Last Updated : 16 Aug, 2017 11:16 AM

 

Published : 16 Aug 2017 11:16 AM
Last Updated : 16 Aug 2017 11:16 AM

ருட்யார்டு கிப்ளிங் கதை: தும்பிக்கை வந்தது எப்படி?

யா

னையின் பலம் தும்பிக்கை. ஆனால், லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு யானைக்குத் தும்பிக்கை கிடையாது. மற்ற விலங்குகளைப் போல் தடித்த மூக்குதான் யானைக்கும் இருந்தது. அப்படியானால் யானைக்குத் தும்பிக்கை வந்தது எப்படி?

ஆப்பிரிக்காவில் குட்டி யானை ஒன்று தனது அம்மா, அப்பாவுடன் சந்தோஷமாக வசித்துவந்தது. மகா குறும்பு. தினமும் ஏதாவது ஒரு கதை கேட்கும். விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் அதிகம். ஏன், எதற்கு, எப்படி என்று எதைப் பற்றியாவது அடிக்கடி கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும்.

அன்று நெருப்புக்கோழியைக் கண்டதும் குட்டி யானையின் முகம் பிரகாசமானது. “உங்களுக்கு மட்டும் ஏன் சிறகுகள் நீளமாக வளர்கின்றன?” என்று கேட்டது.

‘என்ன குறும்புத்தனம்’ என்று நினைத்த நெருப்புக்கோழி, பதில் சொல்லாமல் அந்த இடத்தைவிட்டு அகன்றது.

எதிர்பார்த்த பதில் கிடைக்காததால், “நீங்களாவது பதில் சொல்லுங்கள். உங்கள் உடல் முழுவதும் ஏன் இத்தனை அழகான புள்ளிகள்?” என்று மரம்போல் நெட்டையாக வளர்ந்த ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்துக் கேட்டது குட்டி யானை.

‘இதெல்லாம் ஒரு கேள்வியா?’ என்று நினைத்த ஒட்டகச்சிவிங்கி பதில் சொல்லாமல் கோபத்துடன் நகர்ந்தது.

“நான் கேட்கும் எந்தக் கேள்விக்கும் ஏன் யாரும் பதில் சொல்வதில்லை? அதுக்குள்ள அடுத்த கேள்வி வந்துவிட்டதே! மான் மாமா, முதலை ராத்திரிக்கு என்ன சாப்பிடும் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டது குட்டி யானை.

‘உஷ்’ என்று சொல்லிவிட்டு, மான் வேகமாக ஓடி மறைந்தது.

“தெரியாததைத் தெரிந்துகொள்வதில் என்ன தவறு? எனக்கு ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. ஆனால், ஒரு கேள்விக்குக்கூட இவர்கள் பதில் சொல்வதில்லை. நான் ஏன் மற்றவர்களைக் கேட்க வேண்டும்? நானே நேரடியாக முதலையைப் பார்த்துக் கேட்டு விடுகிறேன்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கிளம்பியது குட்டி யானை.

ஆனால், முதலையை இதற்கு முன்பு அது பார்த்ததில்லை. கறுப்பா, சிவப்பா, உயரமா, குட்டையா என்றுகூடத் தெரியாது.

வழியில் பசி எடுத்தால் சாப்பிடுவதற்கு வாழைப் பழங்களை எடுத்துக் கொண்டு, தன் பயணத்தைத் தொடர்ந்தது.

மரத்தில் நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மலைப் பாம்பைப் பார்த்து, “முதலை என்ன சாப்பிடும்?” என்று கேட்டது குட்டி யானை.

மலைப் பாம்பு பயந்துவிட்டது. சுறுசுறுப்பாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது!

மீண்டும் ஏமாந்துபோன குட்டி யானைக்குப் பசி எடுத்தது. வாழைப் பழங்களைச் சாப்பிட்ட பிறகு பயணத்தைத் தொடர்ந்தது.

சற்று தூரத்தில் சேறும் சகதியுமாகச் சிறிய குளம் தென்பட்டது. கரையோரம் மரக்கட்டைபோல் ஏதோ ஒதுங்கியிருந்தது. குட்டி யானை வந்த சத்தம் கேட்டு அந்த மரக்கட்டை கண் சிமிட்டிக்கொண்டே சேற்றின் மீது வாலால் ஓங்கி அடித்தது. அது முதலை என்றும், தன்னைத் தாக்க வரும் என்றும் பாவம் குட்டி யானைக்குத் தெரியாது.

வழக்கமாக எல்லோரிடமும் கேட்பதுபோல், “முதலை என்ன சாப்பிடும்?’ என்று முதலையிடமே கேட்டது குட்டி யானை.

“அது ரகசியம். அருகே வந்தால் உன் காதில் மட்டும் யாருக்கும் தெரியாத அந்த விஷயத்தைச் சொல்வேன்” என்று அழைத்தது முதலை.

அப்பாவி குட்டி யானை ரகசியத்தைத் தெரிந்துகொள்ள முதலையின் வாயருகே தனது காதைக் கொண்டு சென்றது.

“நான்தான் நீ தேடி வந்த முதலை. என்ன சாப்பிடுவேன் என்று கேட்டாயே, இன்று இரவு குட்டி யானையாகிய நீதான் என் சாப்பாடு” என்று சொல்லிக்கொண்டே, தனது பெரிய வாயைத் திறந்து, கூரிய பற்களால் யானையின் மூக்கைப் பிடித்துக் கொண்டது முதலை.

குட்டி யானை வலியால் கதறியது. முதலை தண்ணீருக்குள் இழுக்க, குட்டி யானை தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வெளியே இழுக்க, பெரிய போராட்டமாக இருந்தது.

குட்டி யானையின் அழுகையைக் கேட்ட மற்ற விலங்குகள், காப்பாற்ற ஓடிவந்தன. தண்ணீருக்குள் முதலை இழுக்க, வெளியே குட்டி யானையின் வாலை ஒட்டகச்சிவிங்கி இழுக்க, அதன் வாலைக் கரடி இழுக்க, இப்படியாக ஒவ்வொரு விலங்கின் வாலையும் மற்றொன்று பிடித்துக்கொண்டு பலமாக இழுக்க ஆரம்பித்தன. இருபுறமும் இழுக்க இழுக்க குட்டி யானையின் மூக்கு நீண்டுகொண்டே வந்தது.

மூக்கு இப்போது கால்வரை நீண்டுவிட்டது. ஒரு கட்டத்தில் இழுக்க முடியாமல் தனது பிடியைத் தளர்த்தியது முதலை. குட்டி யானை பிழைத்தது. ஆனால், மூக்குக்குப் பதில் நீண்ட தும்பிக்கை வந்துவிட்டது!

நீண்ட மூக்கு பழையபடி சுருங்கவே இல்லை. குட்டி யானை தரையில் வீசி எறிந்த வாழைப்பழத் தோலைத் தும்பிக்கையால் எடுத்துச் சாப்பிட்டது. குட்டையில் தேங்கிக் கிடந்த தண்ணீரைத் தன் மீது தெளித்துக்கொண்டது. சின்ன மூக்கு இருந்தபோது சாத்தியப்படாத பல வேலைகளை இப்போது தும்பிக்கையால் செய்ய முடிந்ததால், குட்டி யானைக்கு ஒரே சந்தோஷம்.

இதைப் பார்த்து மற்ற யானைகளும் மூக்கு நீளமாக வேண்டும் என்று விரும்பின. குட்டி யானையிடம் காரணம் கேட்டு, முதலையிடம் சென்றன. எல்லா யானைகளின் மூக்குகளும் நீண்டு, தும்பிக்கைகளாக மாறிவிட்டன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x