Last Updated : 22 Jul, 2017 12:00 AM

 

Published : 22 Jul 2017 12:00 AM
Last Updated : 22 Jul 2017 12:00 AM

சந்தேகம் சரியா? 45: தேவைக்குத் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு ஏற்படாதா?

என் கணவர் எப்போதுமே சரியாகத் தண்ணீர் குடிக்க மாட்டார். சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் தேவைக்குத் தண்ணீர் குடித்தால் மாரடைப்பு ஏற்படாது என்று கூறினார். என் கணவர் அதை மறுத்தார். கொலஸ்டிராலுக்கும் மாரடைப்புக்கும்தான் தொடர்பு உண்டே தவிர, தண்ணீர் அருந்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பில்லை என்கிறார் என் கணவர். யார் கூறுவது சரி?

உறவினர் கூறுவதுதான் சரி.

கொலஸ்டிராலுக்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பு பரவலாக அறியப்பட்டது. ஆனால், தண்ணீர் அருந்துவதற்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

என்ன இருக்கிறது?

‘நீரின்றி அமையாது உலகு’. இது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு ‘நீரின்றி அமையாது ஆரோக்கிய உடல்’ என்பதும் உண்மை. மனித உடல் திட வடிவத்தில் இருந்தாலும், அதில் திரவ வடிவ தண்ணீர்தான் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. சராசரி எடையுள்ள ஒருவரது உடலில் 60 – 70 சதவீதம் தண்ணீர்தான் இருக்கிறது. எளிதாகச் சொல்ல வேண்டுமானால், 60 கிலோ எடையுள்ள ஒருவரின் உடலில் சுமார் 34 லிட்டர் தண்ணீர் இருக்கிறது.

தண்ணீர் உருவாகும் மண்ணைப் பொறுத்து கால்சியம், சோடியம், மக்னீசியம், இரும்பு, குளோரைடு, பைகார்பனேட், பாஸ்பேட், சல்பேட் எனப் பல தாதுக்கள் இருக்கும். மென் தண்ணீரில் இந்தத் தாதுக்கள் மிகவும் குறைந்த அளவில் இருக்கும். கடின தண்ணீரில், அதாவது உப்புத் தண்ணீரில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருக்கும். இந்தத் தாதுக்கள்தான் தண்ணீரில் உள்ள சத்துகள்.

ஏன் அவசியம்?

தண்ணீர் இல்லாமல் உடலில் எந்த செல்லும் இயங்க முடியாது. உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் தண்ணீர் தேவை. திசுக்களுக்குத் தண்ணீர் தேவை. ரத்த உற்பத்திக்கு, செல்களின் வளர்சிதைமாற்றப் பணிகளுக்கு, வளர்ச்சிப் பணிகளுக்குச் சரியான ஊடகம் தண்ணீர்தான். மேலும், ரத்த ஓட்டத்துக்கு, சுவாசத்துக்கு, உணவு செரிமானத்துக்கு, வியர்ப்பதற்கு, சிறுநீர் கழிப்பதற்கு, உடலின் வெப்பத்தைச் சமப்படுத்துவதற்கு என உடலின் முக்கியமான இயக்கங்களுக்கும் தண்ணீர் தேவை.

வயது, உடல் எடை, உடல் உழைப்பு, உணவுப் பழக்கம், காலநிலை, நோய்நிலை எனப் பல காரணிகள் ஒருவருடைய தண்ணீர்த் தேவையை தீர்மானிக்கின்றன. என்றாலும், ஆரோக்கியமாக உள்ள ஒருவர் தினமும் 2,400லிருந்து 3,000 மிலிவரை தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொன்னால், ஒரு கிலோ உடல் எடைக்கு 35 மி.லி. தண்ணீரை தினமும் அருந்த வேண்டும்.

இதயத்துக்கு உள்ள தொடர்பு

ரத்த பிளாஸ்மாவில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. ரத்தச் சிவப்பணுவில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது. தண்ணீரின் அளவு உடலில் சரியாக இருந்தால், இந்த அளவுகள் மாறாது; ரத்தம் திரவ நிலையில் இருக்கும். அப்போது இதயத்துக்குத் தேவையான ரத்தம் சரியாகக் கிடைக்கும். இதனால், இதயத்தின் அழுத்த விசையும் (Work load) சரியாக இருக்கும்.

அடுத்து, ரத்தச் சுற்றோட்டத்தில் ரத்தம் உறைந்து விடுவதுதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணம். ரத்தத்தில் ஃபைப்ரினோஜன் (Fibrinogen) எனும் ‘ரத்த உறைவுப் பொருள்’ உள்ளது. உடலில் ரத்தக்காயம் ஏற்படும்போது ரத்தக்கசிவைத் தடுப்பதும் கட்டுப்படுத்துவதும் இந்த ஃபைப்ரினோஜன்தான்.

ரத்தம் திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஃபைப்ரினோஜன் தன் வேலையைச் சரியாகச் செய்யும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, அது திடமாகிவிட்டால், ரத்தக் குழாய்க்குள்ளேயே ரத்தம் உறைவதற்கு ஃபைப்ரினோஜன் ஏற்பாடு செய்துவிடும். அப்போது மாரடைப்புக்கு சாத்தியம் உண்டாகும்.

மாரடைப்புக்கு உள்ள தொடர்பு

ஒருவர் தேவைக்குத் தண்ணீர் அருந்தாவிட்டால், முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள ‘கொலாட்டிரல்ஸ்’ (Collaterals) எனும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் மூடிக்கொள்கின்றன. இவற்றின் முக்கியத்துவம் என்ன? முதன்மை மின்சார இணைப்பு நின்று போனால், யு.பி.எஸ். (UPS) கருவி தடங்கல் இல்லாமல் மின் விநியோகத்தைப் பார்த்துக்கொள்வது போலத்தான் இந்த நுண்ணிய ரத்தக்குழாய்கள் நமக்கு உதவுகின்றன.

அதாவது, இதயத் தசைகளுக்கு ரத்த விநியோகம் செய்யும் முதன்மை ரத்தக் குழாய்களான கரோனரி தமனிகளில் அடைப்பு உண்டாகி, மாரடைப்பு ஏற்படும்போது, இவைதான் இதயத் தசைகளுக்கு ஆபத்பாந்தவன்களாக ரத்தம் கொடுக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு தள்ளிப்போகும் அல்லது மாரடைப்பின் கடுமை குறையும்.

கரோனரி ரத்தக்குழாய் அடைப்புக்கு ஸ்டென்ட் சிகிச்சை அல்லது பைபாஸ் அறுவைச் சிகிச்சையைப் பெறும்வரை உயிரைத் தாங்கிப் பிடிப்பவை இந்த நுண்ணிய ரத்தக் குழாய்கள்தான். ஆகவே, இவை சரியாக ரத்தம் விநியோகம் செய்ய வேண்டுமானால், தேவைக்குத் தண்ணீர் அருந்த வேண்டியது முக்கியம்.

அடுத்து, குறைவாகத் தண்ணீர் அருந்துவதால் உடலில் நீர் வறட்சி (Dehydration) ஏற்படும் அல்லவா? இந்த நிலைமை நீடித்தால், ரத்தத்தின் அடர்த்தி (Viscosity) அதிகரிக்கும். அப்போது ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இது மாரடைப்புக்கு வழி அமைக்கும். மேலும், அதிக அடர்த்தியுள்ள ரத்தம் உடலைச் சுற்றிவருவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ரத்தச் சுற்றோட்டத்தின் வேகம் குறையும். இதனால், லேசாக உள்ள அல்லது ஆரம்ப நிலையில் உள்ள அல்லது வெளியில் தெரியாமல் மறைந்துள்ள மாரடைப்பானது, நாம் சிறிதளவு கடின வேலைகளைச் செய்யும்போதுகூட கடுமையாகி உயிருக்கு ஆபத்தை வரவழைக்கலாம்.

யாருக்கு மிகவும் அவசியம்?

தினமும் தேவையான தண்ணீரை அருந்தும் பழக்கம் எல்லோருக்கும் அவசியம்தான் என்றாலும், புகை பிடிப்பவர்கள், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், பிறவி இதயநோய் உள்ளவர்கள், ஏற்கெனவே மாரடைப்பு வந்து சிகிச்சை பெறுபவர்கள், கர்ப்பிணிகள், சுருள் சிரை நோய் (Varicose vein) உள்ளவர்கள், அடிக்கடி அதிக தூரம் பயணம் செய்பவர்கள், காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய் உள்ளவர்கள், வெயிலில் வேலை செய்பவர்கள் ஆகியோர் தங்கள் தேவைக்கு தினமும் தண்ணீர் அருந்தி, உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாரடைப்பைத் தடுக்க உதவும் வழிகளில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

(அடுத்த வாரம்: செல்போன் கோபுரக் கதிர்வீச்சால் புற்றுநோய் வருமா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x