Last Updated : 10 Nov, 2014 10:41 AM

 

Published : 10 Nov 2014 10:41 AM
Last Updated : 10 Nov 2014 10:41 AM

தலைவர் ஆவது எப்படி?

குறிக்கோள் உள்ளவர்தான் தலைவர். குறிக்கோளை அடைய தகுதிகளை இடையறாது வளர்த்துக் கொண்டு பாடுபடுபவரே தலைவர். எந்த அமைப்பில் அவர் பணிபுரிகிறாரோ அந்த அமைப்பின் முன்னேற்றத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்பவரே தலைவர்.

கூட்டுச் செயல்பாடு

அவர் குழுவாக இயங்குவார். காலம் மாறிக் கொண்டேயிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, தன் துறையில் ஏற்படும் நவீனமான மாற்றங்களைத் தெரிந்து கொண்டு செயல்படுவார்.

தன்னுடைய குழுவில் அனுபவம் வாய்ந்த முதியோர்களும் வேகத் துடிப்பு உள்ள இளைஞர்களும் இருக்குமாறு பார்த்துக்கொள்வார். ஒரு நிறுவனத்திற்கு இருவருமே தேவை. எல்லோருடைய திறமைகளையும் அமைப்பின் முன்னேற்றத்திற்குத் தலைவர் பயன்படுத்திக் கொள்வார்.

திறமையை அங்கீரித்தல்

ஒவ்வொருவரது திறமையையும் சரியாக மதிப்பீடு செய்யத் தெரிந்தவராகவும் அவரது திறமைக்கேற்ற பணியை அவரிடம் கொடுப்பவராகவும் இருப்பார்.குழுவில் உள்ள மற்றவர்களது திறமையை அங்கீகரிக்கத் தெரிந்தவராக இருப்பார்.நிறுவனத்தின் சாதனைகளுக்குக் காரணமாகத் தன்னையும் தோல்விகளுக்குக் காரணமாக மற்றவர்களையும் முன்னிறுத்த மாட்டார். மற்றவர்களின் சாதனையைப் பெருந்தன்மையுடன் பாராட்டுபவராக இருப்பார். தன்னுடைய முகத்திற்கு முன் முகஸ்துதி செய்பவர் முதுகுக்குப் பின் அவதூறு செய்பவராக இருப்பார் என்பதைப் புரிந்து வைத்திருப்பார்.

இணக்கமான உறவு

மற்றவர்களுடன் சுமுகமான உறவு வைத்திருப்பார். கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் மாணவர்களைப் பார்த்து சிரிக்கவே மாட்டார். சிரித்தால் மாணவர்கள் மதிக்க மாட்டார்கள் என்று அவராகக் கற்பனை செய்துகொள்வார். இறுதியில் பிரிவுபசாரக் கூட்டத்தில் மாணவர்கள் அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தார்கள். நீங்கள் சிரித்தே பார்த்ததில்லை, சார், ஒரே ஒரு முறை சிரிங்க சார்.. நாங்க பாக்கணும் என்று கேட்டுவிட்டார்கள் !

முடிவும் முயற்சியும்

யாருடன் கலந்துகொள்ள வேண்டுமோ அவர்களுடன் கலந்துகொண்டு முடிவெடுக்கும் திறன் ஒரு தலைவருக்கு முக்கியமானது. அவர் முடிவெடுக்கும்போது, அதில் வறட்டுத்தனம் இருக்காது.நெகிழ்வுத்தன்மையுடன் பரிசீலித்து சரியான முடிவை எடுப்பார்.

மற்றவர்கள் பேசும்போது அவசரப்பட்டுக் குறுக்கிடாமல் கவனமாகக் காது கொடுத்துக் கேட்பார். தனது கருத்தை இறுதியாகக் கூறுவார். இப்படி மனம் விட்டு விவாதித்து எடுத்த முடிவில் உறுதியாக நிற்பார். அதனால் ஏற்படும் சோதனைகளைத் துணிவுடன் சந்திப்பார்.

பின்னர் ஏற்படும் அனுபவ வெளிச்சத்தில், முடிவில் ஒரு மாற்றம் தேவை எனக் கருதினால் மறுபடியும் மற்றவர்களுடன் கலந்துகொண்டு முடிவை மாற்றுவார். முடிவை மாற்றவே கூடாது என்று பிடிவாதமாக இருக்க மாட்டார். பிடிவாதம் வேறு, உறுதி வேறு என்பதைப் புரிந்து வைத்திருப்பார்.

ஒரு தலைவருக்கு விடாமுயற்சி அவசியம் தேவை. வெற்றி பெறுவதைவிட விடாமுயற்சி முக்கியமானது. உழைப்புக்கு அஞ்சாதவராக இருப்பார்.

பலம், பலவீனம்

தன்னுடைய பலம் எது, பலவீனம் எது என்ற கணிப்பு அவருக்கு இருக்கும். அவருடைய சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றிலும் முரண்பாடு இருக்காது. நேர்மை, நாணயம் இரண்டையும் எந்தக் காலத்திலும் கைவிடாத உறுதி அவரிடம் இருக்கும். இப்படிப்பட்ட குணங்கள் இருந்தால்தான் தன்னால் வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்ற முடியும் என்பதையும் எந்த நிறுவனத்திற்கும் வெளிப்படைத் தன்மை மிக முக்கியம் என்பதையும் அவர் அறிவார்.

தவறு செய்யாதவர் யார்?

எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் முன்னேற முடியாது. தவறு செய்துவிடுவோமோ என்று பயந்துகொண்டு சிலர் எதைச் செய்யவும் பயப்படுவார்கள். தவறே செய்யாதவர்கள் இரண்டு பேர்தான், `ஒருவர் இன்னும் பிறக்கவே இல்லை. இன்னொருவர் எந்த வேலையுமே செய்யாதவர், என்பார்கள்.

நேர நிர்வாகம்

தான் பேச வேண்டிய கூட்டமானாலும் கேட்க வேண்டிய கூட்டமானாலும் உரிய நேரத்திற்குக் கூட்ட அரங்கில் இருப்பதும் ஒரு தலைமைப் பண்புதான். நேரத்தின் அருமை தெரியாதவர்கள் மற்ற பலருடைய நேரத்தையும் வீணடிப்பார்கள். இரவு படுக்கப்போகு முன் அடுத்த நாளுக்கான திட்டத்தை ஒரு முறை நினைவுபடுத்திப் பார்த்துக்கொள்வது சிறப்பானது.

பேச்சும் எழுத்தும்

பேச்சாற்றல் என்றால் அடுக்கு மொழியில் ஆவேசமாகப் பேச வேண்டும் என்பதல்ல. சொல்ல வேண்டிய விஷயங்களை இயல்பாகவும் கோவையாகவும் நடைமுறை உதாரணங்களுடன் சிறிது நகைச்சுவை கலந்து பேசத் தெரிந்தாலே போதுமானது.அதேபோல, உறுப்பினர்களுக்கு அல்லது சக நண்பர்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்க அவ்வப்போது நிறுவனம் நடத்தும் இதழில் அல்லது வெளியிடும் அறிக்கையில் எழுதுவதும் முக்கியம்.

பேச்சாற்றல், எழுத்தாற்றல் இரண்டுமே பயிற்சியில் கிடைப்பவைதான்.என்னாலெல்லாம் பேச முடியாது, எழுத முடியாது என்று யாருமே தாழ்வு மனப்பான்மையுடன் ஒதுங்க வேண்டியதில்லை. ஒரு தலைவருக்குப் படைப்பாற்றலும் இருந்து விட்டால், அவரது அனுபவங்கள் அடுத்த தலைமுறையினருக்கு சுவாரஸ்யமான கதைகளாகவோ, கவிதைகளாகவோகூடக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

அடுத்த தலைமுறை

எந்தத் தலைவரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழிகாட்டிய பிறகு பொறுப்பிலிருந்து விடுபட வேண்டிய கட்டம் வரும். இதை முன்கூட்டியே எதிர்பார்த்து, தான் விட்டுச் சென்ற பணியை மேலும் தொடர அடுத்த தலைமுறையினரை அவர் தயார் செய்திருக்க வேண்டும். ஜனநாயக ரீதியிலான செயல்பாடு, மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்குவது, இளைய தலைமுறையினருக்கு பயிற்சியளிப்பது ஆகிய அனைத்துமே தலைமைப் பண்புகளில் சேர்ந்தவைதான்.



கட்டுரையாளர் ‘புதிய ஆசிரியன்’ இதழின் ஆசிரியர்
தொடர்புக்கு aasiriyan11@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x