Published : 07 Sep 2014 11:10 AM
Last Updated : 07 Sep 2014 11:10 AM

பொறியாளன்: திரை விமர்சனம்

உதயம் என்.எச்.4 என்ற காதல் த்ரில்லர் படம் தந்த மணிமாறன் இதில் ரியல் எஸ்டேட் மோசடி - கந்துவட்டிக் கொடுமை இரண்டையும் இணைத்துக் கதைக்களமாக்கியிருக்கிறார்.

சரவணன் (ஹரீஷ் கல்யாண்) ஒரு சிவில் இன்ஜினீயர். கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் அவன் நேர்மையாக இருப்பதற்காகவே சின்னச் சின்ன அவமானங்களைச் சந்திக்கிறான். ஒரு கட்டத்தில் தானே கட்டுமான நிறுவனம் ஆரம்பிக்க முடிவெடுக்கிறான். அதற்குப் பணம் தேவை. பணத்தில் ஒரு பகுதியை (2 கோடி ரூபாய்) அவனது நண்பன் பிரபு புரட்டிக் கொடுக்கிறான். அது பிரபுவின் பணமல்ல. அவன் வேலை செய்யும் கொடூரமான கந்துவட்டி தாதா சுந்தரின் (அச்சுத குமார்) பணம்.

சுந்தர் ஜெயிலுக்குப் போன சமயத்தில் அவனது பணத்தை எடுத்துப் பயன்படுத்திக்கொண்டு, அவன் ஜாமினில் வெளியே வருவதற்குள் வைத்துவிடலாம் என்பதுதிட்டம். ஆனால் சரவணன், பிரச்சினைக்குரிய நிலத்தை வாங்கியதால் 2 கோடியைப் பறிகொடுக்கிறான். ஜாமின் பெற்று வெளியே வரும் சுந்தரிடம் பிரபு மாட்டிக்கொள்கிறான். தாதாவிடம் பிணைக் கைதியாக இருக்கும் நண்பனைக் காப்பாற்றுவதற்காக, பணத்தை மோசடி செய்த புரோக்கரை தேடிச் செல்கிறான் சரவணன். பணம் கிடைத்ததா, நண்பனை மீட்டானா என்பது மீதிக்கதை. இதற்கு நடுவில் கொஞ்சம் காதல் கதை.

அரசு பதிவுத் துறையில் இருக்கும் ஓட்டைகளால் ஒரே இடம் பலருக்கு விற்கப்படுவதுதான் திரைக்கதையின் மையம். ஆனால், அதை வலுவாகச் சித்தரிக்க அழுத்தமான சம்பவங்கள் இல்லை. பணத்தைக் கொடுத்து ஏமாந்த கதாநாயகன், ஏமாற்றியவனைத் தேடி அலைவதிலேயே பாதிக் காட்சிகள் நகர்கின்றன. இது பார்வையாளர்களை பொறுமையிழக்க வைத்துவிடுகிறது.

சென்னையில் நிலம் வாங்குவது என்கிற விவகாரத்தின் பின்னால் நிலத்தின் உரிமையாளர், வாங்குபவர், இடைத்தரகர்கள், கடன்கொடுக்கும் வங்கிகள், பதிவுத் துறையினர் எனப் பலர் இருக்கிறார்கள். பல தரப்பினரும் ஏதோ ஒரு வகையில் இத்தகைய மோசடிகளை தெரிந்தே ஆதரிக்கிறார்கள் என்பதைச் சின்னச் சின்னக் காட்சிகள் வழியாகச் சொல்கிறார்கள். எதிலும் அழுத்தம் இல்லை. முதல் பாதியில் காதல், இரண்டாம் பாதியில் பிரச்சினை என்று பிரித்துக் கொண்ட திரைக்கதையின் பின் பாதிஇழுவை, படத்தைத் தள்ளாட வைத்துவிடுகிறது. மோசடியைச் சொல்ல ஆசைப்பட்டால் போதாது. நம்பகத்தன்மை கொண்ட அழுத்தமான சம்பவங்கள் மூலம் சொல்ல வேண்டும். மணிமாறன் இதில் தவறியிருக்கிறார்.

ஹீரோயிஸத்தைத் தவிர்த்திருப்பது, வில்லனை தவிர மற்றவர்களைப் பெருமளவில் இயல்பாகச் சித்தரித்துள்ளவிதம் ஆகியவை பார்வையாளர்களைப் படத்துக்கு நெருக்கமாக்குகின்றன. ஆனால் முழுமையாகப் படத்துடன் ஒன்றவைக்கும் மாயாஜாலம் கடைசிவரை நடக்கவே இல்லை. ஹரீஷின் முகம் பார்த்தவுடன் மனதில் பதிகிறது. நடுத்தர வர்க்க இளைஞனாக இயல்பாக நடிக்க முயன்று வெல்கிறார். பணத்தை இழந்துவிட்டோம் என்று தெரியவரும் காட்சியில் இன்னும் கொஞ்சம் கூடுதல் நடிப்பைக் கொடுத்திருக்கலாம்.

சரவணணின் காதலியாக வரும் ஆனந்தி (ரக் ஷிதா), பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்துடன் கவர்கிறார். கவுரவமான தோற்றம் கொண்ட ரவுடியாக இருக்கிறார் அச்சுத குமார். அதிரவைக்கும் குரலில் பேசாமலேயே பயமுறுத்துகிறார். வசனங்கள் கவனிக்கவைக்கின்றன. ‘‘அப்பா, ஜெயில்ல உங்கள அடிச்சாங்களா…ப்பா?’’ என மகள் குழந்தைத் தனமாக கேட்கும்போது ‘‘பணம் இல்லாதவங்களைத்தான் ஜெயில்ல அடிப்பாங்கடா..’’ என்று சொல்லும் வில்லன், ‘‘நிறைய வெச்சிருக்கவனா பார்த்துகடன் கொடுங்கடா. ஒண்ணும் இல்லாதவன்கிட்ட எப்படி வசூலிக்கிறது?’’ என்கிறார். வட்டித் தொழில் வருமானத்துக்காக எந்த எல்லைக்கும் போகும் கதாபாத்திரம். வசனங்களில் வலுவாக நின்றாலும் பாத்திரப் படைப்பில் பழமையின் துரு ஏறியிருப்பது ஏமாற்றம். இதற்குப் பிராயச்சித்தமாக ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சாஸ்திரியின் பச்சோந்தித்தன சித்தரிப்பு கச்சிதம்.

திரைக்கதை ஏற்கெனவே இழுவையாக இருக்க, பாடல்களை அங்கங்கே சொருகியிருப்பது இன்னும் இம்சை. ஆனாலும் பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் கவர்கிறார் எம்.எஸ்.ஜோன்ஸ். வேல்ராஜின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x