Published : 17 Jul 2017 10:47 AM
Last Updated : 17 Jul 2017 10:47 AM

சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால்?

ஒருவருக்கு கடன் கிடைப்பதில் அவருடைய சிபில் ஸ்கோர் முக்கியமானது. குறைவான சிபில் ஸ்கோர் இருக்கும் பட்சத்தில் உங்களது கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இப்போது சில வாய்ப்புகள் மட்டுமே மீதம் இருக்கின்றன. உங்களுடைய தேவையை தள்ளிப்போட முடிந்தால், உங்களது சிபில் ஸ்கோரை உயர்த்துவதற்கு முயற்சிக்கலாம். அல்லது வங்கிகளைத் தவிர வேறு எங்கு கடன் வாங்க முடியும் என யோசிக்கலாம். ஆனால் வங்கிக்கு வெளியே இருக்கும் அனைத்து வாய்ப்புகளுக்கான வட்டி அதிகம் என்பதை மறக்க வேண்டாம்

தர மதிப்பீட்டை உயர்த்தவும்

ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் சிபில் ஸ்கோர் காரணமாக உங்களது கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் மற்ற வங்கிகளுக்கு விண்ணப்பிப்பதை நிறுத்தவும். அதிக நிதிநிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் மேலும் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் உங்களுடைய சிபில் ஸ்கோர் மேலும் மோசமடையும். ஒரு கடன் நிராகரிக்கப்படும் பட்சத்தில், குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை வேறு எங்கேயும் விண்ணப்பிக்க வேண்டாம். இந்த காலத்தை உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை உயர்த்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஏற்கெனவே மற்ற வங்கிகளில் வாங்கி இருக்கும் கடனை தொடர்ந்து செலுத்தலாம். அல்லது பல வங்கிகளில் வாங்கி இருக்கும் கடனை ஒன்றிணைக்கலாம். உங்கள் நண்பர், உறவினர்களிடம் கடன் வாங்கியாவது ஏற்கெனவே இருக்கும் கடனை கட்டி முடிக்கலாம். அதிக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இருந்தால் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். தவிர ஏற்கெனவே இருக்கும் கிரெடிட் கார்டுகளின் வரம்பில் அதிகபட்சம் 40 சதவீதம் வரை மட்டுமே பயன்படுத்தலாம்.

உங்கள் கிரெடிட் கார்டுக்கான கட்டணத்தில் பகுதி அளவு செலுத்தாமல் முழுமையாக செலுத்தவும். இந்த நடவடிக்கைகளினால் உங்களது சிபில் ஸ்கோர் உயராமல் கூட போகலாம். ஆனால் சரியான முறையில் கடனை செலுத்தி வரும் போது, உங்களுக்கு புதிய கடன் கிடைப்பதற்கான சூழல் உருவாகும். பல நிதி நிறுவனங்கள் கடந்த 12 மாதங்களுக்கு முந்தைய வரலாறுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதுதான் காரணம்.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்

வங்கி கடன் வழங்காத பட்சத்தில் உங்களுக்கு உடனடியாக பணம் தேவை எனில் சில வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) உங்களுக்கு உதவக்கூடும். இருந்தாலும் வழக்கமான வாடிக்கையாளரைவிட சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் வாடிக்கையாளர்களை என்பிஎப்சி வேறு விதமாகவே கையாளும். நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு என்பிஎப்சிகள் 11% முதல் 17% வரை வட்டி வசூலிக்கும். மாறாக மோசமாக கிரெடிட் ஸ்கோர் இருக்கும் பட்சத்தில் 18 சதவீதத்தில் இருந்துதான் கடனுக்கான வட்டி தொடங்கும். அதிகபட்சம் 28-30 சதவீதம் வரை வட்டி இருக்கக்கூடும். மிகச்சில என்பிஎப்சிகள் நிறுவனங்கள் நிலையான வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

பியர் டு பியர்

அடுத்த வாய்ப்பு பியர் டு பியர் லெண்டிங்(P2P). இணையதளத்தின் மூலமாக தனிநபர்களிடம் கடன் வாங்குவதுதான் பி2பி. இதற்காக உள்ள இணைய தளங்களில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ரூ.500 முதல் ரூ.1,500 வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். உங்களது அடையாள சான்று, வருமான சான்று, வரித்தகவல்கள் உள்ளிட்ட தேவையான தகவல்களை இணையத்தில் தாக்கல் செய்யும் பட்சத்தில், இணையதளம் கடன் வழங்குபவருடன் உங்களை இணைக்கும். கடனுக்கான வட்டி விகிதம் 12-30% வரை இருக்கும். பொதுவாக 36 மாதங்களுக்கு கடன் வழங்கப்படும். நீங்கள் வாங்கும் கடனுக்கு ஏற்ப பரிசீலனைக் கட்டணம் இருக்கும். பேர்சென்ட், லென்டென்க்ளப், லெண்ட்பாக்ஸ், ஐ-லெண்ட் உள்ளிட்ட சில பி2பி இணையதளங்கள் சந்தையில் உள்ளன.

என்பிஎப்சி, பி2பி லெண்டிங் தவிர சில இடைத்தரகு நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் வங்கிகளுடன் ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. Qbera என்னும் நிறுவனம் ஆர்பிஎல் வங்கியிடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. விண்ணப்பங்களை இந்த நிறுவனங்கள் பரிசீலனை செய்து வங்கி மூலம் கடன் வாங்கி கொடுக்கும்.

என்பிஎப்சி ஒரு படி மேல்

என்பிஎப்சி, பி2பி ஆகிய இரண்டில் என்பிஎப்சியில் கடன் வாங்குவது சிறந்தது. என்பிஎப்சி-யை ரிசர்வ் வங்கி கண்காணிக்கிறது. அடுத்து என்பிஎப்சியில் முறையாக கடனை செலுத்தும்பட்சத்தில் உங்களுடைய சிபில் ஸ்கோர் உயரும். பி2பி முறையில் தனிப்பட்ட நபர்களிடம் கடனை சரியாக திருப்பி கொடுத்தாலும் உங்களுடைய சிபில் ஸ்கோர் உயராது. தவிர பி2பி முறையில் பிரச்சினை ஏற்பட்டால் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் இல்லை. ஆனால் பி2பி-யை ஆர்பிஐ தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பரிசீலனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

-gurumurthy. k@thehindu. co. in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x