Last Updated : 23 Jun, 2017 10:58 AM

 

Published : 23 Jun 2017 10:58 AM
Last Updated : 23 Jun 2017 10:58 AM

வேலையற்றவனின் டைரி 34: அது ஒரு பஜ்ஜிக் கலகம்!

தமிழர்களின் மாலை வாழ்க்கையிலிருந்து என்றென்றும் பிரிக்க முடியாத விஷயம் பஜ்ஜி. தமிழ்நாட்டில் மாலை நான்கு மணிக்கு மேல், லட்சக்கணக்கில் சுடப்படும் பஜ்ஜிகளின் வியாபாரம், கோடிக்கணக்கான ரூபாய் இருக்கும். ஆனால், மனிதர்கள் ருசியான உணவைத் தின்பதற்கு எதிராக எப்போதும் இயங்கும் டாக்டர்கள், எண்ணெய்ப் பண்டங்கள் உடலுக்குக் கெடுதி என்கிறார்கள். ஏனோ தெரியவில்லை… ஆண்டவன் எப்போதும் கெட்டதில்தான் அபாரமான ருசியை வைத்திருக்கிறான்!

இப்போது பஜ்ஜிகளுக்குப் போட்டியாக நிறைய ஸ்நாக்ஸ் வகைகள் வந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, மாலை வேளையில் பஜ்ஜி, போண்டாவை விட்டால் வேறு ஸ்நாக்ஸ் கிடையாது. பஜ்ஜிக் கடை இருக்கும் இடத்தைப் பொறுத்து வியாபாரம் களை கட்டும். உதாரணத்துக்கு மகளிர் கல்லூரிக்கு எதிரில் பஜ்ஜி போட்டால், மாலையில் கல்லூரி விடும் நேரத்தில் பசங்களின் கும்பல் சேர்ந்துவிடும். கல்லூரியிலிருந்து முதல் பெண் வெளிவரும்போது ஆரம்பித்து, கடைசிப் பெண்ணும் வெளியேறி, வாட்ச்மேன் காலேஜ் கேட்டைச் சாத்தி, பூட்டை இழுத்துப் பார்த்துவிட்டு, சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிய பிறகுதான் நம்மாட்கள் கடையிலிருந்து கிளம்புவார்கள். அதுவரையிலும் கல்லூரி வாசலைப் பார்த்தபடி பசங்கள் மானாவாரியாக பஜ்ஜியை உள்ளே இறக்கிக்கொண்டேயிருப்பார்கள்.

எனது பள்ளிக் காலத்தில், முதன்முதலாக பஜ்ஜி சாப்பிட்டபோது, அது வாழ்நாள் முழுவதும் ஒரு நிழல்போல என்னைத் தொடரும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. அன்றிலிருந்து எனக்கு மாலை நான்கு மணிக்கு மேல், ஏதேனும் எண்ணெய்ச் சட்டிக்கருகில் நிற்காவிட்டால் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். வேறு வழியின்றி, தினமும் பஜ்ஜி சாப்பிட்டே ஆக வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறேன்.

எப்போதும் எனது ஃபேவரைட் வெங்காய பஜ்ஜிதான். அதுவும் கடலைமாவுக்குள் வெங்காயம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது. வெங்காயத்தின் விளிம்புகள், பஜ்ஜிக்கு வெளியே நீட்டிக்கொண்டு, எண்ணெய் மினுமினுப்புடன் பொன்னிறத்தில் நம்மைப் பார்த்து கண்சிமிட்டும்போது, அழகுப் பெண் ஒருவர் கண் சிமிட்டுவதுபோல இருக்கும்.

வெங்காய பஜ்ஜிக்கு அடுத்து பிடித்த ஐட்டம், வாழைப்பழத்தைச் சீவி கேரளாவில் போடப்படும் பழ பஜ்ஜி. இந்த பழ பஜ்ஜியின் விசேஷம் என்னவென்றால், இரண்டு பழ பஜ்ஜி சாப்பிட்டால் பிறகு ஆயுசுக்கும் உங்களுக்குப் பசியே எடுக்காது என்பது மட்டுமல்ல; உங்கள் பரம்பரைக்கே பத்துத் தலைமுறைக்குப் பசி எடுக்காது. அப்படி வயிற்றை அடைத்துவிடும். இவ்வாறு ஸ்டேட் விட்டு ஸ்டேட் சென்றாலும் விடாது பஜ்ஜி தின்பவன் நான்.

எனது பஜ்ஜி மோகத்தால், நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தபோது, என் ஹாஸ்டலில் ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. தினமும் மாலையில் பள்ளி விட்டவுடன், பஜ்ஜி கடைக்குச் செல்வேன். ஒரு நாள் சென்றபோது கையில் காசு இல்லை. அங்கு அருளும் மோகனும் ஒரு கவர் நிறைய பஜ்ஜி வாங்கிக்கொண்டிருந்தார்கள். கடவுள் அவர்களைத் தின்பண்டங்கள் தின்பதற்கென்றே படைத்து, பூமிக்கு அனுப்பியிருந்தார். தூங்கும் நேரத்தைத் தவிர, வாய் எப்போதும் எதையாவது அசைபோட்டுக்கொண்டேயிருக்கும். அவர்கள் என் நெருங்கிய நண்பன் செந்திலுக்கு மிகவும் நெருக்கம் என்பதால், என் கையில் காசில்லையென்றாலும் எனக்கு பஜ்ஜி வாங்கித் தருவார்கள்.

அன்று என்னைப் பார்த்தவுடன், அவர்கள் சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். வேறு எங்காவது அவர்கள் அப்படி செய்திருந்தால், ‘போங்கடா’ என்று வந்திருப்பேன். ‘பஜ்ஜிக் கடையில் தன்மானம் பார்க்கக் கூடாது’ என்று சாஸ்திரங்கள் சொல்வதால், நான் அவர்கள் அருகில் சென்றேன். ஆனால், அவர்கள் என்னைக் கண்டுகொள்ளாமல் பஜ்ஜியைச் சாப்பிட ஆரம்பித்தார்கள். வேறு வழியின்றி, “டேய்… பஜ்ஜிய எடுங்கடா” என்று கையை நீட்ட, அவர்கள், “பஜ்ஜில்லாம் கிடையாது போ…” என்று என்னை விரட்ட, நான் அவர்களை அதிர்ச்சியுடன் பார்த்தேன்.

இரவு என் அருகில் படுத்திருந்த செந்திலிடம் நான் விஷயத்தைச் சொல்ல, “என்னது… உனக்கு பஜ்ஜி தரலையா?” என்று ஆவேசமாக எழுந்த செந்திலை அமுக்கிப் படுக்க வைத்தேன். பிறகு செந்தில் சொன்ன பிறகுதான், அவர்கள் எனக்கு பஜ்ஜி தராததற்கான காரணம் தெரியவந்தது. பஜ்ஜிப் பிரச்சினைக்குக் காரணம், மிக்சர் பிரச்சினை.

எங்கள் ஹாஸ்டலில் வேல்முருகன், பாலமுருகன் என்ற சகோதரர்கள் படித்து வந்தார்கள். அவர்கள் காலாண்டு விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும்போது எடுத்து வரும் மிக்சரை, அரையாண்டு விடுமுறை வரை வைத்திருந்து, தினமும் ஒவ்வொரு வாயாகச் சாப்பிடுவார்கள். ஹாஸ்டல் ஹாலில் யாரும் இல்லாத நேரமாக வந்து, பெட்டியைக் கை நுழையும் அளவுக்கு மட்டும் திறந்து, கையை உள்ளே விட்டு, ஆளுக்கு ஒரு கை மிக்சரை மட்டும் எடுத்து, கமுக்கமாக வாயில் போட்டுக்கொண்டு, வாயைத் துளிக்கூட அசைக்காமல், கடவுள்கூட அறியாமல் மிக்சரை வயிற்றினுள் அனுப்பும் கலையை அவர்கள் எங்கிருந்தோ கற்றிருந்தார்கள்.

ஒருநாள் அருள் அவசரத்துக்கு அவர்களிடம் மிக்சர் கேட்க, முருகன் பிரதர்ஸ் தரவில்லை. இதனால் கடுப்பான அருளும் மோகனும் முருகன் பிரதர்ஸ் இல்லாத நேரமாகப் பார்த்து, பெட்டியை உடைத்து, மிக்சரை எடுத்துக் காலி செய்துவிட்டார்கள். முருகன் பிரதர்ஸ் மிக்சர் காணாமல் போனதை அறிந்து அலறி யிருக்கிறார்கள். அப்போது என் நண்பன் செந்தில், அருள் குரூப்பின் அட்ராஸிட்டியை முருகன்களிடம் சொல்லிவிட, பெரிய தகராறாகியிருக்கிறது. செந்தில்தான் போட்டுக்கொடுத்துவிட்டான் என்று, செந்திலின் நண்பனான எனக்கு அவர்கள் பஜ்ஜி தரவில்லை. செந்தில் மேல் கோபம் என்றால், எனக்கு ஏன் சார் பஜ்ஜி தராமல் இருக்க வேண்டும்?

மறுநாள் விடியற்காலை, குளியல் ஹாலில் இந்த பஜ்ஜிப் பிரச்சினை மேலும் பெரிதாக வெடித்தது. எங்கள் ஹாஸ்டலில், மேலே செல்லும் ஒரு உயரமான குழாயில், ஆங்காங்கே துளை போட்டு, துளைகளுக்கு நேரே நாங்கள் வரிசையாக நின்று குளிப்போம். மறுநாள் பக்கத்து வரிசையில் ஜட்டியோடு நின்றுகொண்டிருந்த அருளைப் பார்த்து செந்தில், “சுரேந்தருக்கு ஏன் பஜ்ஜி தரல?” என்று கேட்க, நான் நடிகர் செந்தில் போல பாவமாக முகத்தை வைத்துக்கொண்டேன்.

“கண்டவனுக்கெல்லாம் நாங்க ஏன் தரணும்?” என்று அருள் கேட்டதுதான் தாமதம். “யாருடா கண்டவன்?” என்று எகிறி குத்துவிட்டது நான் இல்லை, செந்தில். பதிலுக்கு அருள் செந்திலைத்தானே அடித்திருக்க வேண்டும். ஆனால், செந்தில் பலசாலி என்பதால், அருள் என்னை அடித்தான். இப்போது நான் பதிலுக்கு அருளை அடிக்க வேண்டும். ஆனால் அருள் என்னைவிட பலசாலி. எனவே, வேறு வழியின்றி நான் மோகனை அடித்து, என் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டேன். பதிலுக்கு அவன் என்னை அடிக்க… எங்களுக்கு ஆதரவாகச் சிலரும், அவர்களுக்கு ஆதரவாகச் சிலரும் களம் இறங்கினர். அன்று காலை பத்திருபது பேர் வெறும் ஜட்டி மட்டும் அணிந்துகொண்டு, உடம்பில் சோப்புநுரையுடன் விடியற்காலை ஐந்து மணிக்கு போட்டுக்கொண்ட சண்டை, இன்றும் ஹாஸ்டல் வரலாற்றில், ‘பஜ்ஜிக் கலகம்’ என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு பல கலவரங்களை எல்லாம் கடந்துதான், இன்றுவரையிலும் நான் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். பத்து வயதிலிருந்து தினமும் இரண்டு பஜ்ஜி என்றால், இது வரைக்கும் எத்தனை பஜ்ஜிகள் சாப்பிட்டிருப்பேன் என்ற தோராயமாக ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தேன். 21,000 பஜ்ஜிகள். ஆத்தாடியோவ்!

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x