Published : 21 Aug 2017 11:34 AM
Last Updated : 21 Aug 2017 11:34 AM

70 ஆண்டு கால தொழில் மேம்பாடு

பெரும்பான்மையான வளங்களை சுரண்டி தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்ற பிறகே பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு விடுதலை கொடுத்தது. விடுதலை பெற்ற பிறகு இந்தியாவின் வளர்ச்சி குறித்து அனைவருக்கும் கேள்வி இருந்தது. நேரு பின்பற்றிய சோஷலிச பொருளாதாரம் பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டது. தனியார் நிறுவனங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் இருந்தன. அதன்பிறகு வந்த ஆட்சியாளர்களும் நேருவின் கொள்கைகளை பின்பற்றினார்கள். ஆனால் 1985-90 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் கவலைக்கிடமான நிலையை எட்டியது. பின்னர் 1991-ம் ஆண்டு இந்தியாவில் தாராளமய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு அனைத்துத் துறை தொழில்களும் வளர்ச்சிப் பெற்றுள்ளன. ஆனால் தற்போது உற்பத்தித் துறை வளர்ச்சி குறைந்து சேவைத்துறை வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இந்தியா போன்ற அதிக மனித வளம் கொண்ட நாட்டில் உற்பத்தி துறையை மேம்படுத்தினால் மட்டுமே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். 70 ஆண்டு கால தொழில் மேம்பாடு குறித்து சில தகவல்கள்…..

1947 – தொழில்துறை சமரச தீர்ப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1951 மேற்கு வங்க மாநிலம் காரக்பூரில் முதல் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.

1953 - ஏர் இந்தியா நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது.

1956 – தொழில்துறை கொள்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. லைசென்ஸ் ராஜ் தொடங்கியது.

1958 – திருபாய் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தை தொடங்கினார். ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் என்ற தரகு நிறுவனத்தை தொடங்கினார்.

1958 – ஹிந்துஸ்தான் அம்பாசிடர் முதல் கார் உற்பத்தி செய்யப்பட்டது.

1959 – உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கியில் முதல் உருக்கு ஆலை தொடங்கப்பட்டது.

1961 – அகமதாபாத்தில் இந்தியன் மேலாண்மை கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.

1967 – வர்த்தக விளம்பரங்கள் ஒலிபரப்பு தொடக்கம்.

1968 – அந்நிய முதலீட்டு வாரியம் உருவாக்கம்.

1969 – 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன

1969 – ஏகபோகங்கள் மற்றும் வர்த்தக கட்டுப்பாட்டு நடைமுறைகள் சட்டம் கொண்டு வரப்பட்டது.

1973- நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் தேசியமயமாக்கம்.

1976 – ஒப்பந்த தொழிலாளர் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

1977 – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பொது பங்கு வெளியீடு செய்தது.

1978 - ஹவுசிங் டெவலெப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஹெச்டிஎப்சி) நிறுவனம் கடன் வழங்கும் நிறுவனமாக தொடங்கப்பட்டது.

1978 – முதல் வர்த்தகம் விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

1980 – இந்தியாவில் முதன்முதலாக கிரெடிட் கார்டு, சென்ட்ரல் கார்டை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியது.

1981- என்.ஆர்.நாராயணமூர்த்தி உள்ளிட்ட 7 நபர்கள் இணைந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தொடங்கினர் .

1982 – இந்தியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொடக்கம்.

1983 – மாருதி நிறுவனம் முதன் முதலாக தங்களது கார்களை அறிமுகப்படுத்தியது. காரின் அப்போதைய விலை ரூ.35,000

1984 – போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் மிகப் பெரிய விபத்து ஏற்பட்டது.

1986 – இந்தியாவின் முதல் ஈக்விட்டி இன்டெக்ஸான, எஸ் அண்ட் பி, பிஎஸ்இ சென்செக்ஸ் தொடங்கப்பட்டது.

1987 – இந்தியாவின் முதல் டெபிட் கார்டை சிட்டி பேங்க் அறிமுகம் செய்தது. மும்பையில் முதல் ஏடிஎம் மையத்தை ஹெச்எஸ்பிசி நிறுவனம் தொடங்கியது.

1988 – பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி தொடங்கப்பட்டது.

1991 – புதிய தாராளமய கொள்கை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் இதில் முக்கிய பங்காற்றியவர்கள்.

1992- ரிலையன்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் முதலீடு திரட்டியது. சர்வதேச அளவில் பணம் திரட்டிய முதல் நிறுவனம் இதுதான்.

1992 – ஹர்ஷத் மேத்தா ஊழல் கண்டறியப்பட்டது

1993 – இன்ஃபோசிஸ் நிறுவனம் பொதுப்பங்கு வெளியிட்டது.

1993 – இந்தியாவின் முதன் முறையாக தனியார் வங்கி தொடங்க ஹெச்டிஎப்சி நிறுவனத்துக்கு முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

1993 – ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் டாடா ஆயில் மில்ஸ் நிறுவனத்துக்கு மிகப் பெரிய போட்டியாளராக வளர்ந்தது.

2000 – காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதிக்கப்பட்டது. அப்போது 26 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

2006 – டாடா குழுமம் 1298 கோடி டாலருக்கு இங்கிலாந்து நிறுவனமான கோரஸை வாங்கியது. ஒரு இந்திய நிறுவனம் அதிகபட்ச தொகைக்கு கையகப்படுத்தியது இதுவே ஆகும்.

2008 – டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலகின் மிக மலிவு விலைக்கு டாடா நானோ காரை அறிமுகப்படுத்தியது.

2009 – சத்யம் ஊழல் கண்டறியப்பட்டன

2011 – 2ஜி அலைக்கற்றை ஊழல் கண்டறியப்பட்டது.

2017 – தொழில்புரிவதை எளிதாக்கும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x