Published : 23 Jul 2017 04:04 PM
Last Updated : 23 Jul 2017 04:04 PM

பெண் அரசியல் 14: உள்ளாட்சியிலும் பெண்களின் ஆட்சி!

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் என திமுக பெண் உறுப்பினர் சட்டமன்றத்தில் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தார். இடையில் குறுக்கிட்ட அஇஅதிமுகவின் பெண் அமைச்சர், “தொட்டில் குழந்தைத் திட்டம் முதல் மகளிர் காவல் நிலையம்வரை அம்மா அரசுதான் நிறைவேற்றியது” என சாதனைகளைப் பட்டியலிட்டார்.

திமுகவின் செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், “திமுக ஆட்சியில் நடைபெற்ற திட்டங்களைப் பற்றி எங்கள் உறுப்பினர் பேசுகிறபோது அமைச்சர் எதற்காகக் குறுக்கிட வேண்டும்?” என்றார். அமைச்சர் ஜெயக்குமார் உடனே எழுந்து, “33 சதவீத இட ஒதுக்கீட்டை அம்மா ஆட்சிதான் வழங்கியது” என மீண்டும் சொல்ல, ஸ்டாலினோ, “கலைஞர் ஆட்சியில்தான் அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது” என மறுப்புத் தெரிவித்தார்.

அரசியலில் இட ஒதுக்கீடு

சுவாரசியமான இந்த விவாதத்தைச் சபையிலிருந்த மற்ற உறுப்பினர்கள் அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். மீண்டும் அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து, “நாங்கள் சமைத்தோம். நீங்கள் சாப்பிட்டீர்கள்” எனப் பலத்த சிரிப்புக்கிடையே குறிப்பிட்டார். பெண்கள் என்றாலே சமையலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற கருத்துடன், அரசியல் பலன் என்றாலே சாப்பிடுவதுதான் என்ற பொருளில் சொன்னாரா என்று தெரியவில்லை.

இரு கட்சிகளின் விவாதத்தையும் கவனித்துக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் ராமசாமி, “பஞ்சாயத்து ராஜ் சட்டத்தைக் கொண்டுவந்து மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது காங்கிரஸின் மத்திய ஆட்சி. ஆகவே, இங்கே இருவரும் சண்டை போடவும் வேண்டாம். சொந்தம் கொண்டாடவும் வேண்டாம்” என்று சொல்லி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் ராஜீவ்காந்தி ஆட்சியில் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு அந்தச் சட்டம் தமிழகத்தில் 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது.

அந்தச் சட்டத்தை அதிமுக ஆட்சி பின்பற்றிவந்ததோடு 2016-ல் அதை 50 சதவீதமாக உயர்த்துவதற்கு வழிவகை செய்யும் சட்ட திருத்தத்தையும் முன்மொழிந்தார்கள். ஆனால், அந்தச் சட்டம் நிறைவேறிய பிறகு உள்ளாட்சித் தேர்தல் இன்னமும் நடைபெறவில்லை.

ஆதிக்கத்தை ஒடுக்கிய சட்டம்

உள்ளாட்சி அரசு என்பது மத்திய, மாநில அரசுகளைப் போன்று முக்கியத்துவம் வாய்ந்த, மக்கள் நேரடியாகப் பங்கேற்கக்கூடிய அமைப்பு. 1959-ல் பஞ்சாயத்து சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அது பொதுத் தன்மையோடுதான் அமைந்திருந்தது. அன்றைக்கு கிராமங்களில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த நிலப்பண்ணையாளர்கள், முன்னாள் ஜமீன் குடும்பங்கள், சாதி, மதம், பணம் எனச் செல்வாக்கு மிக்கவர்களால் மட்டுமே பஞ்சாயத்துகளின் தலைமைக்கு வர முடிந்தது. அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவோ வெற்றிபெறவோ முடியாத நிலை இருந்தது. இப்படி கெட்டிதட்டிக் கிடந்த கிராமிய ஆதிக்க முறைகளை பஞ்சாயத்து ராஜ் சட்டம் உடைத்தெறிய முன்வந்தது.

குறிப்பாகத் தலித் - பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்கி, அவர்கள் மட்டுமே குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடுவதற்கு இந்தச் சட்டம் வழிவகுத்தது. முதன்முதலாக உள்ளாட்சி அதிகாரத்துக்குப் பெண்கள் வரக்கூடிய அரிய வாய்ப்பை இந்தச் சட்டம்தான் வழங்கியது. பெண்களின் முன்னேற்றத்தில் இது நிகழ்த்திய மாற்றம் முக்கியமானது.

பெண்கள் கையில் அதிகாரம்

ஆரம்பத்தில், ‘பொம்பளைக்கு இந்தப் பஞ்சாயத்தை ஒதுக்கீட்டாங்களாம்’ என்ற குமுறல்களையும் வருத்தங்களையும் காண முடிந்தது. எதற்கும் அஞ்சாத ஆண்பிள்ளை சிங்கங்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்கூட, இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது பயந்துதான் போனார்கள். தாங்கள் போட்டியிட வேண்டும் என்று நினைத்திருந்த ஒன்றியமோ பஞ்சாயத்தோ திடீரென பெண்ணுக்குத் தாரைவார்க்கப்பட்டதை, அத்தனை எளிதில் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வேறு வழியில்லாமல் தங்கள் வீட்டுப் பெண்களையோ கட்சி அமைப்பின் தலைவர் அல்லது தொண்டரது வீட்டுப் பெண்களையோ தேர்தல் களத்துக்குத் தயார்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு உருவானது.

“எங்க பொம்பளையாளுக்குச் சமைக்க மட்டும்தான் தெரியும். வேற ஒரு எழவும் தெரியாது” எனப் புலம்பிக்கொண்டிருந்த கணவரின் வருத்தங்களையும், மைக் பிடித்துப் பேசத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை போட்டியிட்டால் போதும் என அரசியல் கட்சிகளும் பெண்களை வலைவீசித் தேடிக்கொண்டிருந்த காட்சிகளைப் பல இடங்களில் பார்க்க முடிந்தது.

அதுவரை காடு, மலை, தோட்டம், வீடு என உழைப்பை மட்டுமே அறிந்திருந்த பெண்கள் வேட்பாளர்களாகி வீதியில் வலம்வந்த காட்சிகள் நடந்தேறின. தரையில் அமர்ந்தே பழக்கப்பட்ட பெண்கள் முதன்முதலில் மற்ற ஆண்களுக்கு மத்தியில் நாற்காலியில் அமர வாய்ப்பு உருவானது. மாவட்ட ஆட்சியர் முதல் நிர்வாக அமைப்புகளின் ஊழியர்வரை யாராக இருந்தாலும் அவர்களிடம் கேள்வி கேட்பதற்கான அதிகாரத்தைப் பெறத் தயார் ஆனார்கள். பால் கணக்கு, மளிகைக் கணக்கைத் தாண்டி பஞ்சாயத்து அமைப்பின் வரவு செலவு கணக்குகளையும் கவனிக்க இருந்தார்கள்.

உடனே, குழந்தைகளை யார் கவனிப்பார்கள், குடும்பம் என்னாவது என்பது போன்ற அறியாமை நிறைந்த கேள்விகளும் முணுமுணுப்புகளும் கடைசியில் காணாமல் போயின. போர்க்களத்தில் நிற்கும் எங்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவை எதற்கு என்ற கேள்வியோடு அரசியல் களம் புகுந்தார்கள் பெண்கள்.

சவால் நிறைந்த களம்

உள்ளாட்சியில் 1,32,458 பதவிகளில் 44,000-க்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருந்தார்கள். வெற்றிபெற்றவர்கள் பெண்களாக இருந்தாலும் வெற்றி மாலைகள் என்னவோ அவர்களது வீட்டு ஆண்கள் கழுத்திலேதான் விழுந்தன. பஞ்சாயத்துத் தலைவிகளில் பலர் பழைய நிலையிலேயே வீட்டு வேலையைத் தொடர வேண்டிய நிர்பந்தமும் இருந்தது. அவர்களது உறவினர்கள்தான் உள்ளாட்சி அமைப்புப் பணிகளைக் கவனித்தனர். இந்த நடைமுறைகூட சில காலம்தான் நீடித்தது.

பெண் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிகளுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப் பல பெண்கள் அமைப்புகள் முன்வந்தன. பஞ்சாயத்துத் தலைவிகளாக எப்படிச் சுயமாகச் செயல்படுவது, பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்பது உள்ளிட்ட தலைமைப் பண்புப் பயிற்சிகளும் வழிகாட்டுதல்களும் அவர்களின் சுயேச்சையான செயல்பாட்டை ஊக்குவிப்பதற்குப் பெரிதும் உதவின.

ஆனாலும் குடும்பம், சாதி, மதம், சமூகம் ஆகியவற்றிலிருந்து எழுந்துவந்த சவால்கள் எளிதானதாகவோ சாதாரணமானதாகவோ இல்லை என்பதை அவர்களுக்கு நேர்ந்த சில துயரச் சம்பவங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

(முழக்கம் தொடரும்)

கட்டுரையாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x