Published : 12 Jul 2017 11:27 AM
Last Updated : 12 Jul 2017 11:27 AM

டிங்குவிடம் கேளுங்கள்: எடை அதிகரித்தால் பூமி என்னாகும்?

மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பூமியின் எடை அதிகரிக்குமா? அளவுக்கு அதிகமாக எடை அதிகரித்தால் பூமி என்னாகும் டிங்கு?

– வெ. லாவண்யா, 8-ம் வகுப்பு, தூய வளனார் பள்ளி, தஞ்சாவூர்.

ஒரு பொருளை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. உயிர்கள் இந்தப் பூமியிலிருந்தே தோன்றி, பூமியிலேயே மடிகின்றன. ஆக்கமும் அழிவும் தொடர்ந்துகொண்டிருப்பதால், ஏறக்குறைய சமன் ஆகிவிடும். இதனால் பூமியின் எடை அதிகரிக்காது லாவண்யா.

நான் வாள் பயிற்சி பெறுவதற்கு உதவுவாயா டிங்கு?

– ப்ரியதர்ஷினி.

நீங்கள் எந்த மாநிலம், எந்த ஊர் என்றெல்லாம் குறிப்பிடாமல் மெயில் அனுப்பினால் நான் எப்படி உதவ முடியும் ப்ரியதர்ஷினி? கேள்வி கேட்பவர்கள் தங்கள் பெயர், வகுப்பு, பள்ளி, ஊர் போன்றவற்றைக் குறிப்பிட்டு அனுப்பினால் மட்டுமே பதிலளிக்க முடியும் நண்பர்களே!



பச்சோந்தியின் நாக்கில் பூச்சிகள் எப்படி ஒட்டிக்கொள்கின்றன டிங்கு?

– ஆர். கார்த்திகேயன், அருப்புக்கோட்டை.

பூச்சிகளை உணவாகச் சாப்பிடும் விலங்குகளுக்கு இயற்கையே ஒரு தகவமைப்பை வழங்கியிருக்கிறது. இவற்றின் நாக்குகள் பசைத் தன்மையுடன் காணப்படுகின்றன. பூச்சிகளைக் கண்டதும் நாக்கை நீட்டினால், அவை தப்பிச் செல்ல முடியாமல் ஒட்டிக்கொள்கின்றன. பச்சோந்தி மட்டுமில்லை, பல்லி, தவளை போன்றவற்றின் நாக்குகளிலும் பசை உண்டு கார்த்திகேயன்.



காந்தியடிகளிடம் உனக்குப் பிடித்த குணம் எது டிங்கு?

– எம். கல்பனா, ஆறாம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, குன்றத்தூர்.

எளிமை, அகிம்சை, கொள்கையில் உறுதி, சகிப்புத்தன்மை போன்ற பல விஷயங்கள் காந்தியிடம் எனக்குப் பிடிக்கும் கல்பனா. இன்று நம் நாடு காந்தியிடமிருந்து சகிப்புத்தன்மையைத்தான் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்.



நானும் காவ்யாவும் நெருங்கியத் தோழிகள். திடீரென்று எங்களுக்குள் சண்டை வந்துவிட்டது. அவள் மீதுதான் தவறு. ஆனாலும் இதுவரை என்னிடம் மன்னிப்பும் கேட்கவில்லை, பேசவும் இல்லை. தப்பு செய்தவளே இப்படியிருக்கும்போது நான் ஏன் பேச வேண்டும் என்று இருந்துவிட்டேன். ஆனால் என்னால் அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது டிங்கு?

– வி. பத்மப்ரியா, ஈரோடு.

எவ்வளவு நெருங்கிய நட்பாக இருந்தாலும் எப்போதாவது இப்படிக் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்புதான். இதை எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதில்தானே உங்கள் நட்பின் சிறப்பு இருக்கிறது! அன்பானவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்துவிடலாம். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம். கோபத்தில் பேசாமல் இருந்துவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் தோழியிடம் பேசாமல் இருப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது அல்லவா? எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல், உடனே சென்று இயல்பாகப் பேசுங்கள். அவரும் பேசுவார்.

தன் செயலுக்கு வருத்தம்கூடத் தெரிவிப்பார். அப்படித் தெரிவிக்காவிட்டாலும் உங்கள் மீதுள்ள அன்பும் மதிப்பும் அவர் மனதில் அதிகமாகும். நட்பு இன்னும் ஆழமாகும். உங்கள் நட்பில் நல்ல விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற சண்டைகளை மறந்துவிடுங்கள். நீண்ட காலம் உங்கள் நட்பு நிலைத்திருக்க வாழ்த்துகள் பத்மப்ரியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x