Last Updated : 27 Jun, 2017 11:13 AM

 

Published : 27 Jun 2017 11:13 AM
Last Updated : 27 Jun 2017 11:13 AM

வெற்றி முகம்: மிதந்தும் எதிர்நீச்சல் போடலாம்!

வேலைக்காக ஒருவரைத் தயார்படுத்துவதுதான் கல்வியின் உட்சபட்ச இலக்கா? இல்லை. வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளவும் சக மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தவும் உந்தித்தள்ளுவதே கல்வியின் உண்மையான நோக்கம் என்கிறார் ரிஷிகேஷ்.

ராமேஸ்வரக் கடற்கரையில் காலார விளையாடும்போதெல்லாம் கடலோடிகளின் மரண ஓலம் இவருடைய காதுகளைத் துளைத்தது, மனதை உலுக்கியது. கடலில் மீன் பிடிக்கச்செல்லும் கடலோடிகள் அதில் மூழ்கிப்போகும் அவலத்தை மாற்ற முடியாதா எனச் சிந்திக்கத் தொடங்கினார். மீனவர்களுக்கான பாதுகாப்பு வளையங்களை வாங்கும் வசதி இல்லாதவர்களுக்கு மாற்று என்ன என ஆராய ஆரம்பித்தார்.

2014-ல் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கபுரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் ரிஷிகேஷ். அவருடைய தேடலுக்குத் தோழர்கள் பிரவீன், நவீன்குமார், கார்த்தி, குகன் கைகொடுத்தனர். நீரில் மூழ்காமல் மிதக்க உதவும் கருவியைச் செலவில்லாமல் உருவாக்க அந்தச் சிறுவர்கள் திட்டமிட்டனர். பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய கிராமப்புறத்தைச் சேர்ந்த அவர்களுடைய கண்ணில் திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் குப்பை தென்பட்டது. கடலில் மிதந்து சென்றுகொண்டிருந்த சில பிளாஸ்டிக் பாட்டில்களை ஒரு நாள் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது சட்டென ரிஷிகேஷூக்கு ஒரு சிந்தனை உதித்தது.

மண்ணையும் நீர்நிலைகளையும் பாழாக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை நண்பர்களோடு சேர்ந்து சேகரித்தார். 24 வெற்று பிளாஸ்டிக் பாட்டில்களை சேர்த்துக் கட்டித் தண்ணீரில் தூக்கி எறிந்தார். இயற்பியல் விதிப்படி கனமான பொருளையும் அவை மிதக்கவைத்தன. நீச்சல் தெரிந்த ரிஷிகேஷ் தன்னைச் சுற்றி இந்தப் பிளாஸ்டிக் பாட்டில் குவியலைக் கட்டிக்கொண்டு வீட்டருகில் உள்ள ஏரி ஒன்றில் குதித்துத் தன்னைத் தானே சோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். லாவகமாகத் தன்னால் மிதிக்க முடிந்தது அப்போது தெரியவந்தது. அடுத்து, நீச்சல் தெரியாத தன்னுடைய நண்பன் பிரவீனை வைத்தும் சோதித்தார்.

எதிர்பார்த்தபடியே பிளாஸ்டிக் பாட்டில்களின் உதவியோடு பத்திரமாகக் கரையேறினார் பிரவீன். சிறுவர்களுக்குச் சவால் மிகுந்த போட்டிகள் நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’-ன் ‘ஐ கேன் வின் அவார்டு 2014’-க்கு (‘I Can Win 2014’) ரிஷிகேஷின் எளிமையான கண்டுபிடிப்பை அனுப்பிவைத்தார் அவருடைய வழிகாட்டி முருகானந்தம். சமூக மாற்றத்துக்கு வித்திடும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படும் இப்போட்டிக்கு ரிஷிகேஷின் கண்டுபிடிப்போடு சேர்த்து மொத்தம் 1,992 கண்டுபிடிப்புகள் வந்து குவிந்தன.

2014-ல் அறிவிக்கப்பட்ட இப்போட்டியின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ‘துணிச்சலான சிந்தனை’ என்கிற விருதும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையும் ரிஷிகேஷூக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதைத் தன் நண்பர்களோடு சேர்ந்து பெருமையாகப் பெற்றுக் கொண்டார் ரிஷிகேஷ். தற்போது பத்தாம் வகுப்புக்காக மும்முரமாகப் படித்துக்கொண்டிருக்கும் இவர் பள்ளி வாழ்க்கையின் முதல் சவால் மிகுந்த பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கு முன்னதாகவே வாழ்க்கையின் சவாலை வென்றெடுத்துவிட்டார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x