Last Updated : 16 Mar, 2014 12:22 PM

 

Published : 16 Mar 2014 12:22 PM
Last Updated : 16 Mar 2014 12:22 PM

பணிக் களத்தில் பெண்கள்: பாதியில் முறியும் பயணம்

ஆரோக்கியமான சமூக உருவாக்கத்தில் பெண்களின் பங்களிப்பும் ஈடுபாடும் முதன்மையான இடத்தைப் பெறுவது இயல்பு. இந்தியாவில் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் பங்களித்தே வருகிறார்கள். ஆனால், அனைத்து நிலைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் பரவலாக இல்லை என்பதுதான் நிதர்சனம்.

உயர்பதவிகளை அடையும் பெண்களின் எண்ணிக்கை மிக மோசமான அளவுக்குக் குறைவாக உள்ளது. சமீபத்தில் வெளியான கிராண்ட் தார்ண்டன் என்னும் சர்வதேச ஆய்வு நிறுவனத்தின் வர்த்தக அறிக்கை இதைச் சுட்டிக்காட்டியுள்ளது. உலக அளவில் ஆண்டுதோறும் 21 சதவிகிதப் பட்டதாரிப் பெண்கள், வேலை பெறுகிறார்கள். ஆனால், இந்தியாவிலோ 13 சதவிகிதப் பட்டதாரிப் பெண்கள் மட்டுமே தேர்வாகிறார்கள்.

வேலை என்று பார்க்கும்போது தொடக்க நிலைப் பதவிகளில் பெண்களுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பணிகளில் திறமையை வெளிப்படுத்தத் தேவையான பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஆனால், உயர் பதவிகளுக்குச் செல்லச் செல்லப் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களில் 60 முதல் 70 சதவிகிதம் பேர், தங்கள் பணியைப் பாதியிலேயே துறந்துவிடுகிறார்கள் என்று கிராண்ட் தார்ண்டன் அறிக்கை தெரிவிக்கிறது. தனிப்பட்ட விருப்பத்தாலோ குடும்பச் சூழலாலோ பெண்கள் இந்த முடிவை எடுக்கிறார்கள்.

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலம் சமூகம் பெருமளவில் மேம்படும். இதை உணர்ந்த டாடா நிறுவனம், ஆண்கள் மட்டும் பணிபுரிந்துவந்த துறைகளிலும் பெண்களை ஈடுபடுத்தத் தேஜஸ்வினி என்னும் திட்டத்தின் கீழ் அவர்களுக்குப் பயிற்சியளித்துவருகிறது. சமூகத்தில் பாலினச் சமத்துவத்தைப் பாதுகாக்கவும் பெண்களின் ஆற்றலைத் தங்கள் நிறுவனங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆனால், தலைமைப் பொறுப்பில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமான அளவில் இல்லை. இந்தியாவில் தலைமைப் பொறுப்புகளில் 14 சதவிகிதப் பதவிகளிலேயே பெண்கள் அமர்த்தப்பட்டு உள்ளனர். ஐக்கிய அரபு நாடு களிலும் இதே அளவு பெண்கள் தலைமைப் பொறுப்பில் உள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நிறுவனங்களின் மனிதவள ஆற்றலில் பயிற்சிபெற்ற பெண்கள் முக்கிய இடம்வகிக்கிறார்கள். எனவே, பெண்கள் பணியைத் துறப்பதைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கொள்கை முடிவெடுக்கும் பதவி வரையிலும் ஆண்கள் அளவுக்குப் பெண்களும் பங்களிக்க வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பணியிடங்களில் பாலினச் சமத்துவம் நிலைநிறுத்தப்படும்போதுதான் சமூகத்திலும் அதன் தாக்கம் பரவும். ஆகவே, பெண்களைத் தொடர்ந்து பணிகளில் தக்கவைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் நிறுவனங்கள் தீவிரக் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x