Published : 29 Jul 2016 11:16 AM
Last Updated : 29 Jul 2016 11:16 AM

கோலிவுட் கிச்சடி: மீண்டும் ஆசிரியர்

பள்ளி மீண்டும் ஆசிரியர்

ஆசிரியர் என்பவர் வெறும் ஆசானாக மட்டுமல்லாமல், பள்ளிக்கு வரும் சிறார்களிடம் ஒரு தாயைப் போலவும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்திய படம் 'குற்றம் கடிதல்'. அந்தப் படத்தில் ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நவீன நாடக நடிகையான ராதிகா பிரசித்தா. தன்னுடைய எளிமையான ஆனால் யதார்த்தமான பாவனைகள் கொண்ட நடிப்பால் கவர்ந்த அவர் தற்போது இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் உருவாகிவரும் 'கடுகு' படத்தில், முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் மீண்டும் டீச்சராக நடிக்கிறார் என்பது அந்தக் கதாபாத்திரத்தின் மீதான ஆர்வத்தைக் கூட்டியிருக்கிறது.

துப்பறிவதில் நிபுணன்

அச்சமுண்டு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, திரைக்கதைக்காகவும் திரும்பிப் பார்க்கவைத்தவர் அருண் வைத்தியநாதன். அதன் பிறகு ‘கல்யாண சமையல் சாதம்’ படத்துக்குக் கதை, வசனம் எழுதிய பின் மலையாளத்தில் மோகன்லாலை வைத்து ‘பெருச்சாளி’ என்னும் மலையாளப் படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் தமிழுக்குத் திரும்பியிருக்கும் இவர் அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் ‘நிபுணன்’ படத்தை விறுவிறுப்பாக இயக்கிவருகிறார்.

சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் ரஞ்சித் காளிதாஸ் என்ற புலனாய்வு அதிகாரியாக அர்ஜுன் நடிக்கிறாராம். தமிழில் ஒரு முழுமையான புலனாய்வுப் படமாக ‘நிபுணன்’ அமையும் என்கிறார் அருண்.

பெண் இயக்குநரின் புதிய களம்

இது டிஜிட்டல் யுகம். லேப் டாப், ஸ்மார்ட் கைபேசிகள், டேப்லெட்ஸ், கிண்டில்கள் என கையடக்கக் கருவிகளுக்குத் தாவிக்கொண்டிருக்கும் காலம். தமிழில் புத்தகங்களாக ஒருபக்கம் பிரபலமாகிவரும் கிராஃபிக் நாவல்கள் தற்போது டிஜிட்டல் கிராஃபிக் நாவல்களாகக் கையடக்கக் கருவிகளை ஆக்கிரமித்து வாசிப்பில் புது அனுபவத்தைத் தரத் தொடங்கியிருக்கின்றன. தமிழில் தற்போது முதல் டிஜிட்டல் நாவலை எழுதி, உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜே.எஸ். நந்தினி. ‘திரு திரு துரு துரு’ படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இவர் உருவாக்கியிருக்கும் ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ என்ற டிஜிட்டல் நாவல் தற்போது இணையம் வழியாகப் பிரபலமாகிவருகிறது. இதையடுத்து இவர் தனது அடுத்த நாவலை உருவாக்கிவருகிறார். அதற்கு ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ என்று தலைப்பு சூட்டியிருக்கிறார்.

ஏமி வழியில் ஆண்ட்ரியன்

அறிமுக இயக்குநர் எம்.எஸ்.எஸ். இயக்கிவரும் படம் ‘மேல்நாட்டு மருமகன்’. ‘பிரான்ஸ் நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே குடியேறிவிட வேண்டும் என்று நினைக்கும் ஒரு தமிழ் இளைஞனின் கலாச்சாரப் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை. ராஜ்கமல் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் கதையை மனதில் வைத்து பிரெஞ்சு நடிகையைத் தேடியிருக்கிறார் இயக்குநர்.

அப்போது எதிர்பாராத வகையில் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருந்திருக்கிறார் பிரெஞ்சு மாடலான ஆண்ட்ரியன். தமிழில் பேச முறையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டு சிறப்பாக நடித்துக்கொடுத்திருக்கிறாராம் இந்த அந்நிய அறிமுக நாயகி. இந்த ஒரு படத்தோடு நின்றுவிடாமல் ஏமி ஜாக்‌சன் வழியில் தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x