Last Updated : 06 Aug, 2017 03:14 PM

 

Published : 06 Aug 2017 03:14 PM
Last Updated : 06 Aug 2017 03:14 PM

மனம் என்னும் மேடை 09: நான் சரியாகத்தான் பேசுகிறேனா?

மது எண்ணத்தையும் கருத்தையும் தெரிவிப்பதற்குப் பேச்சு ஒரு முக்கிய ஊடகம். ஆனால், எந்த இடத்தில் எப்படிப் பேசுவது, என்ன பேசுவது, எதைப் பேசக்கூடாது எனப் பல விஷயங்களை உள்ளடக்கியது பேச்சுக் கலை. சிலர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்பதும், சிலர் பேசுவதை எப்போது நிறுத்துவார் என்று எதிர்பார்ப்பதும் அவர்களின் பேச்சில் இருக்கும் சுவாரசியத்தைப் பொறுத்தது. சமயோசிதமாகப் பேசுவது ஒரு தனிக் கலை. சிலருக்கு அது இயல்பிலேயே இருக்கும்.

இது தொடர்பாக ஐன்ஸ்டைனின் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் பற்றி நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம். ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்பைப் பற்றிப் பேசுவதற்கு அவரைப் பல இடங்களுக்கு அழைத்திருந்தனர். ஒவ்வோர் இடத்திலும் மிகவும் சுருக்கமாகவும் ஒரே மாதிரியாகவும் தன் கண்டுபிடிப்பைப் பற்றிப் பேசிவந்தார் ஐன்ஸ்டைன்.

ஒருநாள் அவரது கார் ஓட்டுநர் ஐன்ஸ்டைனிடம், “ஒவ்வோர் இடத்திலும் ஒரேமாதிரிதான் பேசுறீங்க. நீங்க பேசறது எனக்கே மனப்பாடமா ஆயிடுச்சு… இதைக் கேட்கவா இவ்வளவு கூட்டம் கூடுது?” என்றாராம். “சரி, அப்படியானால் அடுத்த கூட்டத்தில் எனக்குப் பதில் நீங்கள் பேசுங்கள். அவர்கள் யாருக்கும் என்னை அடையாளம் தெரியாது. நான் உங்கள் டிரைவராகக் கூட்டத்தோடு உட்கார்ந்திருக்கிறேன்” என்றாராம் ஐன்ஸ்டைன்.

அடுத்த கூட்டத்தில் ஐன்ஸ்டைனின் கார் ஓட்டுநர் ஐன்ஸ்டைன் வழக்கமாகப் பேசுவதைப் போல பேசிவிட்டு அமர்ந்தாராம். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஒரு சந்தேகத்தை எழுப்பினார். ஐன்ஸ்டைனின் கார் ஓட்டுநர் இதை எதிர்பார்க்கவில்லை. கேட்ட கேள்வியே புரியாதபோது, என்ன பதிலைச் சொல்வது? ஐன்ஸ்டைனின் அருமை அப்போதுதான் கார் ஓட்டுநருக்குப் புரிந்தது. ஆனாலும் மாறாத புன்னகையுடன், “உங்கள் சந்தேகத்துக்குப் பதில் சொல்ல நான் தேவையில்லை, என் கார் டிரைவரே போதும்” என்று கூட்டத்திலிருந்த ஐன்ஸ்டைனைக் காட்டினாராம்!

பேசாவிட்டால் முட்டாளா?

இப்படி சமயோசிதமாகப் பேசாவிட்டாலும் பரவாயில்லை. பேசுவதற்கே எனக்குத் தயக்கமாகவும் பயமாகவும் இருக்கிறது என்று சொன்னார் விசாலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இரண்டு பிரச்சினைகளுக்காக அவர் என்னிடம் ஆலோசனை கேட்டுவந்தார். ஒன்று, சகஜமாகப் பிறருடன் பழகுவதில் இருக்கும் சிக்கல். சரியாகப் பேசத் தெரியாததால் அலுவலகத்தில் முட்டாள் பட்டம் கிடைக்கிறது. இரண்டாவது, பேச்சுத் தடையால் தள்ளிப் போகும் நட்பு, உறவு வட்டம். இரண்டையும் சரிசெய்ய வேண்டும் என்றார் விசாலி

தடைபடும் பேச்சு

“சக அலுவலக ஊழியர்களோடு சரியாகப் பேச முடிவதில்லை. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களோடும் சரியாகப் பேச முடிவதில்லை. எனக்குப் பக்கத்தில் நடக்கும் உரையாடலில், என்னுடைய கருத்துகளை சொல்ல முடிவதில்லை. அப்படியும் சில நேரம் அலுவலகத்தில் நடக்கும் குழு விவாதங்களில் என் கருத்தைச் சிலர் கேட்கும்போது, ஏதாவது சொல்ல வேண்டுமே என்ற ஆதங்கத்தில் சொல்லத் தொடங்கி, உளறலில் முடிந்த சம்பவங்களும் உண்டு. நான் பேசத் தொடங்கும்போதே ஏதோ ஒரு நகைச்சுவையைக் கேட்பதற்கு எல்லோரும் தயாராவதுபோலத் தோன்றுகிறது. அதனால் நான் பெரும்பாலும் பேசுவதைத் தவிர்த்துவிடுகிறேன். ஆனால், அலுவலகத்தில் முழுக்கப் பேசாமலும் இருக்க முடியாது. தேவைக்குப் பேசும் சில சந்தர்ப்பங்களிலும் உளறிக்கொட்டி மாட்டிக்கொள்கிறேன்” என்றார் விசாலி.

உரையாடலுக்கு எது முக்கியம்?

ஏறக்குறைய பத்து முறைக்கு மேல் விசாலியும் நானும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசினோம். முதல் சந்திப்பிலேயே விசாலியிடம், நீங்கள் உங்கள் பிரச்சினையாக எதை நினைக்கிறீர்கள் என்பதைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லிவிட்டீர்களே… சிலர் நான்காவது, ஐந்தாவது முறை சந்திக்கும்போதுதான் அவர்களின் பிரச்சினை என்னவென்றே சொல்வார்கள். அதனால் நினைப்பதை மிகவும் சரியான வார்த்தைகளால் உங்களால் வெளிப்படுத்த முடியும் என்பதை நம்புங்கள் என்று நம்பிக்கை கொடுத்தேன்.

பலமும் பலவீனமும்

அவரிடமே பலமும் பலவீனமும் இருக்கின்றன என்பதை விசாலிக்குப் புரியவைத்தேன். எந்த இடத்தில் பேச வேண்டுமோ அந்த இடத்தில் பேசும்போது பேச்சு எந்த அளவுக்குப் பலமானதோ, அதே அளவுக்குத் தேவையில்லாத இடத்தில் சந்தர்ப்பத்தில் பேசும்போது பலவீனமாகவும் மாறும். உங்களிடம் பேச்சு தொடர்பான பலம் இருக்கிறது. தகாத இடத்தில் அவர் பேசுவதில்லை என்பதால், தேவையில்லாத பேச்சு மூலம் உருவாகும் பலவீனம் அவரிடம் இல்லை என்பதைப் பல்வேறு சூழ்நிலைகளில் அவரைப் பேசவைத்தும், சில சந்தர்ப்பங்களில் அவர் மவுனமாக இருந்ததைக் குறிப்பிட்டும் அவருக்குப் புரியவைத்தேன்.

தனிமையை நாடியது ஏன்?

விசாலியின் இரண்டாவது பிரச்சினை யாரோடும் ஒட்டாமல் இருப்பது. இது தொடர்பாக அவரிடம் பல சந்தர்ப்பங்களில் பேசியபோது, அவருடைய சின்ன வயதில் நடந்த சில சம்பவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

விசாலிக்குச் சிறுவயதில் ஒரு நண்பர் இருந்திருக்கிறார். எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் காலம் எல்லாவற்றையும் மாற்றும்தானே. அப்படித்தான் விசாலியின் நண்பரின் குடும்பம், வேறு ஊருக்குப் போனது. விசாலியின் நட்பும் முடிவுக்கு வந்தது.

அப்போதுதான் அவருக்குள் நாம் நெருங்கிப் பழகும் நபர், நம்மைவிட்டு விலகிப் போய்விடுவார் என்னும் எண்ணம் துளிர் விட்டிருக்கிறது. அதிலிருந்து யாருடனும் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பத்தை விசாலி ஏற்படுத்திக்கொள்ளவே இல்லை.

ஒருவர் நம்மிடம் நட்பாக இருக்கிறார் என்பதற்காக நம் அன்றாட வேலைகளில், முடிவுகளில் அவரது நெருக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை அவருக்குப் புரியவைத்தேன். நீங்கள் ஒருவருக்கு நண்பராக இருக்கிறீர்கள் என்பதற்காகத் தினம் தினம் அவரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்பது கட்டாயமும் இல்லை.

வாரத்துக்கு ஒருநாள் பேசலாம். மாதத்துக்கு ஒருநாள்கூடப் பேசலாம். எல்லாமே வசதியையும் சூழலையும் பொறுத்துதான் என்பதை விசாலிக்குப் புரியவைத்தேன். இந்தப் புரிதல் எதிர்காலத்தில் விசாலியை சில நண்பர்களிடமாவது கொண்டுபோய்ச் சேர்க்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

கட்டுரையாளர், மனநல ஆலோசகர்
தொடர்புக்கு: shobana.jayaraman@gmail.com
தொகுப்பு: பைரவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x