Last Updated : 27 Jun, 2017 10:47 AM

 

Published : 27 Jun 2017 10:47 AM
Last Updated : 27 Jun 2017 10:47 AM

பிளஸ் 2-வுக்குப் பிறகு: பி.காம்-க்கும் அப்பால்

வர்த்தக நடவடிக்கைகளில் சரியாகவும் கவனமாகவும் ஈடுபடுவதற்கான கல்விதான் வணிகவியல். வர்த்தகம் சார்ந்த கடமைகளையும் பொறுப்புகளையும் வணிகவியல் கல்வி தருகிறது. உற்பத்தியாளர் தொடங்கி கடைக்கோடி வாடிக்கையாளர்வரை பொருட்களைக் கொண்டுசேர்க்கும் சேவைகள் தரும் வணிக நடவடிக்கைகளை வணிகவியல் கல்வியாக அளிக்கிறது.

இந்தியாவில் வணிகவியல் கல்விக்கு மதிப்பும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் காலம் இது. பிளஸ் டூவில் காமர்ஸ் பாடம் எடுத்துத் தேறியவர்கள் அக்கவுண்டன்சி, பிஸ்னஸ் ஸ்டடீஸ், எகனாமிக்ஸ், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படையான அறிவைப் பெற்றிருப்பார்கள். பிளஸ் டூவுக்குப் பிறகு பி.காம். தவிரவும் வணிகவியலை அடிப்படையாகக் கொண்ட படிப்புகள் நிறைய உண்டு.

பெருநிறுவன மேலாண்மையைக் கற்றுக்கொள்ள

வியாபாரம் மற்றும் நிறுவன மேலாண்மைச் சூழலுக்கேற்ற திறன்களைப் பயிற்றுவிக்கும் மூன்றாண்டுப் படிப்பு பேச்சுலர் ஆஃப் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (பி.பி.ஏ.). இதைப் படித்தால் பெருநிறுவன மேலாண்மை (கார்ப்ரேட் மேனேஜ்மெண்ட்) தொடர்பான அடிப்படைகளையும் திறன்களையும் தெரிந்துகொள்ள முடியும். இந்தியா முழுவதும் பி.பி.ஏ. படிப்பு மேலாண்மைக் கல்வி, சந்தைப்படுத்தல், தொழில்முனைவு, நிதி மற்றும் அக்கவுண்டிங் ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாகக் கொண்டு கற்றுத்தரப்படுகிறது. எம்.பி.ஏ. படிப்பதற்கான சிறந்த அடிப்படைகளையும் பி.பி.ஏ.வில் கற்றுக்கொள்ளலாம். சேல்ஸ் எக்சிக்யூட்டிவ், ரிசர்ச் அசிஸ்டெண்ட், ஆஃபீஸ் எக்சிக்யூட்டிவ் போன்ற பணிகளுக்கு பி.பி.ஏ. அடிப்படைத் தகுதியாகக் கருதப்படுகிறது.

இளங்கலையோடு முதுகலை

பிளஸ் டூ முடித்தவுடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.பி.ஏ. பிளஸ் எம்.பி.ஏ. சேரலாம். ஐந்தாண்டு படிப்பு நிறைவுக்குப் பின்னர் நிறைய வேலைவாய்ப்புகளும் உள்ளன. இந்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்(ஐ.ஐ.எம்.) கல்வி நிலையத்தில் ஐந்தாண்டு படிப்பு உள்ளது. ஆப்டிட்யூட் டெஸ்ட், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஐ.ஐ.எம்.இல் ஒருங்கிணைந்த படிப்பை முடித்த மாணவர்களைக் கல்லூரி வளாகப் பணி நியமனத்தின் (கேம்பஸ் பிளேஸ்மெண்ட்) அடிப்படையில் ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் சம்பளத்தில் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நிகரான படிப்பு

பி.பி.ஏ.வுக்கு சமமான மேலாண்மைப் படிப்பு பேச்சுலர் ஆஃப் பிஸ்னஸ் மேனேஜ்மெண்ட் (பி.பி.எம்.). வர்த்தக நிர்வாகத்துக்குப் பதில் வர்த்தக மேலாண்மையைச் சொல்லித் தருவது ஒன்றே வித்தியாசம். வெற்றிகரமான நிர்வாகிகள் மற்றும் வர்த்தகத் தலைவர்களாவதற்கான அடிப்படைகளை இப்படிப்பில் தெரிந்துகொள்ளலாம். நிறுவனங்கள், நிறுவன நடத்தைகள், மனிதவள மேலாண்மை, தொழில்துறை உறவுகள், வர்த்தக நிறுவனங்களின் சட்டங்கள் மற்றும் தொடர்பானவற்றை அறிந்துகொள்ளலாம். டிபார்ட்மெண்ட் மேனேஜர், ரீடெய்ல் ஸ்டோர் மேனேஜர், சேல்ஸ் ரெப்ரசென்டேடிவ், பைனான்சியல் அட்வைசர் முதலிய பொறுப்புகளை ஏற்கலாம்.

உணவகத்தை நிர்வகிக்கலாம்

தற்போது ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இந்தியாவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் துறை இது. ஐந்து நட்சத்திர விடுதிகளும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டப் படிப்புகளை நடத்துகின்றன. ஆனால், இந்தப் பட்டப் படிப்புகள் ஏ.ஐ.சி.டி.இ./ யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்றவையா என்பதைத் தெரிந்துகொண்டு சேர்வது அவசியம். அத்துடன் நேஷனல் கவுன்சில் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி அமைப்பும் (என்.சி.எச்.எம்.சி.டி.) ஹோட்டல் மேலாண்மைக் கல்விக்கு அங்கீகாரம் தருகிறது.

ஊர் சுற்றப் படிக்கலாம்

சுற்றுலா நிகழ்ச்சிகள், திருவிழாக்களை வாழ்க்கை முழுவதும் ஒருங்கிணைக்க விருப்பமாக இருந்தால் பேச்சுலர் ஆஃப் டிராவல் அண்ட் டூரிசம் மேனேஜ்மெண்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம். சுற்றுலாவின் வர்த்தகப் பரிமாணத்தை இப்படிப்பின் மூலம் புரிந்துகொள்ள முடியும். இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவை இந்தியா முழுவதும் மூன்றாண்டு டூரிசம் இளங்கலைப் படிப்புகளை வழங்குகின்றன. தீம் பார்க்குகள் மேலாண்மை, ஈவண்ட் மேனேஜ்மெண்ட், பயண எழுத்தாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் பயணப் புகைப்படக்காரர்கள் ஆக விரும்புபவர்கள் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.

எண்கள், பொருளாதாரம், வர்த்தகத்தில் உண்மையான ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவராக இருந்தால் வர்த்தகக் கல்வியை தேர்ந்தெடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x