Last Updated : 14 Jul, 2017 11:04 AM

 

Published : 14 Jul 2017 11:04 AM
Last Updated : 14 Jul 2017 11:04 AM

இணைய உலா: உலக சினிமாவை நேசிக்கும் இளைஞர் படை!

பொதுவாக நம்மில் பலருக்கும் சினிமா ரசனை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். சென்ற தலைமுறையினரில் திரையரங்குகளில் ஒரு படத்தைக்கூட விடாமல் பார்த்தவர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இணையத்தைத் தங்கள் விரல் நுனியில் வைத்திருக்கும் இன்றைய நவீனத் தலைமுறையினர் திரையரங்குக்குப் பதிலாகக் கணினி, ‘ஹார்ட் டிஸ்க்’ முழுவதும் படங்கள் என்று காலத்துக்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். சினிமா மீது உள்ள தீராக் காதலும் சமூக ஊடகத்தின் அசுர வேகமும் கைகோத்தால் என்ன ஆகும்? முகநூலில் செயல்பட்டுவரும் ‘வேர்ல்டு மூவி மியூசியத்தின்’ (World Movie Museum) பின்னணி இதுதான்.

‘வேர்ல்டு மூவி மியூசியம்’ 12 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு முக நுால் பக்கம். வெறும் 8 உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பக்கம், முதல் ஏழு மாதங்களில் சம்பாதித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 12,000. உறுப்பினர்கள் எல்லோரும் எல்லா மொழி, நாட்டுத் திரைப்படங்களையும் பார்த்து ரசிப்பவர்கள். படம் பற்றித் தொடர்ந்து விமர்சனங்கள், கருத்துகள், விவாதங்கள் என்று எப்போதும் சூட்டோடு சூடாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள்.

தொடந்து பதிவிடுபவர்கள், எப்போதாவது பதிவிடுபவர்கள், மவுனமானவர்கள் என உறுப்பினர்கள் பல ரகங்களில் உள்ளனர். இந்தப் பக்கத்தில் சென்று ஸ்டேட்டஸ் பெட்டிக்குள் “கட்டாயமாகப் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியல் சொல்லுங்கள்” என்று தட்டினாலே போதும், சில நிமிடங்களில் படங்களின் பரிந்துரைகள் பின்னூட்டத்தில் வந்து குவியும்.

‘குரூப் அட்மின்கள்’ 8 பேரைப் பற்றி ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது. இவர்கள் யாரும் இன்னும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டதில்லை. ஒருவர் திருவொற்றியூரில் இருக்கிறார், ஒருவர் நாமக்கல், இன்னொருவர் இலங்கை, மற்றவர்கள் திருச்சி, சேலம், வடபழனி, திருச்செங்கோடு, பெங்களுரு என்று ஆளுக்கொரு திசையில் சிதறிக் கிடக்கிறார்கள். இடைவெளியைக் கடந்து இவர்களை ஒன்றுசேர்த்திருப்பது சினிமா என்ற ஈர்ப்பு விசை. இந்த குரூப் அட்மின்கள் யாரும் சினிமாத் துறையைச் சார்ந்தவர்கள் அல்ல, ஆனால் சினிமாவைச் சேர்ந்தவர்கள் பலர் இங்கு உறுப்பினர்களாக உள்ளனர்.

‘குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், ‘அறம்’ படத்தின் இயக்குநர் ந.கோபி நயினார், சினிமா எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ் என்று சிலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குரூப் அட்மின்களில் ஒருவரான ரமேஷைச் சந்திக்கத் திருவொற்றியூருக்குப் போனோன். ரமேஷ் துணிக்கடையை நடத்திவருகிறார். கடையில் வாடிக்கையாளர்கள் வரும் நேரம் போக மற்ற நேரங்களில் தன் கணினியில் படம் பார்ப்பதுதான் இவருக்குத் தினமும் வேலை. ஒரு நாளுக்குக் கட்டாயம் 2 படங்களாவது பார்த்துவிடுவாராம்.

ரமேஷுக்குச் சினிமா மோகம் தொற்றியது பற்றிப் பேச ஆரம்பித்தார். “சினிமா ஆசை எங்க அப்பாவிடமிருந்து வந்தது. அவர் நிறைய படம் பார்ப்பார், என்னையும்கூடத் தியேட்டருக்கு அழைத்துப் போவார். 2000-ல் இருந்துதான் உலக சினிமா பார்க்க ஆரம்பித்தேன். வந்தது, போனது என நிறையப் படங்கள் பார்த்தாகிவிட்டது. இனியாவது நல்ல சினிமா பார்ப்போமே என்று சினிமா பற்றிப் பதிவுகள் போடுகிற பல முகநூல் பக்கத்தில் உறுப்பினராகினேன். இப்படித்தான் இந்தப் பக்கத்துல இருக்குற அட்மின்களுடன் பழக்கம் ஏற்பட்டது. தனியா ஒரு சினிமா பக்கம் தொடங்கி நாங்க பார்த்த படங்களைப் பதிவிடத் தொடங்கினோம். உறுப்பினர்கள் நினைத்ததைவிட அதிகமாக வரத்தொடங்கியதால் எங்கள் பக்கம் பற்றி அட்மின்கள் எல்லாரும் வீடியோ ஷேர் பண்ணத் தொடங்கினோம்” என்கிறார் ரமேஷ்.

எட்டு அட்மின்களும் எப்போது சந்தித்துக் கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு வரும் தீபாவளிக்குத் திட்டம் போட்டிருப்பதாகச் சொன்னார். பதிவு போடுவதோடு நின்றுவிடாமல் வாராவாரம் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு படத்தைக் கலந்தோலோசித்து எழுதுகிறார்கள். அட்மின்களில் ஆஷிக் என்பவர் புத்தகப் புழு. தனக்குப் பிடித்த படங்களில் முக்கியமான போஸ்டர்களை ஒன்றுதிரட்டி மின்னூலாகத் தயாரித்து இந்தப் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். “அடுத்த கட்டமாகச் சிறந்த குறும்படங்களைத் தேர்வுசெய்து ஒரு ஃபெஸ்டிவல் போலப் பண்ணலாம்னு இருக்கோம்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் ரமேஷ்.

நீங்களும் உலக சினிமா மீது தீரா ரசனையுடையவர் என்றால் முகநூலில் வேர்ல்ட் மூவி மியூசியம் பக்கம் வந்து பாருங்களேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x