Published : 24 Feb 2014 11:57 am

Updated : 06 Jun 2017 19:53 pm

 

Published : 24 Feb 2014 11:57 AM
Last Updated : 06 Jun 2017 07:53 PM

விடை தேடும் பயணம் - விநாடி வினா

(ஒவ்வொரு கேள்விக்குமான சரியான விடையைத் தேர்ந்தெடுங்கள். சில கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருக்கலாம். அரிதாகச் சில கேள்விகளுக்கு எந்த விடையும் சரியானதாக இல்லாமலும் போகலாம்).

1. ​நோபல் பரிசுகளுக்கு உரியவரான நோபல் குறித்த கீழ்க்கண்ட எந்தத் தகவல்(கள்) உண்மை?


அ) அவர் ஒரு வழக்கறிஞர்

ஆ) அவர் பெயரில் ஒரு தனிமம் உண்டு

இ) இப்போது நோபல் பரிசு வழங்கப்படும் அத்தனை பிரிவுகளையும் நோபல்தான் தேர்ந்தெடுத்தார்

2. பஞ்சாபில் உள்ள ​லூதியானா எந்தத் தயாரிப்புக்கு மிகவும் புகழ் பெற்றது?

அ) சைக்கிள்

ஆ) விதவிதமான எவர்சில்வர் வீட்டுப் பொருள்கள்

இ) செயற்கை எரு தயாரிப்பு

3. பிரபல அரசியல்வாதியின் பேரன் தொடங்கியதுதான் ‘பாம்பே டையிங்’ நிறுவனம். அந்த அரசியல்வாதி யார்?

அ) சல்மான் குர்ஷித்

ஆ) லோகமான்ய திலகர்

இ) ஜின்னா

4. ஏ.கே.47 துப்பாக்கியில் உள்ள 47 என்பது எதைக் குறிக்கிறது?

அ) இதை உருவாக்கிய கலாஷ்நிகோவ் என்பவரின் குழுவில் அவரோடு ஆராய்ச்சி செய்தவர்களின் எண்ணிக்கை

ஆ) இந்தத் துப்பா​க்கி கண்டுபிடிக்கப்பட்ட வருடம்

இ) இந்தத் துப்பாக்கியில் நிரப்பக்கூடிய அதிகபட்ச குண்டுகளின் எண்ணிக்கை

5. ரங்கைய நாயுடு என்ற பாத்திரத்தில் தன் முதல் படத்தில் நடித்த நடிகர் யார்?

அ) எஸ்.எஸ். ராஜேந்திரன்

ஆ) எம்.ஜி.ஆர்.

இ) தியாகராஜ பாகவதர்

6. ஒலிம்பிக் கொடியில் எவ்வளவு வண்ணங்கள் உள்ளன?

அ) ஐந்து

ஆ) ஆறு

இ) ஏழு

7. வெள்ளி உலோகத்தின் பெயர் ​சூட்டப்பட்ட நாடு எது?

அ) நைஜீரியா

ஆ) கோஸ்டரிகா

இ) அர்ஜெண்டினா

விடைகள்

1. பொருளாதாரப் பிரிவில் தற்போது நோபல் விருது வழங்கப்படுவது, நோபலின் உயிலில் காணப்படும் வாசகத்தைப் பின்பற்றிய ஒன்றல்ல. அந்த விருதை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் என்ற அமைப்பே வழங்குகிறது. நோபல் பெயரில் உள்ள தனிமத்தின் பெயர் நோபலியம் (Nobelium). இதன் அணு எண் 102.

2. பஞ்சாபில் உள்ள மிகப் பெரிய நகரம் ​​லூதியானா. லோடி பரம்பரையினர் இங்குக் கோலோச்சியதைத் தொடர்ந்து இப்பெயர் சூட்டப்பட்டது. இங்குச் சைக்கிள்கள் மிக அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.

3. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒரு முக்கியக் காரணமாக விளங்கிய ஜின்னாவின் பேரனான நுஸ்லி வாடியாதான் பாம்பே டையிங் நிறுவனத்தைத் தொடங்கினார்.

4. ‘ஆட்டோமேடிக்’ என்பதிலிருந்து A, இத்துப்பாக்கியைக் கண்டுபிடித்த கலாஷ்நிகோவ் பெயரிலிருந்து K, இது முதலில் தயாரிக்கப்பட்ட வருடமான 1947இலிருந்து 47 ஆகியவற்றை இணைத்துத்தான் இது AK 47 என்று அழைக்கப்படுகிறது.

5. சிவாஜி கணேசனுக்கு மட்டுமல்ல, எஸ்.எஸ்.ஆருக்கும் முதல் திரைப்படம் பராசக்திதான். அதில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ஞானசேகரன். தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் பவளக்கொடி. இதில் அவர் அர்ஜுனன் பாத்திரம் ஏற்றிருந்தார். சதி லீலாவதி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். காவல்துறை ஊழியரின் பாத்திரம் ஏற்றிருந்தார். அந்தப் பாத்திரத்தின் பெயர் ரங்கைய நாயுடு.

6. மஞ்சள், நீலம், கறுப்பு, பச்சை, சிவப்பு ஆகிய ஐந்து வண்ண வட்டங்கள் ஒலிம்பிக் கொடியில் உள்ளன. என்றாலும் பின்னணியாக இருக்கும் வெள்ளையையும் சேர்த்தால், ஆறு வண்ணங்கள் என்பதுதான் சரியான விடையாக இருக்கும்.

7. நைஜீரியா என்ற பெயர் அந்த நாட்டில் ஒடும் நைஜர் என்ற நதியிலிருந்து வந்தது. கோ​ஸ்டரிகா என்றால் செல்வம் கொழிக்கும் கடற்கரை என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தம். அந்தக் கடற்கரையில் நிறைய தங்கம் இருக்குமென்று, அங்கு முதலில் சென்ற ஸ்பானியர்கள் நினைத்தனர். அர்ஜெண்டினம் என்பது வேதியியலில் வெள்ளியின் பெயர். அது அதிகமாகக் கிடைப்பதால் அந்த நாட்டின் பெயர் அர்ஜெண்டினா ஆனது.


வினாடி விநாகேள்வி பதில்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

the-hundred

இனி செஞ்சுரிதான்!

இணைப்பிதழ்கள்
x