Last Updated : 25 Apr, 2017 11:19 AM

 

Published : 25 Apr 2017 11:19 AM
Last Updated : 25 Apr 2017 11:19 AM

சவாலே சமாளி

கற்றலில் குறைபாடு, ஆட்டிசம், மூளை வளர்ச்சித் திறன் குறைவு, மல்ட்டிபிள் டிஸார்டர் உள்ளிட்ட மருத்துவச் சிக்கல்களை சிறப்புக் குழந்தைகள் எதிர்கொண்டுவருகின்றனர். அவர்களுக்கு அன்பு, அரவணைப் புடன் கூடிய விளையாட்டு மற்றும் பயிற்சிகளின் மூலம் வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொடுக்கிறது சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி சிறப்புப் பள்ளி.

மருத்துவக் குழுவின் பரிசோதனை

ஐந்து வயதிலிருந்து, 35 வயதுவரை இருப்பவர்களை இந்தச் சிறப்புப் பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார்கள். “ஒவ்வொரு குழந்தையின் பிரச்சினையையும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு கணித்து, அதற்கேற்ப பயிற்சிகள் கொடுக்கிறோம். ஆட்டிசம் குழந்தைகள் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். கற்றலில் குறைபாடு இருக்கும் குழந்தைகள் எழுத்துகளைத் திருப்பி எழுதுவார்கள்.

எண்களை எழுதுவதிலும் அவர்களுக்கு குழப்பம் ஏற்படும். 1 லிருந்து 100 வரை சொல்லும் குழந்தைகள், 10 வரை எழுதுவதற்கே சிரமப்படுவார்கள். இவர்களுக்கென்று தனித் தனியான பயிற்சி அளிக்கிறோம். இங்குப் படித்த பல சிறப்புக் குழந்தைகள் தற்போது சராசரி மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் படித்துவருகின்றனர். சிலர் 10வது, பிளஸ் டூ வகுப்பில்கூடத் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். சில குழந்தைகள் கல்லூரிகளிலும் படித்துவருகின்றனர்” என்கிறார் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி சிறப்புப் பள்ளியின் தலைமையாசிரியர் என். ரவிச்சந்திரன்.

பயிற்சிகள் பலவிதம்

தரையில் போட்டிருக்கும் வட்டத்துக்கு உள்ளே கால்களை வைத்து நடப்பது. சின்னச் சின்னத் தடுப்புகளைத் தாண்டிச் செல்வது. இசையையே ஒரு சிகிச்சையாகப் பயன்படுத்துவது. குழந்தைகளையே இசைக் கருவிகளை வாசிக்கவைப்பது, இசைக்கேற்ப நடனம் ஆடச்செய்வது. யோகா, ஜிம்னாஸ்டிக், கயிறு ஏறுவது. சின்னச் சின்ன பிளாஸ்டிக் பிளாக்குகளை அதற்குரிய சட்டங்களில் சரியாகப் பொருத்துவது. இப்படிப் பல தரப்பட்ட பயிற்சிகளை மிகக் குறைந்த கட்டணத்தில் இந்தப் பள்ளியில் கற்றுத்தருகின்றனர். “இப்படிப்பட்ட பயிற்சிகள் ஒரு குழந்தையின் மூளைத் திறன், மோட்டார் ஆக்டிவிட்டி எனப்படும் உடல் பாகங்களை அசைக்கும் திறன்களை ஊக்குவிக்கும்” என்கிறார் ரவிச்சந்திரன்.

வயதான குழந்தைகள்

மர நிழலில் தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் வரிசையாக மாணவர்கள் பல்டி அடித்துக்கொண்டிருந்தனர். எளிய யோகாசனங்களைச் செய்துகாட்டினர். அவர்களில் சிலர் பாலகர்கள். சிலருக்கு அரும்பு மீசை எட்டிப் பார்த்தது.

“இந்தக் குழந்தைகளோடு பெரியவர்களும் இருக்காங்களே…” என நினைத்துக்கொண்டிருக்கும்போதே, “இங்கிருக்கும் சிலருக்கு வயது அதிகம் இருப்பது போலத் தோன்றினாலும், இவர்களுடைய மூளையின் வளர்ச்சி ஐந்திலிருந்து பத்து வயதுக் குழந்தைகளின் அளவுக்குத்தான் இருக்கும்” என்றனர் அங்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி அளிக்கும் கண்ணனும், ஆக்குப்பேஷனல் தெரப்பியை அளிக்கும் ஆசிரியரும்.

நுண்ணறிவுப் பயிற்சி

“ஒவ்வொரு குழந்தைக்கும் நுண்ணறிவுத் திறன் வேறுபடும். அதிலும் சிறப்புக் குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை மிகவும் நுட்பமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கேற்ப பயிற்சிகளை நாங்கள் அளிக்கிறோம். உதாரணமாகப் படங்களைப் பார்த்து அதன் பெயர்களைச் சொல்லும் பயிற்சி, சாப்பிடு, உட்கார், எழுந்திரு, படுத்துக்கொள், தூங்கு, சிறுநீர் கழித்துவிட்டு வா போன்ற வார்த்தைகளின் அர்த்தத்தை அவர்களுக்குப் புரியவைத்து, நம்முடைய பேச்சுக்குச் சரியானபடி எதிர்வினையாற்றும் அளவுக்கு பயிற்சிகளை அளிக்கிறோம்” என்கிறார் ரவிச்சந்திரன்.

இந்தக் குழந்தைகளுக்கு அன்றாட அலுவல்களே மிகப் பெரிய சவால்தான். அந்தச் சவால்களைப் புரிந்து கொண்டு அவர்கள் சமூகத்தில் ஜெயிப்பதற்கு இந்தப் பள்ளி உதவுகின்றது. அதிலும் உளவியல் நிபுணர்களின் அறிவுறுத்தலின்படிதான் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அடுத்த கட்டப் பயிற்சி

குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனுக்கேற்ப ப்ரி-பிரைமரி, பிரைமரி, செகன்டரி ஆகிய நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சொல்வதைப் புரிந்து கொண்டு செயல்படும் மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி செய்தல், சோப் ஆயில் தயாரித்தல் போன்ற பயிற்சிகளையும் அளிக்கின்றனர்.

சிறப்புக் குழந்தைகளுக்கு அவர்களின் அன்றாட காரியங்களை அவர்களே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு `ஆக்டிவிட்டி டெய்லி லேர்னிங் ஸ்கில்ஸ்’-ஐ வளர்ப்பதில் இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தப் பயிற்சிகளில் முன்னேற்றம் காணும் குழந்தைகளை எல்லாக் குழந்தைகளும் படிக்கும் பள்ளிகளில் படிப்பதற்குப் பரிந்துரைக்கிறார்கள். சமூகத்தோடு சிறப்புக் குழந்தைகளைப் பிணைக்கும் முயற்சியைக் கடந்த பத்தாண்டுகளாக இந்தச் சிறப்புப் பள்ளி சிறப்பாகச் செய்துவருகிறது.

தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரனை தொடர்புகொள்ள : 9840158373

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x