்சன் (மார்டின் ஷீன்) போபால் யுனியன் கார்பைடு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருப்பதை மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கிறார். ஆலை தொடர்ந்து இயங்குவதற்காக அரசியல்வாதிகள் சிலரையும் சரிகட்டு கிறார். போபாலுக்கு வரும் அமெரிக்க பத்திரிகையாளர் எவா காஸ்கனிடம் (மிஷ்சா பார்டன்) அங்கிருக்கும் பிரச் சினைகளைக் கூறி ஆண்டர்சனை பேட்டி எடுத்துத்தருமாறு கேட்கிறார் மோத்வானி. அத்துடன், இந்த யுனியன் கார்பைடு ஆலையில் நடக்கும் முறை கேடுகளைப் பற்றி சர்வதேச ஊடகத்தில் எழுதுமாறும் சொல்கிறார். ஆனால், பேட்டியை முடித்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் தன் நாட்டுக்கு எவா சென்றுவிடுகிறார்.

இந்நிலையில் ஆலையில் கடை பிடிக்கவேண்டிய எந்த பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்காமல் பாதுகாப்பு மேலாளர் தட்டிக்கழித்து வருகிறார். குறிப்பிட்ட ஒரு விஷவாயு எந்தவித பராமரிப்பும் இல்லாமல் ஆலையில் ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டிருப்பதை திலீப் கண்டுபிடிக்கிறார். இந்த உண்மையை மோத்வானியிடம் சொல்கிறார் திலீப். ஒருவேளை ஆலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டால் என்ன ஆகும் என்று மோத்வானி கண்டுபிடித்து மக்களை எச்சரிப்பதற்குள் ஆலையில் விபத்து ஏற்பட்டுவிடுகிறது. பல ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களை பலிவாங்கிவிடுகிறது.

திரைக்கதை திலீப் கதாபாத்திரத்தை சுற்றியே பயணிப்பதால் படத்துடன் ஒன்றிவிட முடிகிறது. ஆனால், திரைக் கதையில் ஆலைவிபத்து ஏற்படுவதற்கு முன்னர் செலுத்தப்பட்டிருக்கும் கவனம், ஆலைவிபத்து ஏற்பட்டப் பிறகு காட்டப்படவில்லை. வாரன் ஆண்டர்சனாக நடித்திருக்கும் மார்டின் ஷீன் ஒரு சில காட்சிகளில்தான் தலைக்காட்டுகிறார். படத்தில் திலீப் கதாபாத்திரத்தில் வரும் ராஜேஷ் யாதவின் நடிப்பு மனதில் நிற்கிறது. ஒரு சாதாரண ஏழைக்குடிமகன் தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரே காரணத்துக்காக ஒரு பன்னாட்டு நிறுவனத்தை எப்படி வரமாகக் கொண்டாடுகிறான் என்பதை படத் தில் வரும் காட்சிகள் வலியுடன் பதிவு செய்கின்றன.

கால் பென்னின் கதாபாத்திரத்தில் இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் முன்பகுதிக் காட்சிகள் மனதை உலுக்குகின்றன. ஆலைப்பாதுகாப்பில் காட்டப்படும் சிறுசிறு அலட்சியங்கள் எப்படி பெரிய விபத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற திகிலை படத்தின் முன்பகுதி காட்சிகள் ஏற்படுத்துகின்றன.ஆனால், க்ளைமேக்ஸ் காட்சிகள் முழுமையானதாக இல்லை. படம் முழுமை அடையாமலே முடிந்துவிட்ட உணர்வை ஏற்படுத்துகிறது.

வாரன் ஆண்டர்சன் மீது எந்தத் தவறும் இல்லாத மாதிரி ஒரு பிரமையைப் படம் ஏற்படுத்துகிறது. போபால் பேரழிவுக்கு காரணமாக இருந்த இந்திய அரசியல்வாதிகளைப் பற்றிய சுவடும் தெளிவாக இல்லை. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் யுனியன் கார்பைடு நிறுவனத்திடம் இருந்து எந்த நீதியும் கிடைக்காமல், விபத்தின் தாக்கத்தால் இன்றளவும் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் போபால் மக்களுக்கு இந்தப்படமும் முழுமையான நீதிவழங்கிவிடவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால், ஒரு தலைமுறை இடை வெளிக்குப்பிறகு போபால் பேரழிவைப் பதிவுசெய்த இயக்குநர் ரவிக்குமாரின் முயற்சியை பாராட்டலாம். இதுபோன்ற பதிவுகள்கூட இல்லையென்றால் நாமெல்லாம் போபால் மக்களின் துயரத்தை ஒரேயடியாக மறந்து விடுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x