Published : 26 Feb 2017 11:01 AM
Last Updated : 26 Feb 2017 11:01 AM

குறிப்புகள் பலவிதம்: தேர்வு இனிதாகுக!

> நல்ல முறையில் தேர்வெழுத ஞாபக சக்தி அவசியம். மூளைக்குத் தேவையான அளவு ஓய்வு கொடுக்க வேண்டும். பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் தூங்க வேண்டும். நல்ல ஓய்வுக்கு பிறகு படித்தால் மூளையின் கிரகிக்கும் தன்மை அதிகமாகி ஞாபக சக்தி அதிகமாகும்.

> நல்ல ஓய்வுக்குப் பிறகு அதிகாலையில் எழுந்து படிப்பதும் ஞாபக சக்திக்கு நல்லது. படிக்க அமைதியான சூழல் தேவை. அப்போதுதான் படித்தது நினைவில் இருக்கும்.

> ஏற்கனவே படித்ததுதானே, நன்றாகத் தெரியும் என்று எதையும் படிக்காமல் விட்டுவிடக் கூடாது. மீண்டும் ஒருமுறை மறுவாசிப்பு செய்வது நல்லது.

> படித்ததில் நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் மறந்து போகும் பகுதியை ஒருமுறைக்கு இருமுறை பார்க்காமல் எழுதிப் பார்த்தால் நினைவில் நிற்கும்.

> ஏற்கனவே நடந்த தேர்வுகளில் முக்கியமாக கேட்கப்பட்ட கேள்விகளைக் கவனித்து, அந்தப் பாடத்தில் கூடுதல் தயாரிப்போடு செல்வது நல்லது.

> தேர்வு அறைக்குக் கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டிய ஹால் டிக்கெட், பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர் உள்ளிட்ட பொருட்களைத் தேர்வுக்கு முதல் நாளே தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

> தேர்வு நாளன்று முன்கூட்டியே கிளம்புவது நல்லது. போகும் வழியில் எதிர்பாராத சிறு தாமதம் ஏற்பட்டாலும் பதற்றம் இல்லாமல் தேர்வு அறைக்குச் செல்லலாம்.

> வினாத்தாள் வந்தவுடன் முழுமையாக அனைத்துக் கேள்விகளையும் வாசித்துப் பார்த்து எந்தெந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கப்போகிறீர்கள் என்பதைத் தீர்மானித்துக்கொண்டு எழுதத் தொடங்குங்கள்.

> கடினமான வினாத்தாள் என்று நீங்கள் நினைத்தால்கூடப் பதற்றம் அடையத் தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்த கேள்விகளுக்கான பதில்களை நிதானமாக, முழுமையாக எழுதுங்கள். அது தரும் நம்பிக்கையிலேயே அடுத்தடுத்த கேள்வி களுக்கான பதில்களை எழுத முயற்சிக்கலாம்.

> எந்தப் பிரிவில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது என்பதற்கேற்ற அளவில் விடை எழுத வேண்டும். ஐந்து மதிப்பெண் கேள்விக்கு, உங்களுக்கு விவரம் தெரியும் என்று பக்கம் பக்கமாக எழுதக் கூடாது. பிறகு விரிவான விடை எழுதும் கேள்விக்கு பதில் எழுத நேரம் இல்லாமல் போய்விடும்.

> நெருக்கமாக எழுதாமல் நன்றாக இடம் விட்டு நிறுத்தி, நிதானமாக எழுத வேண்டும். சரியான விடையையே எழுதினாலும் தெளிவாக, இடைவெளி விட்டு எழுதவில்லை என்றால் மதிப்பெண் குறைவதற்கான சாத்தியமும் உண்டு.

> இறுதிவரை பரபரப்பாகத் தேர்வு எழுதாமல் ஐந்து நிமிடத்துக்கு முன்பாகவே எழுதி முடித்து, பதில்களைச் சரிபார்த்து, விடைத்தாள்களைச் சரியான வரிசையில் அடுக்கி, கவனமாக முடிச்சிட வேண்டும்.

- தமிழ்ச்செல்வி, சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x