Last Updated : 05 Jul, 2017 01:31 PM

 

Published : 05 Jul 2017 01:31 PM
Last Updated : 05 Jul 2017 01:31 PM

அம்மாவின் சேட்டைகள் 08: நடனம் ஆடிய நிழல்!

அம்மாவின் விநோதமான விளையாட்டுகளுள் ஒன்று நிழலுடன் விளையாடுவது. நிழல் விளையாட்டு அம்மாவுக்குப் பிடித்தமானது. அதைக் கேட்ட நான், அதுபோலவே செய்து பார்ப்பேன். ஆனாலும் எல்லாவற்றையும் செய்து பார்க்க முடிவதில்லை. அம்மா சொல்லும்போது நிழல்தானே என்பது போலிருக்கும். “நிழல்னா எனக்கு ரொம்பப் புடிக்கும். தனியா இருக்கும்போது எனக்குத் தோழி மாதிரி. வீட்டைவிட்டு வெளிய வந்தால் துணைக்கு வரும் ஒருத்தி நிழல்தான்.

வா ஓடுவோம் என்று ஓடுவேன். நிற்போம் என்று நிற்பேன். நான் சொல்வதையெல்லாம் அது கேட்கும். செய்வதையெல்லாம் அதுவும் செய்யும். அது எனக்கு முன்னால இருந்தா, நிழலுடன் டான்ஸ் ஆடுவேன். அப்பதான் ஆட்டத்தைப் பார்க்க முடியும். பின்னால் இருந்தால் ஓடுவேன். ஓடிவா, என்னைப் புடின்னு சொல்லிக் கிட்டுஅழைத்துச் செல்வேன். நிழல் என்னைவிட உயரமாவதும் குட்டையாவதும் எனக்கு அதிசயமா இருக்கும். ‘நிழலே நீ ஒரு வித்தைக்காரி. முன்னால் வருகிறாய். பின்னால் செல்கிறாய். உயரமாகிறாய். குட்டச்சியாகிறாய். வளருகிறாய். சுருங்குகிறாய்… ஆனால் நீ பேசுவதில்லை. நீ எப்பொழுதுமே கறுப்பிதான். என் கலர் பாவாடையைப்போல் உனக்கு இல்லை. நான் உன்னிடம் எவ்வளவு பேசுகிறேன். நீ அப்படியில்லை. வருகிறாய். தொலைகிறாய். உனக்காக நான் வெயிலிலும் வெளிச்சத்திலும் இருக்க முடியுமா என்று நிழல்கூட பேசுவேன்.

திருவிழாக் காலத்தில் ஊரில் பெட்ரோமாக்ஸ் லைட் வைத்திருப்பார்கள். அதன் முன் டான்ஸ் ஆடினால் இருட்டில் அழகாக இருக்கும். நான் நிழலுடன் விளையாடுவதைப் பெரியவங்க பார்ப்பாங்க. இப்படி நிழலைப் பார்த்தால் நீ வளரமாட்டாய்னு அறிவுரை சொல்வாங்க. அதனால் கண்ணை மூடிக்கொண்டு அரைக்கண்ணால் பார்ப்பேண்டி தங்கமே. அது எவ்வளவு பொய் என்று நான் உயரமாக வளர்ந்தவுடன்தான் புரிந்தது. ஆனால் நிழலைப் புரிஞ்சிக்கிறது கஷ்டம்.”

அம்மாவின் நிழல் கதை இப்படி மட்டும் இருக்காது. வேறவேற மாதிரி இருக்கும். அப்பப்ப அம்மா பேய் பற்றிப் பேசுவார்.

“பேய்னா நிழல், நிழல்னா பேய்.” வழக்கம்போல அம்மாவின் தத்துவப் பேச்சு எனக்குப் புரியவில்லை. “இங்கதான் டவுனுல பேயெல்லாம் அலையிறதில்ல. எங்க ஊர்ல அவ்வளவு பேய். எல்லாம் ராத்திரியில அலையும். ஆளே இல்லாம நிழல் தெரியும்; அதுதான் பேய். செத்தவுங்க நம்மளைத் தூங்கவுடாம ராத்திரியில துரத்திக்கிட்டு திரியுவாங்க. அவுங்க நம்ம கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க. நிழலை வச்சுதான் பேயையே கண்டுபிடிப்பாங்க. பேய் பூதமெல்லாம் பொய்யின்னும், சாமியையும் பேயையும் கடந்ததுதான் மனித அறிவு…” - நீளமான அம்மாவின் பேச்சு முடிக்க முடியாதது.

“இரண்டாம் வகுப்புப் பாடல்தான் பாப்பா, நான் நிழலைப் புரிந்துகொள்ள உதவுச்சி” என்று அம்மா சொன்ன கதை வித்தியாசமானது. அந்தப் பாடலைக் கிழக்கே நின்றுகொண்டு பாடணுமாம். இடக்கைப் பக்கம் வடக்கு, வலக்கை பக்கம் தெற்கு, சூரியன் உதிக்கும் திசை கிழக்கு, அது மறையும் திசை மேற்கு. அம்மா வீடு கிழக்கு பார்த்த வாசப்படி. அந்தப் பாடலை வீட்டுக்கு முன் நின்று கை நீட்டிக்கொண்டு பாடுவார்களாம். இந்தப் பாட்டுக்கும் நிழலுக்கும் சம்பந்தம் இல்லையாம்.

ஆனாலும் பாலு மாமா விளக்கினபோது உதவியா இருந்ததாம். ஒருநாள் காலையில் அம்மா நிழலோடு விளையாடிக்கொண்டிருந்தாராம். ஒரு குச்சியை வச்சி அதை அடித்தாராம். அப்போ அங்கே வந்த மாமா, என்ன செய்யறே அப்படின்னு ஆசையா கேட்டாங்களாம். அப்போதான் நிழலைச் சூரியனோடு சேர்த்துப் பார்க்கச் சொல்லிக் கொடுத்தாங்களாம். திசையோடு பார்க்கச் சொல்லிக் கொடுத்தாங்களாம். சொல்லிக்கொடுக்கும்போது, “சூரியனின் வெளிச்சம் உன் மேல இருக்கு.

அந்த வெளிச்சம் கீழ விழ முடியாம இருட்டு கீழ தெரியுது. இங்க வா வீட்டுக்குள்ள போகலாம். நிழல் இல்ல. சூரியன் இப்ப எங்க இருக்கு? வீட்டு மேல. தெற்குக்குத் திரும்பி நட. இப்ப நிழல் முன்னாலயும் இல்ல. பின்னாலயும் இல்ல. சாயங்காலமும் இதேபோல் இப்படியே ஓடு. ஓடும்போது எப்படியிருக்கு என்று பார். பார்த்துவிட்டு என்னை வந்து பார்” அப்படின்னு சொன்னாங்களாம்.

அம்மாவுக்கு நிழல் பற்றி நிறைய தெரிந்துகொண்டதுபோல் இருந்ததாம். நிழல் பத்தி இன்னும் இன்னும் நான் தெரிந்துகொள்ளணும்னு அம்மாவுக்கு ஆசை. அதுக்காக “அந்தக் காலத்துல ஏது சைன்ஸ்?” அப்படின்னு அலுத்துக்குவாங்க. கூடவே, “இப்ப மட்டும் என்னவாம்? பாடம் மட்டும்தான் பெருசா இருக்கு. அறிவியல் அறிவு இல்லையே?” அப்படின்னு சொல்லுவாங்க. அப்பொழுதெல்லாம் அம்மா என்னையும் சேர்த்து கேள்வி கேக்குற மாதிரியே இருக்கும்.

அம்மாவின் நிழல் கதையில் எனக்குப் பிடிச்சதும், பார்க்க வேண்டும் என ஆசையாக இருப்பதும் அவங்க பொம்மலாட்டம் பார்த்ததுதான். “ராமாயணத்துல சுந்தர காண்டம் பாவைக்கூத்து. எல்லாரும் டிக்கெட் வாங்கிக்கிட்டு தடுத்து வச்சிருக்கிற தட்டிக்குள்ள உக்காந்துகிட்டிருக்கோம். ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சி. எல்லாரும் ஆட்டம் பார்க்குறாங்க. ஆனா எனக்கு மட்டும் முடியலை. வெள்ளைத் துணிக்கு வெளியில பொம்ம ஆடாம ஏன் உள்ளே ஆடுது? துணிக்குப் பின்னாடி லைட்டு அணைஞ்சுதுன்னா ஆட்டம் காணாம போகுது.

எப்படி அப்படி நடக்குது ன்னு என் தலையே வெடிச்சி போச்சி. என்னை யோசிக்க விடாம அவுங்க பாட்டும், பாட்டு மாதிரி வசனமும், ஆர்மோனியப் பெட்டிச் சத்தமும் இருந்தது. அடுத்த நாள் பகல்ல அங்க போனேன். பொம்மலாட்டம் நடத்துற வீடு. பொம்மலாட்ட பொம்மையில வேலை செய்துகிட்டு இருந்தாரு. ஏன் இந்தப் பொம்மை முன்னால வந்து ஆடலைன்னு கேட்டேன். நிழலாட்டம்னாரு. எனக்குப் புரிஞ்சுது, ஆனா புரியல.” இதைச் சொல்லி முடிச்ச அம்மா என்னைப் பார்த்து “என் அருமை செல்லமே, இப்பல்லாம் என் நிழலே நீதான்” என்று சொன்னார்.

(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x