Published : 31 Jul 2017 12:24 PM
Last Updated : 31 Jul 2017 12:24 PM

ஐஐஎம்-களுக்கு கூடுதல் அதிகாரம்!

த்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சராக ஸ்மிருதி இராணி இருந்த சமயத்தில் புதிது புதிதாக சர்ச்சைகளை உருவாக்கினார். ஐஐஎம் கல்வி நிறுவனங்களின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை உருவாக்கியது, ஐஐஎம்களுக்கு தலைவரை நியமனம் செய்வதில் காலதாமதம் என்பது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் அவர் சிக்கினார். அதன் பிறகு பிரகாஷ் ஜவடேகர் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு இத்துறையில் தலைகீழ் மாற்றம்.

கடந்த வெள்ளிக்கிழமை ஐஐஎம் மசோதா மக்களவையில் நிறைவேறி இருக்கிறது. இந்த மசோதா அடுத்து மாநிலங்களவையில் நிறைவேற வேண்டும், அதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் சட்டமாக மாறும் என்றாலும் தற்போதைய வடிவத்தை இந்த துறையை சார்ந்தவர்கள் வரவேற்றிருக்கிறார்கள்.

மசோதாவின் முக்கிய அம்சம்

இந்த மசோதாவினால் ஐஐஎம் நிறுவனங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கியமானது இனி ஐஐஎம் நிறுவனங்களே டிகிரி வழங்க முடியும். மேலும் முனைவர் பட்டமும் வழங்க முடியும். தற்போதுவரை டிப்ளமோ சான்றிதழ் மட்டுமே இந்த நிறுவனங்கள் வழங்கி வந்தன என்பது கவனிக்கத்தக்கது. முன்பு இருந்த மசோதாவில் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதாவில் ஐஐஎம் இயக்குநர் குழுவுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் குழு ஐஐஎம் தலைவர் மற்றும் இயக்குநரை தேர்வு செய்யலாம். செயல்பாடுகள் சரியில்லை என்றால் நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை. பேராசிரியர்களை நியமனம் செய்யும் அதிகாரமும் ஐஐஎம் வசம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு இயக்குநர் குழுவில் 19 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதில் மத்திய அரசு சார்பில் ஒருவரும் சம்பந்தப்பட்ட மாநில அரசு சார்பில் ஒருவரும் இருப்பார்கள். இது தவிர மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒன்று உருவாக்கப்படும். இந்த குழு ஐஐஎம் கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும்.

வரவேற்பு

ஐஐஎம்-களுக்கு அதிக அதிகாரம் வழங்கி இருக்கிறோம். இனி மத்திய அரசின் தலையீடு ஏதும் இருக்காது. நம்முடைய சிறந்த கல்வி நிறுவனங்கள் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என இந்த மசோதா மீதான விவாதத்தின் போது பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இந்த மசோதா நிறைவேறிய உடன் ஐஐஎம் கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் வரவேற்றனர்.

இந்த மசோதா ஐஐஎம்-களுக்கு அதிகாரம் வழங்கினாலும், அதிக அதிகாரம் ஆபத்தில் முடிய கூடாது. கூடுதல் அதிகாரத்தில் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதும் அடங்கும். இது தொடர்பான விவாதத்தில் அதிக அதிகாரம் ஏழை மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் மற்றும் சிபிஎம் உறுப்பினர் எம்பி ராஜேஷ் தெரிவித்தனர். இந்த மசோதா அமலானால் 20 ஐஐஎம்-களும் இனி சுதந்திரமாக செயல்பட முடியும்.

அதிகாரத்தின் அழகே அதனை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதில்தான் இருக்கிறது. ஐஐஎம்-களும் அழகாக செயல்படும் என நம்புவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x