Published : 29 Jun 2019 09:46 am

Updated : 29 Jun 2019 09:46 am

 

Published : 29 Jun 2019 09:46 AM
Last Updated : 29 Jun 2019 09:46 AM

சிகிச்சை டைரி 11: இரு மருத்துவர்களின் ஸ்கேன் பாலிசி!

11

காட்சி 1

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பேருந்துக்காக என் மனைவி காத்திருந்தார். பேருந்துகள் தொடர்ந்து கூட்டமாக வந்ததால், அதில் ஏற முடியாமல் தவித்தார். கூட்டம் சற்றுக் குறைவாக இருந்த பேருந்தில் ஏற முற்பட்டார். ஆனால், பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே ஓட்டுநர் பேருந்தை எடுத்துவிட்டதில், கால் முட்டியில் ‘அதிர்வு’ போன்று ஏற்பட்டுவிட்டது.

ஒரு நாள் கழித்து கால் முட்டிப் பகுதியில் அவருக்கு வலி ஏற்படத் தொடங்கிவிட்டது. சென்னை வேளச்சேரி பகுதியிலிருந்த ஒரு எலும்பு சிகிச்சை நிபுணரைச் சந்தித்தேன். நடந்த விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவர் வேகவேகமாக ‘லெட்டர் பே’டை எடுத்து எழுத ஆரம்பித்துவிட்டார். பேசி முடித்தவுடன், அந்தப் பரிந்துரையை மருத்துவர் நீட்டினார்.

“போய் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத் துட்டு வந்துடுங்க” என்றார்.

“கண்டிப்பாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கணுமா சார்”

“காலுக்குள்ள என்ன பிரச்சினை ஆகியிருக்குன்ணு நமக்குத் தெரியாது. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாதான் தெரியும். நான் சொல்ற இடத்துல எடுத்தா 7 ஆயிரம் ரூபாய்தான். மற்ற இடங்களில் எடுத்தா 10 ஆயிரம் ரூபாய்வரை வாங்கிடுவாங்க” என்று தி.நகர் பகுதியில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டருக்கு எழுதிக் கொடுத்தார்.

ஒரு நாள் கழித்து அந்த ஸ்கேன் சென்டருக்குச் சென்று, 4 மணி நேரம் காத்திருந்து, பணத்தைக் கட்டி

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தோம். மறு நாள் ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தேன். ஸ்கேனையும் அதன் ரிப்போர்ட்டையும் எடுத்து மருத்துவரிடம் நீட்டினேன். ஸ்கேனை எடுத்து 5 விநாடிகள்தான் பார்த்திருப்பார். ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்துப் படிக்கவே இல்லை.

உடனே மருந்து சீட்டில் மருந்தை எழுத ஆரம்பித்துவிட்டார். “முட்டியில் அதிர்வு ஏற்பட்டதால் ஸ்ட்ரெயின் ஆயிடுச்சு. இந்த மருந்தைச் சாப்பிடுங்க. வலி நிவாரணி தைலத்தைப் பூசிக்கோங்க. பக்கத்துல பிசியோதெரபிஸ்ட் இருந்தா, முட்டில ஒரு வாரத்துக்கு கரண்ட் கொடுங்க, சரியாயிடும்” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துகளைச் சாப்பிடத் தொடங்கினார் என் மனைவி. வீட்டு அருகே இருந்த ஒரு பிசியோதெரபிஸ்டிடம் சிகிச்சை செய்தும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. மாறாக, மூட்டில் வலி கூடியிருந்தது. முட்டியை மடக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

ஒரு வாரம் பிசியோதெரபி சென்றிருந்த நிலையில், அந்த பிசியோதெரபிஸ்ட் என்னை அழைத்துப் பேசினார்.

“சார், முட்டிக்கு கரண்ட் கொடுக்கிறது எல்லாம் வேலைக்கு ஆகாது. நான் சொல்றபடி கேட்டுக்கோங்க. ஒரு ‘நீ கேப்’ (மூட்டுக்கான தொப்பி) வாங்கிப் போட்டுக்கோங்க. வலி குறைஞ்சுடும்” என்று அறிவுரை சொன்னார். அதன் படியே செய்தோம். பிறகுதான் மூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்தது.

ஒரு மாதம் கழித்து அந்த பிசியோதெரபிஸ்ட்டைப் பார்த்தபோது, “எடுத்தவுடனே மருத்துவரிடம் போய் நின்னு ஸ்கேன் எடுத்துப் பார்க்காதீங்க. எங்கள மாதிரி பிசியோதெரபிஸ்ட்டைப் பார்த்து வலியின் தன்மையைத் தெரிந்துகொண்டு பிறகு மருத்துவரை அணுகலாம். சாதாரண வலியாக இருந்தால் பிசியோதெரபியிலேயே சரி செஞ்சிடலாம்” என்று அறிவுரை சொன்னார்.

என் மனைவிக்கு ஏற்பட்டது சாதராண ஸ்டிரெயின்தான். பிசியோதெரபிஸ்ட் சொன்னதுபோல் சாதாரணமாகச் சரிசெய்ய வேண்டியதை, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்து பிறகு சரிசெய்ய வேண்டியதாகிவிட்டது.

காட்சி 2

எனக்கு 4 ஆண்டுகளாகவே இடுப்பு வலி இருந்தது. மிகப் பெரிய தொந்தரவாக வலி இருந்ததில்லை. ஆனால், உட்காரும்போது இடுப்புப் பகுதியில் வலிப்பது போன்ற உணர்வு இருக்கும். எலும்பு சிகிச்சை நிபுணரைப் பார்க்கலாம் என்று பலமுறை தோன்றினாலும், மனைவி மூலம் ஏற்பட்ட அனுபவத்தால் மருத்துவரைச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தேன்.

இருந்தாலும், பிரச்சினை தீவிரமாகி விடக் கூடாது என்பதற்காக, இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு எலும்பு சிகிச்சை நிபுணரைச் சந்தித்தேன்.

தீர ஆராய்ந்து, ஆன்லைனில் மருத்துவரைப் பற்றி அறிந்து கொண்டுதான் அவரைப் பார்க்கப் போனேன். மருத்துவரைப் பற்றிப் பலரும் நல்லவிதமாக எழுதியிருந்ததால் தைரியமாகப் பார்க்கப் போனேன்.

முதலில் என்னுடைய பிரச்சினையைச் சொல்லும்போது காது கொடுத்து முழுமையாகக் கேட்டுக்கொண்டார் மருத்துவர். அப்போதே அவர் மீது நம்பிக்கை துளிர்த்தது. என்னுடைய தினசரி வேலை, உட்கார்ந்திருக்கும் நேரம், வண்டியில் பயணிக்கும் நேரம் போன்றவற்றைக் கேட்டுக்கொண்ட மருத்துவர், சில பரிசோதனை களையும் செய்துபார்த்தார்.

“பெரிய பிரச்சினை ஒன்னும் இல்ல. நீங்க உட்கார்ந்திருக்கிற சேரில்தான் பிரச்சினைன்னு தோணுது. சேரை மாத்தி உட்கார்ந்து பாருங்க. அதுவா சரியாயிடும்” என்று சத்து மாத்திரை மட்டும் எழுதிக் கொடுத்தார்.

எக்ஸ்ரேவோ ஸ்கேனைப் பற்றியோ அந்த மருத்துவர் எதுவும் பேசவில்லை. எப்படியும் ஸ்கேன் எடுத்துப் பார்க்கச் சொல்வார் என்ற எண்ணத்தில் சென்ற எனக்கு அது ஏமாற்றமாகிப்போனது. எதற்கும் கேட்டுவிடுவோம் என்று, “சார், சேரை மாத்தி உட்கார்ந்தும் வலி குறையலேன்னா என்ன பண்றது?” என்று கேட்டேன்.

“எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து முடிவு செஞ்சுக்கலாம்” என்று சாதாரணமாகச் சொன்னார்.

“எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேணாமா சார்?” என்று இருப்புக்கொள்ளாமல் மருத்துவரிடம் கேட்டுவிட்டேன்.

“எதுக்கு எம்.ஆர்.ஐ.? உண்மையாகவே தேவைப்பட்டால் எம்.ஆர்.ஐ. எடுத்துப் பார்க்கலாம். உங்க பிரச்சினைக்கு எக்ஸ்ரே போதும்” என்று திரும்பவும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும், அவரைப் பார்த்துத் தலையாட்டியபடி வெளியே வந்துவிட்டேன்.

வெளியே வந்தவுடன் என் மனைவிக்கு சிகிச்சை அளித்த வேளச்சேரி மருத்துவரும் இப்போது பார்த்த மருத்துவரின் சிகிச்சை முறையும் எனக்கு நினைவுக்கு வந்தன. ஒரே பிரிவில் சிறப்பு மருத்துவர்கள்தான். ஆனால், ஒவ்வொருவரும் அணுகும் விதம் மாறுபட்டிருப்பதை எண்ணி வியந்தேன். அதோடு, ஒரு மருத்துவரைக் காணச் செல்லும் முன்பு அவரைப் பற்றி ஆராய்ந்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தையும் இது எனக்குள் ஆழமாக விதைத்தது.

கட்டுரையாளர்,

தொடர்புக்கு: karthikeyan.di@thehindutamil.co.in  


சிகிச்சை டைரிமருத்துவர்கள்ஸ்கேன் பாலிசிமருந்து சீட்டு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author