Published : 14 Sep 2016 15:49 pm

Updated : 14 Jun 2017 19:17 pm

 

Published : 14 Sep 2016 03:49 PM
Last Updated : 14 Jun 2017 07:17 PM

நன்மைக்கும் படிக்கலாம்!

நவீனமயமாகிவிட்ட உலகில் சமூகப் பணியும் ஒரு வேலைத் துறையே. நமது சமூகத்துக்குப் பங்களிப்பதையே வேலையாகச் செய்கிறோம் என்பதில் ஆத்ம திருப்தியும் அடங்கியுள்ளது. பிறருக்கு நன்மை செய்வதில் மகிழ்ச்சியை அடைபவர்கள், பிறருடைய துயரைத் தீர்ப்பதில் நிறைவை அடைபவர்கள் நிச்சயமாகச் சமூகப் பணியைத் தங்கள் வாழ்நாள் வேலையாகத் தேர்ந்தெடுக்கலாம். அதற்கான முறையான கல்வியும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.

கல்வி, மருத்துவம், சட்டம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல், விலங்குகளின் உரிமைகள் எனச் சமூகப் பணியாளர்கள் பல்வேறு துறைகளில் அவசியத் தேவையாக மாறியுள்ளனர். ஆய்வு, கொள்கை உருவாக்கம், சமூகப் பணிக் கல்வி, சமூக வளர்ச்சிப் பணிகள், சமூகப் பணி மேலாண்மை எனப் பல பிரிவுகள் இதில் உள்ளன.


எது சமூகப் பணி?

பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படும் சூழலில் உள்ள மனிதர்களுக்காகச் சேவை செய்வதும், அவர்களது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதும்தான் சமூகப் பணியின் பிரதான அம்சமாகும். அத்துடன் சமூகப் பணியாளர்கள் பணியாற்றும் ஒரு சூழலின் சமூகப் பொருளாதாரச் சிக்கல்களையும் புரிந்துகொள்வது அவசியம்.

சமூகப் பணியாளராவது எப்படி?

சமூக சேவையில் ஈடுபாடும் விருப்பமும் கொண்ட எவரும் சமூகப் பணிக்குள் நுழையலாம். சமூகப் பணியில் தனிப்பட்ட வகையிலும் தொண்டு நிறுவன அமைப்புகளில் தன்னார்வப் பணியாளராகவும் பணியாற்றுபவர்கள் உள்ளனர். நாடெங்கும் தனிநபராகவே, காலங்காலமாக அசாத்தியம் என்று நாம் கருதிவந்த மாற்றங்களை நடத்திய சமூகப் பணியாளர்களும் நம்மிடையே உள்ளனர். அண்ணா ஹசாரே, மறைந்த இயற்கை விவசாயி ஆர்வலர் நம்மாழ்வார், கைலாஷ் சத்யார்த்தி என எண்ணற்ற சமூகப் பணியாளர்களைச் சொல்லலாம். இவர்கள் யாரும் சமூகப் பணியைப் பட்டப் படிப்பாகப் படித்தவர்கள் அல்ல. தங்கள் பணிக்காக மாதச் சம்பளமும் பெற்றவர்கள் அல்ல.

ஆனால் சமூகப் பணியை உங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவிபுரியும் வேலையாகவும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மனதிருப்தியோடு திருப்தியான சம்பளமும் சமூகப் பணித் துறையில் உண்டு. ஒரு பிரச்சினையைப் பகுப்பாய்வு செய்வதற்கான திறனும் முடிவெடுக்கும் வலுவும் உள்ளவர்களே சமூகப் பணிக் கல்வியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மனித உளவியலை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கான திறனும் சிக்கலான பிரச்சினைகளைக் கையாள்வதற்கான அசாத்தியப் பொறுமையும் அவசியம்.

பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை முதல் ஆராய்ச்சி மேற்படிப்பு வரை சமூகப் பணி சார்ந்த படிப்புகள் உள்ளன.

சமூகப்பணித் துறை என்பது மானுடவியல், பொருளாதாரம், தத்துவம், உளவியல், சமூகவியல் துறைகளுடன் தொடர்பிணைப்பு உடையது. சமூகப் பணியைப் பொறுத்தவரை பட்டப்படிப்பு மூலமாக அத்துறையின் அடிப்படை அம்சங்கள், நெறிகள், தகுதித் திறன்கள், அரசு உரிமம் பெறும் நடைமுறைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

முக்கிய முதுகலை பட்டங்கள்

‘தி மாஸ்டர் ஆப் சோஷியல் ஒர்க்’ என்று அழைக்கப்படும் முதுகலைப் படிப்பு இரண்டு வருடங்களையும் நான்கு செமஸ்டர்களையும் கொண்டது. தபால் வழியிலும், தொலைதூரக் கல்வி முறையிலும் இதைப் படிக்கலாம்.

மிக முக்கியமானதும் தரமானதாகவும் கருதப்படும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி நிலையங்களிலும் எம்எஸ்டபிள்யு (மாஸ்டர் ஆப் சோஷியல் ஒர்க்) மற்றும் எம்ஏஎஸ்டபிள்யு (மாஸ்டர் ஆஃப் ஆர்டிஸ் இன் சோஷியல் ஒர்க்) முதுகலைப் படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. இதில் குழு கலந்துரையாடலும் நேர்காணலும் அடங்கும்.நுழைவுத் தேர்வு நடத்தும் கல்வி நிலையங்கள்

l அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்

l ஜாமியா மிலியா இஸ்லாமியா

l சங்கராச்சார்யா யுனிவர்சிட்டி

l டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி

வேலைவாய்ப்பு

சர்வதேச அளவில் சமூகப் பணி சார்ந்த புகழ்பெற்ற அமைப்புகளான உலக சுகாதார நிறுவனம், யுனெஸ்கோ, யுனிசெப், சைல்ட் ரைட்ஸ் அண்டு யூ (சிஆர்ஒய்) போன்ற அமைப்புகளில் எம்எஸ்டபிள்யு படித்தவர்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்புகள் உள்ளன. மூன்றாம் உலக நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் விழிப்புணர்வுத் திட்டங்களை நடத்துவதற்காகச் சமூகப் பணியாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் சமூகப் பணியைப் பட்டப் படிப்பாகப் படித்தவர்களுக்குச் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆப் சோஷியல் ஒர்க்கர்ஸ், இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஆஃப் ஸ்கூல்ஸ் ஆஃப் சோஷியல் ஒர்க்கர்ஸ், நேஷனல் அசோசியேஷன் ஆப் சோஷியல் ஒர்க்கர்ஸ் ஆகிய அமைப்புகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. ஹெல்ப் ஏஜ் இந்தியா போன்ற நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சிறைகள், கூர்நோக்கு இல்லங்கள், பேரிடர் நிர்வாகத் துறை, கல்வித் துறை, மருத்துவமனைகள், மருத்துவத் துறை, ஆதிவாசிகள் மேம்பாடு சார்ந்த பணிகளிலும் வாய்ப்புகள் உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத் துறையிலும் வேலை கிடைக்கும்.

பொதுவான பணிகள்

சமூகப் பணி சார்ந்த கல்வியும் திறனும் பெற்ற சமூகப் பணியாளர்களுக்கு அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பேரிடர் நிவாரணப் பணிகள் செய்வதற்காக அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சமூகப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. சமூகப் பணியில் எம்.ஃபில் மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு ஆய்வுப் பணி, ஆலோசனைப் பணி, கொள்கை உருவாக்கும் உயர்பணி ஆகிவற்றில் வேலை கிடைக்கும்.

சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள்

l சமூகப் பணி சான்றிதழ் படிப்பு

l மறுவாழ்வு ஆலோசனை சான்றிதழ் படிப்பு

l சமூக மேம்பாட்டு மேலாண்மை சான்றிதழ் படிப்பு

l டிப்ளமோ இன் பெர்சனல் மேனேஜ்மெண்ட்

l டிப்ளமோ இன் ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட்

l போஸ்ட் கிராஜுவேட் சர்டிஃபிகேட் இன் ரிசர்ச் மெத்தடாலஜி

தமிழகத்தில் எங்கே படிக்கலாம்?

சமூகப் பணியைச் சிறப்பான முறையில் பிஎஸ்டிபிள்யு என்கிற இளங்கலை பட்டப் படிப்பாக வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

l மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க், சென்னை

l சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை

l ஸ்டெல்லா மேரிக் கல்லூரி, சென்னை

l தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகம்

l பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

l டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் காலேஜ் ஆப் சயின்ஸ், கோவை

l மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் ஒர்க், மதுரை

l மகாராஜா காலேஜ் ஃபார் வுமன், ஈரோடு

l ராஜாஸ் காலேஜ், தஞ்சாவூர்

இந்தியாவின் டாப் 10

1. டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ், மும்பை

2. டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி

3. மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க், சென்னை

4. ஜாமியா மிலியா இஸ்லாமியா, டெல்லி

5. காலேஜ் ஆஃப் சோஷியல் ஒர்க் நிர்மலா நிகேதன், மும்பை

6. லயோலா காலேஜ் ஆஃப் சோஷியல் சயின்ஸ், திருவனந்தபுரம்

7. கார்வே இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சர்வீஸ், புனே

8. எம்எஸ் யூனிவர்சிடி ஆஃப் பரோடா, வதோதரா

9. மங்களூர் யுனிவர்சிட்டி, மங்களூர்

10. ரோடா மிஸ்ட்ரி காலேஜ் ஆப் சோஷியல் ஒர்க் & ரிசர்ச் சென்டர், ஹைதராபாத்


நன்மைபடிக்கலாம்சமூகம்வேலை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

milkha-singh

ஓடு மில்கா ஓடு

கருத்துப் பேழை
x