Last Updated : 15 Aug, 2017 12:05 PM

 

Published : 15 Aug 2017 12:05 PM
Last Updated : 15 Aug 2017 12:05 PM

‘வெள்ளையனே வெளியேறு’ பவள விழா: இந்தியாவின் முதல் வெகுஜன போராட்டம்

அகிம்சையால் உருவாக்கப்படும் ஜனநாயக நாட்டை உருவாக்கி அனைவருக்கும் ஒரே அளவிலான சுதந்திரத்தை உறுதிப்படுத்த காந்தியடிகள் இந்திய மக்களைத் திரட்டிய போராட்டம்தான் வெள்ளையனே வெளியேறு. 1942 ஆகஸ்ட் 8 அன்று காந்தி, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை அறிவித்தபோது, இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்தை எட்டி இருந்தது.

ஜெர்மனி, சோவியத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது. எதிர்த் தரப்பில் ஜப்பான் இந்தியாவை முற்றுகையிட முன்னேறிக்கொண்டிருந்தது. இந்திய மக்களும் கொந்தளிப்பான உணர்வில் இருந்த காலம் அது. இந்தியத் தலைவர்களை ஆலோசிக்காமல் போருக்குள் இந்திய ராணுவப் படையினரைப் பிரிட்டிஷார் சேர்த்துக்கொண்டதாக அதிருப்தியும் நிலவியது.

085601b1 காந்தியுடன் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ்

இந்தியாவின் வளத்தில் பெரும்பகுதி யுத்தத்துக்காகக் கொண்டுசெல்லப்பட்டதால் ஏற்பட்ட பஞ்சமும் பொருளாதார நெருக்கடியும் கிளர்ச்சி செய்வதற்கு மக்களை நிர்ப்பந்தித்தது.

காசோலை போன்ற உறுதிமொழி

போரில் பிரிட்டனை ஆதரிப்பதற்காக சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தலைமையிலான குழுவினர், இந்தியாவுக்குப் பேச்சுவார்த்தைக்காக வந்தனர். ஆனால், சுயராஜ்ஜியத்துக்கான உத்தரவாதத்தைச் சரியான முறையில் தராததாலும் என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்படும் என்று சொல்ல முடியாததாலும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை, நஷ்டத்தில் இருக்கும் வங்கி ஒன்று ‘பின்தேதியிட்ட காசோலை’ வழங்குவதற்கு ஒப்பானது என்று காந்தி விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதேநேரத்தில் சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷாரை எதிர்த்து ஜப்பானிய ராணுவத்தினருக்கு உதவ இந்தியர்களிடம் கோரினார்.

வெள்ளையனே வெளியேறு போராட்டம் அறிவிக்கப்பட்ட வார்தா காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில்தான், ‘செய் அல்லது செத்துமடி’ என்ற புகழ்மிக்க வாசகத்தையும் காந்தி அறிவித்தார். அகிம்சையை அழுத்தமாக வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தை பிரிட்டிஷ் அரசு நிர்வாகம் மிகவும் கடுமையாகக் கையாண்டது.

லட்சக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். ஆகஸ்ட் 9 அன்று, மும்பையில் கவாலியா டாங்க் மைதானத்தில் அருணா அசஃப் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். பொது ஊர்வலங்கள், கூட்டங்களுக்கு பிரிட்டன் அரசு தடைவிதித்தது.

பிரிட்டனை உலுக்கிய இயக்கம்

இந்தியா முழுவதும் கைதுகள் தொடங்கிய பிறகு மக்கள், பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான தன்னிச்சையான கலகங்களைத் தொடங்கினார்கள். இந்தியாவின் பல பகுதிகளிலும் நிர்வாகம் சீர்குலைந்தது. காந்தியடிகள் அகிம்சைப் போராட்டம் என்று அறிவித்திருந்தாலும் ரயில்வே பாதைகள், தந்தித் தடங்கள் துண்டிக்கப்பட்டன. வங்கிகள், கருவூலங்கள் கொள்ளையிடப்பட்டன. சவுரி சவுரா போன்ற தீவைப்புச் சம்பவங்கள் நடந்தன. வெடிகுண்டு நிகழ்வுகள் சாதாரணமாகின.

நாடு முழுவதும் காந்தியும் பிற காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து படிப்படியாக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தீவிரம் குறைந்தது. 1944-க்குள் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் அடக்குமுறையால் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் அமைதிக்குத் திரும்பின.

இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த இயக்கம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டாலும், தேசம் முழுக்க மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்ட நிகழ்வு பிரிட்டன் அரசுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. அதுவரை காங்கிரசுக்கு வெகுஜன ஆதரவு எதுவும் இல்லை என்ற எண்ணம் உடைந்தது. இந்தியாவில் பிரிட்டனின் ஆதிக்கம் பலவீனமடைந்து வருவதைக் காட்டிய முதல் இயக்கம் என்ற வகையில் வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டிய இயக்கம் இது.

வரலாற்று எண்கள்

வெள்ளையனே வெளியேறு – 1942 ஆகஸ்ட் 8

அறிவிக்கப்பட்ட சில நாட்களில் நாடுமுழுவதும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை – ஒரு லட்சம்

காந்தி சிறையில் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்கள் – 21

காந்தி சிறையில் இருந்த நாட்கள் – 637

நேரு சிறையில் இருந்த நாட்கள் -1030

கஸ்தூரிபா சிறையில் இருந்த காலம்- 18 மாதங்கள்

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் தாக்கம்

500 தபால் அலுவலகங்கள் தாக்கப்பட்டன

250 ரயில் நிலையங்கள் சேதம்

85 அரசுக் கட்டிடங்கள் சேதம்

2,500 இடங்களில் தந்தித் தடங்கள் துண்டிப்பு

மக்கள் போராட்டங்களை ஒடுக்கப் பயன்படுத்தப்பட்ட ராணுவப் படைகள் 57

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x