Last Updated : 01 Jul, 2017 11:25 AM

 

Published : 01 Jul 2017 11:25 AM
Last Updated : 01 Jul 2017 11:25 AM

ஜி.எஸ்.டி: கட்டுமானத் துறைக்கு லாபமா?

இன்று முதல் (ஜூலை, 1) ஜி.எஸ்.டி. என்றழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, நாடு முழுவதும் அமலாகிறது. நேற்று வரை புழக்கத்திலிருந்த சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி, மறைமுக வரி ஆகிய அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுவிட்டன. நாடு முழுவதும் ஒரே வரி அமலாகிறது. இந்த விரி விதிப்பு மாற்றம் கட்டுமானத் துறைக்கும் வீடு வாங்குவோருக்கும் சாதகமாக இருக்குமா?

பழைய வரிகள் என்னென்ன?

கட்டுமானத் துறையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அறிந்துகொள்ளும்முன், இதுவரை கட்டுமானத் துறையில் என்னென்ன வரி விதிப்புகள் இருந்தன என்பதை அறிந்துகொள்வது அவசியம். இத்துறையில் சேவை வரி, ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) செஸ், கிரிஸ் கல்யாண் செஸ், ‘வாட்’ என்றழைக்கப்படும் மதிப்புக் கூட்டு வரி, முத்திரைத் தாள் கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம் எனப் பல வரிகளும் கட்டணங்களும் உள்ளன. இப்படி விதிக்கப்பட்ட பல வரிகள் இப்போது மாறியிருக்கின்றன. ஜி.எஸ்.டி. என்னும் ஒரே வரியாக விதிக்கப்பட்டுள்ளது. 12 சதவீதமாக ஜி.எஸ்.டி. நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீடு வாங்கும்போது...

பொதுவாகப் பலரும் கட்டுமான நிலையில் இருக்கும்போது வீடு வாங்குவார்கள்தான். அந்த நிலையில் வீடு வாங்கும்போது அதற்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இந்த 12 சதவீத வரி என்பது நேற்று வரை அமலில் இருந்த வரியைவிடக் குறைவா, அதிகமா என்று கேள்வி உங்களுக்கு எழலாம். பலவித வரிகளின் காரணமாக 11 முதல் 18 சதவீதம் வரை இந்த வரிகள் விதிக்கப்பட்டன. தற்போது அது 12 சதவீதமாகிறது. இந்த 12 சதவீதம் என்பது முத்திரைத்தாள் கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம் ஆகியவற்றைத் தவிர்த்தது. ஏனென்றால் இந்த இரண்டும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கட்டண முறைகளில் மாநில அரசுகள் என்ன கட்டணங்கள் நிர்ணயம் செய்கின்றனவோ அதுவே தொடரும்.

‘வாட்’ எனப்படும் மதிப்புக் கூட்டு வரி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக வசூலிக்கப்பட்டதால் முன்பு கொஞ்சம் கூடுதலாக வரியைச் செலுத்தும் நிலை இருந்தது. ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்குப் பின் வாட் வரியின் சுமை குறையும். டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் கட்டிய வீட்டை வாங்குவதற்குக்கூட ‘வாட்’ வரி முன்பு விதிக்கப்பட்டது. இனி அந்த நிலை இருக்காது. ‘வாட்’ வரியின் ஏற்ற இறக்கங்களால் அதிகரித்திருந்த வரிவிதிப்புகள் ஜி.எஸ்.டி. மாற்றத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக வீடு வாங்குவோருக்கு 3 - 4 சதவீதம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகளுக்கு...

கட்டுமானப் பணிகளுக்கும் தனியாக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டால் அதற்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, கட்டுமானம் எழுப்புதல், நிறுவுதல், வீட்டை மேம்படுத்தல், வீட்டைப் பழுது பார்த்தல், சீரமைத்தல் போன்ற வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்துச் செய்யும் கட்டுமான நிறுவனம் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியைச் செலுத்த வேண்டும். இந்தப் பணிகளுக்கு சராசரியாக இதுவரை 11 முதல் 18 சதவீதம் வரை வசூலிக்கப்பட்டு

வந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தப் பணிகளுக்கு 5 சதவீதமே வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஜி.எஸ்.டி. கூடுதலாக இருப்பதால் அது மக்கள் தலையில் கட்டப்படும் என்பதால் கட்டுநர்கள் மற்றும் மக்களுக்கு அதிகச் சுமையை இது ஏற்படுத்தக்கூடும். இதுவே நிறுவனமாக இல்லாமல் தனி நபர் வீட்டுக் கூலி ஒப்பந்த வேலையாக இருந்தால் அவர்களுக்கு ஜி.எஸ்.டியில் விலக்கு உண்டு.

சிமெண்ட் விலை குறையுமா?

கட்டுமானத் துறையில் சிமெண்ட், ஸ்டீல் ஆகிய இரண்டுமே மிகவும் முக்கியமானவை. எப்போதுமே ஸ்டீலைவிட சிமெண்டுக்கு அதிக வரி விதிக்கப்படுவது வாடிக்கை. சிமெண்டுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்புக்கு எதிராகக் கட்டுமானத் துறையினர் பல காலமாகக் குரல் எழுப்பி வருகிறார்கள். சிமெண்ட் மீதான வரிவிதிப்புகளில் கலால் வரி எப்போதுமே சிக்கலானது. ஏனென்றால், சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிறு நிறுவனங்களா, பெரிய நிறுவங்களா, சில்லறை விற்பனையா அல்லது மொத்த விற்பனையா ஆகிய பல அம்சங்களைப் பொறுத்தே வரிகள் நிர்ணயிக்கப்பட்டு வந்தன. இதனுடன் வாட் வரியும் சேர்ந்துவிடும். இந்த எல்லா வரிவிதிப்புகளையும் சேர்க்கும்போது சிமெண்ட் மீதான மறைமுக வரி 27 முதல் 31 சதவீதம் வந்துவிடும்.

ஜி.எஸ்.டி.யில் இது சீரமைக்கப்படும் எனக் கட்டுமானத் துறையினர் எதிர்பார்த்தனர். குறிப்பாக ஸ்டீலுக்கு விதிக்கப்படுவது போல சிமெண்டுக்கும் வரி விதிப்பு இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. ஆனால், சிமெண்டுக்கு 28 சதவீதமும், ஸ்டீலுக்கு 18 சதவீதமும் வரியாக ஜி.எஸ்.டி. கவுன்சில் நிர்ணயம் செய்துள்ளது. வழக்கம்போல ஸ்டீலுக்கும் சிமெண்டுக்குமான வரி வித்தியாசங்கள் தொடருகின்றன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின்படி சிமெண்ட் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, கட்டுநர்களுக்கான செலவுகள் குறையவும் வாய்ப்பில்லை.

தற்போதைய நிலையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புகள் மூலம் கலவையான பலன்களும் பாதிப்புகளும் தெரிகின்றன. இன்னும் சில மாதங்கள் கழித்துதான் கட்டுமானத் துறையில் ஜி.எஸ்.டி. ஏற்படுத்தும் முழுத் தாக்கமும் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x