Last Updated : 15 Jul, 2017 11:22 AM

 

Published : 15 Jul 2017 11:22 AM
Last Updated : 15 Jul 2017 11:22 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 41: பண்ணைக் கூறுகளின் பண்பு

பண்ணை வடிவமைப்பு முறைகள், பண்ணைக் கூறுகள் அல்லது உறுப்புகள் ஆகியவற்றைப் பற்றிப் பார்த்தோம். பண்ணைக் கூறுகளின் தன்மைகள் என்ன என்பது பற்றி இப்போது காண்போம். ஏனெனில் பண்ணைக் கூறுகள் அல்லது உறுப்புகளின் தன்மைகள் பற்றித் தெளிவான புரிதல் இருந்தால்தான் அவற்றைச் சரியான முறையில் சரியான இடத்தில் அமைக்க முடியும்.

தன்மைகள் என்பது ஒவ்வொரு பண்ணை அமைப்பின் பண்புகள் ஆகும். எடுத்துக்காட்டாக, ஒரு வேப்பமரத்தின் தன்மை என்பது கசப்புச் சுவை கொண்டது, வறட்சியைத் தாங்கி வளரும், குறைவான நீர் கொடுத்தால் போதும். நல்ல நிழல் தரும், வேப்பம் பழம் கிடைக்கும், நீண்ட நாட்களுக்குப் பின்னர் சிறந்த மரக்கட்டை கிடைக்கும்.

இதேபோல ஒரு கோழிப் பண்ணையில் கோழியின் தன்மைகளாக, அதாவது அவற்றின் தேவைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றுக்குத் தீனி, இருப்பிடம், பிற விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு என்று பட்டியலிடலாம். அதேபோல கோழியிடமிருந்து முட்டை, இறைச்சி, சாணம், குஞ்சுகள் போன்ற பொருட்கள் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு பண்ணைக் கூறுகளின் தன்மைகளை நாம் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்றுடன் ஒன்றை இணைத்தல்

இதை எளிமையாக்குவதற்கு பண்ணைக்கான கொள்வினைகள், கொடுப்பினைகள் என்று பிரிக்கலாம். ஒவ்வொரு பண்ணை உறுப்புக்கும் கொள்வினைகளும் இருக்கும், கொடுப்பினைகளும் இருக்கும். கொடுப்பினை என்பது பண்ணையில் நாம் செலுத்தும் உள்ளீடு. அதாவது கொடுப்பு + வினை என்பதாகும். ஒரு உறுப்புக்கு ஒரு பண்ணையாளர் நிறைவு செய்ய வேண்டிய தேவைகளைக் கொடுப்பினை என்று கொள்ளலாம். கொள்வினைகள் என்பது பண்ணையாளருக்கு அந்த உறுப்பிடமிருந்து கிடைக்கக்கூடிய வெளியீடு அல்லது பயன்கள் என்று கொள்ளலாம்.

வெளியீடுகளைப் பொறுத்தவரை இரண்டு வகையாக இருக்கும். ஒன்று நேரடியாகப் பயன்தரக் கூடியவை, மற்றவை விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. கோழியையே எடுத்துக்கொண்டால் கோழி முட்டை போன்ற நேரடிப் பயன் கிடைக்கும். அத்துடன் பண்ணையில் நாற்றத்தைப் போன்று காற்று மாசுபாட்டையும் ஏற்படுத்தும் தன்மைகளும் வெளியீடாக வரும். இதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஆக, வெளியீட்டைப் பொருத்த அளவில் இரண்டு வகையும் இருக்கும்.

சரி, ஏன் இந்த பண்ணைக் கூறுகளின் பண்புகளை நாம் ஆராய வேண்டும்? பண்ணை அமைப்புகளின் தன்மைகளைப் பற்றிய அறிவு இருந்தால்தான், ஒவ்வொரு அமைப்பையும் அல்லது ஒவ்வொரு உறுப்பையும் சரியாக மற்றொன்றுடன் இணைக்க முடியும்.

சிக்கலைக் களைதல்

லட்சியத் தற்சார்புப் பண்ணை என்பது தானாகவே இயங்கும் திறன் பெற்றதாக இருக்க வேண்டும். ஓர் அமைப்பு மற்ற அமைப்பின் தேவையை நிறைவு செய்வதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒன்றன் கழிவு மற்றொன்றின் உணவாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.

உண்மையில் ஒவ்வொரு அமைப்பும் பிற அமைப்பின் ஒரு தேவையையோ அல்லது பல தேவைகளையோ நிறைவு செய்வதாகவே இருக்கும். அந்த அமைப்பின் தேவை வேறொரு அமைப்பாலோ அல்லது பல அமைப்புகளோலோ நிறைவு செய்யப்படுவதாகவும் இருக்கும். நாம்தான் அது பற்றிய தெளிவின்மையின் காரணமாக சிக்கலை மேலும் சிக்கலாக்கி விடுகிறோம்.

எடுத்துக்காட்டாக மாட்டின் தேவையான தீவனத்தை, நெற்பயிரின் கழிவான வைக்கோல் நிறைவு செய்துவிடுகிறது, நெற்பயிரின் உரத் தேவையை மாட்டின் சாணம் நிறைவு செய்கிறது. அதே நெற்பயிரின் உரத்தேவையை கோழிக் கழிவும் ஆட்டுக் கழிவும் நிறைவு செய்ய முடியும். ஏன் உதிர்ந்து விழும் வேப்ப மரத்தின் இலைகள்கூட மட்கு உரமாக, மண்புழுக் கழிவாக மாற்றப்படும்போது நெற்பயிரின் உரத் தேவையை நிறைவு செய்ய முடியும்.

கழிவு… மதிப்புக் கூட்டலே!

தீவனத்தைத் தனியாக வளர்த்து அதை மாட்டுக்கான உணவாக மாற்றுவதைவிட, ஒன்றன் மீதத்தை மாட்டின் உணவாக மாற்றுவது சிறப்பானது. எளிய காய்கறிச் சாகுபடியாளர்கள் தங்களது தோட்டத்தின் உற்பத்தியில் சந்தையில் விற்க முடியாத சொத்தைக் கத்தரிக்காய்களை வீணாக்காமல் துண்டாக நறுக்கி ஆடுகளுக்குத் தீனியாகக் கொடுத்துவிடுகின்றனர். இது மிகச் சிறந்த செயல்பாடு. அவர்களுக்குப் பண்ணை வடிவமைப்பு தெரியாமல் இருக்கலாம். ஆனால், ஒன்றன் கழிவை மற்றொன்றின் உணவாக மாற்றத் தெரிந்துவைத்துள்ளனர். அது மட்டுமல்ல, ஒரு கிலோ கத்தரிக்காய் இருபது ரூபாய் என்றால், ஒரு கிலோ ஆட்டு இறைச்சி நானூறு ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. எனவே, இதுவும் ஒரு வகை மதிப்புக் கூட்டல் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

(அடுத்த வாரம்: தனித்தன்மைகள் தெரியுமா?)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x