Last Updated : 15 Jul, 2017 11:34 AM

 

Published : 15 Jul 2017 11:34 AM
Last Updated : 15 Jul 2017 11:34 AM

சந்தேகம் சரியா 44: பேதி மருந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் ஒழியுமா?

என் மகளுக்கு வயது 12. குடல் புழு அடிக்கடி தொல்லை தருகிறது. பலமுறை மாத்திரை, மருந்து கொடுத்துவிட்டேன். பலனில்லை. பேதிக்கு மருந்து கொடுத்தால் புழுத் தொல்லை சரியாகிவிடும் என்று கூறுகிறார்கள். இது சரியா?

இது சரியில்லை.

பேதிக்குக் கொடுக்கப்படும் மாத்திரைகளும் திரவ மருந்துகளும் மலத்தை எளிதில் வெளியேற்ற உதவுகின்றன. முக்கியமாக, மலச்சிக்கல் ஏற்படும்போதும், மலத்தை வெளியேற்றுவதற்கான திறன் முதியவர்களுக்குக் குறையும்போதும், பேதி மாத்திரைகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த மருந்துகளில் பல விதம் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் செயல்பட்டு, குடலியக்கத்தைத் தூண்டி, மலத்தை வெளியேற்ற உதவுகின்றன. ஆனால், இந்த மருந்துகளால் குடல் புழுக்களை வெளியேற்ற முடியாது. இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், புழுக்களின் வளர்ச்சிப் புராணம் தெரிந்திருக்க வேண்டும்.

புழுக்கள் வளரும் விதம்

குடல் புழுக்களில் உருண்டைப் புழு, கொக்கிப் புழு, நூல் புழு, சாட்டைப் புழு, நாடா புழு எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையிலும் ஆண், பெண் என இரண்டு இனமுண்டு. பெண் புழு இடும் முட்டைகள் மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து, மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். குழந்தைகள் விளையாடும்போது கை விரல் நகங்களில், அவை புகுந்துகொள்ளும். கைகளைச் சுத்தப்படுத்தாமல் உணவைச் சாப்பிடும்போது, உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று, ‘லார்வா’க்கள் எனும் தோற்றுவளரிகளைப் பொரிக்கும்.

ஒவ்வொரு லார்வாவும் சிறுகுடலின் சுவரைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குச் சென்று, சுமார் நான்கு நாட்கள் அங்கே தங்கும். பிறகு, அங்கிருந்து இதயத்துக்குச் சென்று நுரையீரலுக்குள் நுழையும். அங்கிருந்து உணவுக் குழாய்க்கு வரும். மீண்டும் இரைப்பை வழியாகக் குடலுக்கு வந்து சேரும் இந்தச் ‘சுற்றுலா’வுக்கு, மூன்று மாதங்கள் எடுக்கும். அதற்குள் ‘லார்வா’ கட்டத்தில் இருந்தவை முழுப் புழுக்களாக வளர்ந்துவிடும். அதற்குப் பிறகுதான் உடலுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கும்.

பாதத்தைத் துளைக்கும் புழு

கொக்கிப் புழு லார்வாக்கள் மட்டும் நம் பாதத்தைத் துளைத்துக்கொண்டு நேரடியாகவே ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குச் சென்று இதயம், நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை வழியாகக் குடலுக்கு வந்து, முழு புழுக்களாக வளர்ந்து பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

இப்படிக் குடல் புழுக்கள் முட்டை, லார்வா, புழு என மூன்று அவதாரங்கள் எடுத்திருக்கும். நம் குடலில் மட்டுமில்லாமல் உடலின் பல பகுதிகளில் இவை சுற்றிக்கொண்டிருக்கும். இவற்றில் முட்டையும் லார்வாவும் குடலின் சுவர்களில் அட்டைப் பூச்சிபோல் ஒட்டிக்கொண்டிருக்கும். கொக்கிப் புழுக்களின் வாயில் கொக்கி போன்ற அமைப்புகள் இருப்பதால், சுவரில் ஆணி அடித்துத் தொங்கவிட்டதுபோல் குடல் சுவரில் அவை தொங்கிக்கொண்டிருக்கும். ஆகவே, குடல் புழுக்களைப் பேதி மருந்து கொடுத்து ஒழிக்க முடியாது.

என்ன செய்ய வேண்டும்?

குடல் புழுவை ஒழிப்பதற்கான மருந்துகள் பெரியவர்களுக்கு மாத்திரையாகவும், குழந்தைகளுக்குத் திரவ மருந்தாகவும் கிடைக்கின்றன. சுயமாக மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்குவதைவிட, எந்தப் புழுவின் பாதிப்பு உள்ளது என்பதை மலப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருத்துவர் பரிந்துரைப்படி மருந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் 90 சதவீதம் ஒழிந்துவிடும்.

முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இதில் உள்ளது. குடல் புழு பிரச்சினைக்கு முதலில் சாப்பிடும் மாத்திரையோடு பலரும் சிகிச்சையை நிறுத்திக்கொள்கின்றனர். இந்த மாத்திரையின் பலனால், குடலில் முழு வளர்ச்சி பெற்ற புழுக்கள் மட்டுமே இறக்கும். உடலில் லார்வா பருவத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் புழுக்கள் முதலில் சாப்பிட்ட மாத்திரையால் அழிவதில்லை. இந்த லார்வாக்கள் புழுக்களாக வளர்ச்சி பெற்று குடலுக்கு வந்ததும் மறுபடியும் தொல்லை கொடுக்கும்.

சுத்தம் முக்கியம்!

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முதலில் ஒருமுறை மாத்திரை/மருந்து சாப்பிட்ட பிறகு, 2-லிருந்து 3 வாரங்களுக்குள் மறுபடியும் ஒருமுறை குடல் புழுவுக்கு மாத்திரை/ மருந்து சாப்பிட வேண்டும். இப்படி ஒரு பின் சிகிச்சையை (Follow up treatment) எடுக்கத் தவறுவதால்தான் பலருக்கும் குடல் புழு தொல்லை நீடிக்கிறது.

மேலும், குடும்பத்தினர் அனைவரும் ஒரே வேளையில் குடல் புழுவுக்குச் சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்குக் குடல் புழுவுக்கான அறிகுறிகள் இல்லை என்றாலும்கூட, இப்படி சிகிச்சை எடுக்கலாம். தவறில்லை. எல்லாவற்றையும்விட முக்கியமானது: சுயசுத்தம் காப்பது, குறிப்பாகக் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, வெளியில் செல்லும்போது காலணி அணிந்துகொள்வதுதான் குடல் புழுத் தொல்லைக்கு 100 சதவீதம் முடிவு கட்டும்.

(அடுத்த வாரம்: தண்ணீர் குடித்தால் மாரடைப்பு ஏற்படாதா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x