Last Updated : 29 Aug, 2017 10:49 AM

 

Published : 29 Aug 2017 10:49 AM
Last Updated : 29 Aug 2017 10:49 AM

ஆசிரியராகும் அக்காக்கள்!

கிராமத்தில் ஆறாம் வகுப்பை எட்டும் மாணவ-மாணவிகள், அதற்குப் பிறகு படிப்பில் ஒரு தள்ளாட்டத்தை உணர்வார்கள். அதற்குப் பிறகுதான் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடம் படிக்க வேண்டிய சூழல் அதிகமாகிறது. அதை மட்டும் சமாளித்துவிட்டால் அவர்களால் எளிதாக உயர்கல்வியைத் தொடர முடியும். இந்த இடத்தில்தான் வித்யாரம்பம் கைகொடுக்கிறது.

கற்றலை விளையாட்டாக அணுகும் முறையை அறிமுகப்படுத்திக் குழந்தைகளுக்குப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது இவ்வமைப்பு. இதற்காகப் பத்தாம் வகுப்பு, அதற்குமேல் தேறிய பெண்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தனர். அவர்கள்தான் ஆசிரியைகள். குழந்தைகள் அவர்களை ‘அக்கா’ என்று அழைக்கிறார்கள். அவர்களுடன் பழகும் முறை, கற்பிக்கும் முறை எல்லாம் குழந்தைகளிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், காஞ்சிபுரம், திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், சீர்காழி, திண்டுக்கல், மதுரை, சங்கரன்கோவில், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 இடங்களில் வித்யாரம்பம் செயல்படுகிறது.

இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் வி.ரங்கநாதன். தற்போது வித்யாரம்பம் அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராகவும் ரோட்டரி வித்யாரம்பம் பள்ளியின் தாளாளராகவும் இருப்பவர் பிரேமா வீரராகவன். வித்யாரம்பம் அறக்கட்டளை ஆரம்பித்த நாள்முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய வழிகாட்டுதலின் மூலமாகவே வித்யாரம்பத்தின் பாடத்திட்டங்கள் செயல்பட்டுவருகின்றன.

“கல்விக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட பருவத்தில் இருக்கும் இளம் பெண்களைக் கொண்டும் திருமணமான படித்த பெண்களைக் கொண்டும் சமுதாயத்தில் மாற்றத்தை நிகழ்த்த வித்யாரம்பம் முயல்கிறது” என்கிறார் வித்யாரம்பத்தின் நிர்வாக மேலாளரான விஜி சீனிவாசன்.

இருபது வயதில் வித்யாரம்பத்தில் அக்காவாகச் சேர்ந்தவர் கார்த்திகா, இப்போது திட்ட மேலாளராகவும் ரோட்டரி வித்யாரம்ப பள்ளியின் தலைமையாசிரியராகவும் இருக்கிறார்.

அறக்கட்டளைத் திட்டங்கள்

“எங்களின் இந்த 15 ஆண்டு காலக் கல்விப் பணியில் 99 சதவீதம் பேர் 5 முதல் 11 வயது வரம்பைச் சேர்ந்த குழந்தைகள். அவர்கள் இன்றுவரை எந்தவித இடைநிற்றலும் இல்லாமல் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

6,800 பெண்கள் இதுவரை இந்தக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். கிராமக் குழந்தைகள் ஏறக்குறைய 9 லட்சம் பேர் எங்களின் கல்விப் பணியின் மூலமாகப் பயனடைந்துள்ளனர். 780 கற்பித்தல் உபகரணங்களை எங்களின் கல்விப் பணியில் பயன்படுத்தி வருகிறோம். ஆங்கிலத்தையும் கணிதத்தையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியாகச் சொல்லிக்கொடுத்து அவர்களின் கற்றலில் உள்ள அடிப்படைக் குறைகளைப் போக்கிவருகிறோம்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கென நாகப்பட்டினத்தில் ஒரு ஆரம்பப் பள்ளி தொடங்கி ஆங்கில மொழி வாயிலாக இலவசக் கல்வி அளித்துவருகிறோம்” என்கிறார் விஜி சீனிவாசன்.

நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டை ரோட்டரி சென்ட்ரல் வித்யாரம்பத்தின் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியானது மாவட்ட ஆட்சியரின் ஆதரவுடனும் சென்னை ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் தொடங்கப்பட்டது. கடந்த 2008 முதல் 9 ஆண்டுகளாக வித்யாரம்பம் அறக்கட்டளைக் கல்வி தொண்டாற்றிவருகிறது. இப்பள்ளியில் தற்போது 287 மாணவர்கள் பயின்று வருகின்றனர். நல்ல நூலகமும் கற்றலுக்கு உதவும் கருவிகளும் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களைச் செயல்முறையின் மூலமாகக் கற்பிக்கும் சிறப்பம்சங்களையும் உள்ளடக்கியது இப்பள்ளி.

இயற்கையோடு இயைந்த குழந்தைகள்

“இயற்கை வளங்களைக் காக்கும் முயற்சியை எங்களுடைய பள்ளிக் குழந்தைகளிடம் இருந்து தொடங்கி இருக்கிறோம். எங்களுடைய மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களின் பிறந்த நாள் அன்று ஒவ்வொரு குழந்தையும் ஒரு செடியைப் பள்ளி வளாகத்தில் நடும் வழக்கத்தைக் கடைப்பிடித்துவருகிறோம். பள்ளித் தோட்டத்தை அமைத்து, அவற்றைக் குழந்தைகளின் பொறுப்பில் விட்டு அவர்கள் அவற்றைப் பாதுகாப்பது மட்டுமின்றி தங்களது அறிவியல் ஆய்வு படிப்புக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இயற்கை உரங்களைக் குழந்தைகளையும் ஆசிரியர்களையும் கொண்டே தயாரிக்கிறோம்” என்கிறார் விஜி.

கடிதம் எழுதப் பயிற்சி

கடிதம் எழுதுதல் என்பது உணர்வும் மொழியும் அஞ்சலக வரலாறும் ஒருங்கிணையும் செயல். அதைக் குழந்தைகளுக்கு உணர்த்த பள்ளி வளாகத்தில் தபால் பெட்டி அமைத்து மறைந்துபோன கடிதம் எழுதும் பழக்கத்தைப் புதுப்பித்துவருகிறது இவ்வமைப்பு.

கணினிப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. விண்வெளி அறிவியல் போன்ற பாடங்களைக் கற்பிக்க அதுதொடர்பான சுவாரசியமான குறும்படங்கள், வீடியோக்களைத் திரையிட்டு வகுப்பு நடத்துகிறார்கள். திரையிடலைத் தொடர்ந்து விவாதம், கேள்வி-பதில் அமர்வு நடத்தி குழந்தைகளின் புரிதல் திறனை ஊக்குவிக்கிறார்கள்.

விவாதி, விளையாடு

சமூக அறிவியல் பாடத்தில் படிக்கும் உள்ளாட்சி அரசாங்கம் குறித்த தகவல்களைக் குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையில் பஞ்சாயத்து தலைவரையே நேரடியாகப் பள்ளிக்கு வரவழைத்துக் குழந்தைகளிடம் விரிவாகக் கலந்துரையாட வைப்பது, அதுகுறித்து விவாதம் நடத்துவது, பாரம்பரிய விளையாட்டுகளான நொண்டி, கில்லி, பாண்டி, பல்லாங்குழி ஆகியவற்றை விளையாட ஊக்குவிப்பது, பள்ளி ஆண்டு விளையாட்டு தினத்தில் மற்ற விளையாட்டுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு அளித்து போட்டிகள் நடத்துவது எனக் கல்வியில் புதிய ஆரம்பத்தை ஏற்படுத்திவருகிறது வித்யாரம்பம்.

# மூன்றரை வயது முதல் நாலரை வயதுள்ள மழலையர்களுக்கான கல்வி மையங்கள்.

# பள்ளிகளில் 2, 3-ம் வகுப்புகளில் படித்துவரும் திறன் குறைந்த மாணவர்களுக்கு இளநிலை உறுதுணைக் கல்வி மையங்கள்.

# பள்ளிகளில் 4, 5-ம் வகுப்புகளில் படித்துவரும் திறன் குறைந்த மாணவர்களுக்கு முதுநிலை உறுதுணைக் கல்வி மையங்கள்.

# நடமாடும் விளையாட்டு மையம் மூலம் பல்வேறு கிராமக் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் விளையாட்டுப் பொருட்களை அவர்கள் இருக்கும் இடத்துக்கே கொண்டுசென்று விளையாட வைப்பது

 

வித்யாரம்பம் தொடர்புக்கு: 044-28152590

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x