Last Updated : 23 Jul, 2017 03:12 PM

 

Published : 23 Jul 2017 03:12 PM
Last Updated : 23 Jul 2017 03:12 PM

இது தான் இப்போ பேச்சு: பெண்கள் பசுக்கள் பாதுகாப்பு!

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்புக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைவிட, பசுக்கள் பாதுகாப்புக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை உருவாக்கிவருகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த இளம் ஒளிப்படக் கலைஞர் சுஜத்ரோ கோஷ், இந்த அதிருப்தியைத் தனது ஒளிப்படங்களின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார். பெண்களுக்குப் பசு முகமூடியை அணிவித்து இவர் எடுத்துவரும் ஒளிப்படத் தொகுப்பு சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலானது.

“இந்த நாட்டில் பெண்களைவிட பசுக்கள் முக்கியமாக இருக்கின்றன என்ற உண்மை எனக்கு வலிக்கிறது. பாலியல் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு நீதியை வழங்க ஆண்டுக்கணக்கில் தாமதப்படுத்தும் இந்த நாடு, பசுக்களுக்கோ உடனடி நீதியை வழங்க முயல்வதை என்னால் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லை. அத்துடன், பசுக்களைப் பாதுகாப்பதற்காக இஸ்லாமியர்களின் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களை எதிர்க்கும் வகையிலும் இந்த ஒளிப்படத் தொகுப்பை எடுத்துவருகிறேன்” என்கிறார் சுஜத்ரோ.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் தொடங்கிய இவரது ஒளிப்படப் பதிவு, இந்தியா முழுவதும் பயணம் செய்துகொண்டிருக்கிறது. பல்வேறு பகுதிகளையும் சமூகங்களையும் சேர்ந்த பெண்களை இந்த ஒளிப்படத் தொகுப்பில் அவர் இணைத்திருக்கிறார். தற்போது அவர் தென்னிந்தியாவில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

நாட்டில் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கும் ஒரு பாலியல் வன்முறை நிகழ்கிறது என்று இந்திய அரசுத் தரப்பு புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன. இந்நிலையில், நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய அரசாங்கமோ பசுக்களின் பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான அரசின் இந்தப் போக்கைக் கண்டித்திருக்கும் சுஜத்ரோவின் ஒளிப்படங்களுக்குச் சமூக ஊடகங்களில் வரவேற்பு அதிகரித்துவருகிறது. அது மட்டுமில்லை, இந்து மதவாத சக்திகளிடம் இருந்து சுஜத்ரோவுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x