Last Updated : 08 Aug, 2017 11:31 AM

 

Published : 08 Aug 2017 11:31 AM
Last Updated : 08 Aug 2017 11:31 AM

அரசு வேலைக்கு வழிகாட்டும் என்.சி.சி. அலுவலர்

பெ

ண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட காலம் அது. அப்போதே, ஒரு கல்லூரியின் வகுப்பறையில் திரை மறைவில் தனியொரு பெண்ணாக அமர்ந்து படித்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகி நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. அன்று அவர் படித்தது புதுக்கோட்டை மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரியில்.

பாராட்டி தந்த பிரிவு

எளிய குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று இந்தக் கல்லூரியில் படிக்கின்றனர். இதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பி. ராஜரெத்தினம், இந்தி உதவிப் பேராசிரியராக 19 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவருகிறார். அதோடு அங்குள்ள தேசிய மாணவர் படைக்கான அலுவலராகவும் பொறுப்புவகிக்கிறார்.

இப்பிரிவு மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்துப் புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணி வகுப்பில் இக்கல்லூரி மாணவர்களை முதன்முதலாகக் கலந்துகொள்ளச் செய்தார். இவரிடம் பயிற்சி பெற்ற 1000-த்துக்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் இந்திய ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்தியப் பாதுகாப்புப் படை, தமிழகக் காவல் துறை உட்படப் பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர்.இத்தகைய பணிகளைப் பாராட்டி இக்கல்லூரிக்குத் தரைப்படை பிரிவையும் விமானப் படை பிரிவையும் தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.

மாற்றத்துக்குத் தேவையான விழிப்புணர்வு

இது குறித்துத் தேசிய மாணவர் படை அலுவலர் பி. ராஜரெத்தினத்திடம் பேசுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழ்குளம் பகுதியில் பிளஸ் டூ வரையில் தமிழ் வழிக் கல்வியில் படித்தேன். அதன் பிறகு ஆர்வ மிகுதியால் இந்தியில் பி.எச்டி.வரை படித்துக் கல்லூரியில் இந்தி உதவிப் பேராசிரியர் ஆனேன்.

4CH_Rajarathinam2 பி. ராஜரெத்தினம்

ஒரு நாள் கல்லூரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் என்.சி.சி. பிரிவில் காலியாக உள்ள அலுவலர் பணியைக் கவனிக்க யாருமில்லையா என ஆதங்கத்துடன் அன்றைய கல்லூரி முதல்வர் கேட்டார். எல்லோரும் அமைதிகாத்தபோது நான் பொறுப்பை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டேன்” என்கிறார்.

உடல் தகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரிவுக்கு 100 மாணவர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு வாரம் ஒரு நாள் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைப் பின்பற்றித் தினமும் காலை, மாலை என இருவேளையும் மாணவர்கள் பயிற்சி எடுத்துக்கொள்வர்.

உடல், மனதை வலிமையோடு வைத்துக்கொள்வது, தடகளம், துப்பாக்கிச் சுடுதல், தனி, குழுவாகத் திறன்களை வெளிப்படுத்துவது, தலைமைப் பண்பை வெளிக்கொணருதல், ஊழலின்றி நேர்மையாகச் செயல்படுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சமூக மாற்றத்துக்குத் தேவையான அனைத்து விதமான விழிப்புணர்வு பணிகளிலும் மாணவர்கள் கலந்துகொள்ளவும் ஊக்குவிக்கிறார்.

பயிற்சி பெற்றவர்கள் மிளிர்கிறார்கள்

“ராணுவ வீரருக்குத் தேவையான அத்தனை பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுவதால் பாதுகாப்புத் துறையில் இப்பிரிவு மாணவர்கள் எளிதில் தேர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். அதன்படி என்.சி.சி. மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ராணுவம், விமானப்படை, கடற்படை, எல்லை, மத்தியப் பாதுகாப்புப் படையில் பணிபுரிகின்றனர். ஏராளமானோர் தமிழகக் காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிகின்றனர். மேலும், டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கும் அவர்களைத் தயார்படுத்துவதால் எளிதில் வேலையைத் தேடிக்கொள்கின்றனர்.

என்.சி.சி. சான்றுடன் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு 3 மதிப்பெண் கூடுதலாகக் கிடைத்துவிடுவதால் வேலைவாய்ப்பு எளிதில் கிடைத்துவிடுகிறது. என்.சி.சி.யில் சி பிரிவு சான்றிதழ் இருந்தால் யூ.பி.எஸ்.சி. தேர்வில் எழுத்துத் தேர்வு எழுதாமலேயே நேரடியாக நேர்முகத் தேர்வுக்குச் செல்லலாம்.

இதன் மூலம் இக்கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் அரசு வேலையில் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் சகிப்புத்தன்மை, நேர்மை, பொறுமை, எளிதில் முடிவெடுக்கும் திறமை போன்ற ஆளுமைத் திறன் படைத்தவர்களாக அந்தந்தத் துறைகளில் மிளிர்கிறார்கள்.

இங்கே படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் குடும்ப வறுமையை உடைத்தெறிந்து சாதிக்க வேண்டுமென்ற உந்துதலை இந்தப் பயிற்சிகள் அளிக்கின்றன. தமிழகத்துக்குத் தேசிய அளவிலான விருதுகளையும் இந்தப் பயிற்சி பெற்றுத் தந்திருக்கிறது” என்கிறார் ராஜரெத்தினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x