Last Updated : 15 Jul, 2017 10:00 AM

 

Published : 15 Jul 2017 10:00 AM
Last Updated : 15 Jul 2017 10:00 AM

வீட்டுக்குள் ஒரு கடல் அலங்காரம்!

இன்றைய தலைமுறைக்கு வீட்டை அழகுபடுத்துவதில் ஆர்வம் கொஞ்சம் அதிகம். அதுவும் கலைநயத்துடனும் உயர் தொழில்நுட்பத்துடனும் வீடு இருக்க வேண்டும் என்றே இந்தத் தலைமுறை விரும்புகிறது. அந்த வகையில் புதுமையையும் நவீனத்தையும் புகுத்தி வீட்டுக்கு வருபவர்களை ஆச்சரியப்படுத்தவும் வசதியை மேம்படுத்தவும் உலகெங்கும் உள்ள சில சிந்தனையாளர்கள் உருவாக்கிய வீட்டு அலங்காரங்கம் பற்றி ஒரு சுற்றுப் பார்ப்போம்.

எங்கெங்கும் கடல்

ஆழ்கடலின் உள்ளே கண்ணாடிக் கூண்டில் இருக்கும்போது கிடைக்கும் அனுபவத்தை, நம் வீட்டுப் படுக்கையிலிருந்து கொண்டே பெற முடியுமா? ‘நிச்சயம் முடியும்’ என்று சிந்தித்தவர்கள் மனதில் எழுந்த விஷயம்தான் இந்த மீன் தொட்டிக் கட்டில். மனதிலிருக்கும் கவலைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு கட்டிலில் படுத்து உறங்கும்போது, கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகளைப் பார்க்க வேண்டும் என விரும்புபவர்களும் கண் மூடித் தூங்கும்போதும் கண் விழிக்கும்போதும் ஆழ்கடலில் இருப்பதைப் போன்ற உணர்வைப் பெற வேண்டும் என்று விரும்புவர்களும் இதுபோன்ற மீன் தொட்டிக் கட்டிலை உருவாக்கிக்கொள்ளலாம்.

படிக்கட்டு நூலகம்

வீட்டிலிருக்கும் படிக்கட்டுகள் நம்மை உயரத்துக்கு அழைத்துச் செல்லும். அதுபோல சிறந்த நூல்களும் நமது சிந்தனையை உயர்த்தும். இரண்டும் ஒன்றிணைந்தால் எப்படி இருக்கும்? அதற்காக உருவானதுதான் இந்தப் படிக்கட்டு நூலகம். வீட்டிலிருக்கும் படிக்கட்டுகளில் நூலகத்தை உருவாக்குவதன் மூலம் இடவசதியை அதிகரித்துக்கொள்வதுடன், நூலகத்திலேயே வாழ்வது போன்ற உணர்வும் கூடுதலாகக் கிடைக்கும். புத்தகப் பிரியர்களுக்கு ஏற்ற தரமான யோசனை இது.

ஜொலிக்கும் கதவு

வீட்டின் கதவுகளில் அதிகபட்சம் எத்தனை வர்ணங்களைப் பூச முடியும்? அதிகபட்சமாக 5 நிறங்களில் வண்ணம் பூசலாம். ஆனால், ஒரே கதவு விதவிதமான வண்ணத்தில் இருக்க வேண்டும் எனச் சிந்திப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த வண்ணக் கண்ணாடிக் கதவு. வெயில் படும்போது இந்தக் கதவுகள் பல வண்ணங்களில் ஜொலிக்கும். பார்ப்பவர்களுக்குப் பிரமிப்பையும் சந்தோஷத்தையும் அது கொடுக்கும்.

சமையலறையில் தோட்டம்

இந்திய சமையலில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி போன்ற மணமணக்கும் விஷயங்கள் அதிகம் இடம்பிடிப்பது வழக்கம். எனவே, அவற்றைக் காய்கறிக் கடைகளிலிருந்து வாங்குவது எளிய முறையாக இருந்தாலும், சமையலறையிலேயே கைக்கு எட்டும் தூரத்திலேயே நம்மால் உற்பத்தி செய்துவிட முடியும் என்பது எத்தனை அழகான சிந்தனை. இயற்கை விவசாயத்தை விரும்புபவர்களும் தோட்டம் வளர்க்க வேண்டும் என எண்ணுபவர்களும் இதுபோன்ற சமையலறையை வீட்டில் உருவாக்கிக்கொள்ளலாம்.

வரவேற்பறையில் கடற்கரை

வீட்டின் வரவேற்பறையில் ஓய்வாக அமர்ந்திருக்கும்போதும் அலுவலகப் பணிகளை வீட்டிலேயே பார்க்கும்போதும் கடற்கரையில் இருப்பது போன்ற அனுபவத்தைப் பெற நினைப்பவர்களுக்கு இந்த யோசனை கைகொடுக்கும். கால்களில் கடற்கரை மணல் படும்போது மனதில் ஏற்படும் மகிழ்ச்சியை வீட்டில் இருந்தபடியும் அனுபவிக்க முடியும்.

கண்ணாடிக் குளியல் தொட்டி

குளியல் அறையில் கண்ணாடி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், குளியல் தொட்டியே கண்ணாடியில் இருந்தால்? அதுபோன்ற விஷயமும் இப்போது சாத்தியமாகிவிட்டது. புதுமையை விரும்புபவர்களுக்குக் குளியலறையும் புதிய அறைதான்.

படிக்கட்டுகள் கீழே...

வீட்டில் உள்ள படிக்கட்டுகளுக்கு அடியில் உள்ள இடத்தைப் பலரும் வேண்டாத பொருட்களைப் போட்டுவைக்கவே பயன்படுத்துவார்கள். ஆனால், அந்த இடத்தை எப்படி அதிக பயன் தரக்கூடியதாக மாற்றுவது என்று சிந்திப்பவர்களுக்கு ஏற்ற யோசனை இது. இந்தப் படத்தில் இருக்கும் படி மாடிப் படிகளுக்கு அடியில் தனித்தனி டிராயர்களை அமைப்பதன் மூலம் அந்த இடத்தையும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம்.

ஊஞ்சல் இல்லாமல் ஊஞ்சல்

ஒருவர் அல்லது இருவர் மட்டுமே ஊஞ்சலைப் பயன்படுத்த முடியும். 5 அல்லது 6 பேர் கொண்ட வீட்டில் இது சண்டையை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைத்தால், டைனிங் டேபிளை ஊஞ்சலாடும் இடமாகவும் மாற்றிக் கொள்ளலாம். ஊஞ்சலாடும் வசதியுடன் கூடிய இந்த டைனிங் டேபிளில் குறைந்தது 8 பேர் வரை, ஒரே நேரத்தில் உணவு அருந்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x