Last Updated : 25 Jun, 2017 03:27 PM

 

Published : 25 Jun 2017 03:27 PM
Last Updated : 25 Jun 2017 03:27 PM

களம் புதிது: ரைட் சகோதரர்களுக்கு முன்பு வானில் பறந்த பெண்

காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் என்பது பாரதியின் கவிதை. நடத்த முடியாத காரியத்தையும் நடத்திக் காண்பிக்க முடியும் என்பதுதான் இதன் பொருள். ஆனால், இந்தக் கவிதை எழுதப்படுவதற்கு முன்பே ஒரு பெண் காற்றிலேறி விண்ணைத் தொட முயன்றிருக்கிறார். இதைச் செய்தது ஒரு பேராசிரியரோ விஞ்ஞானியோ அல்ல. குறும்புத் தனங்கள் கொண்ட ஒரு கல்லூரி மாணவி.

அமெரிக்காவைச் சேர்ந்த அய்தா த அகொஸ்தா பதின்ம வயதுப் பெண். அந்த வயதுக்கே உரிய குறும்புத்தனங்களும் முரட்டுத் தைரியமும் கொண்ட பெண்ணாக இருந்தார். அகொஸ்தா தான் இருக்கும் இடத்தையும் கலகலப்பாக ஆக்கக்கூடியவர். 1903-ம் ஆண்டு விடுமுறைப் பயணமாகத் தன் தாயாருடன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு வந்தார். ஆனால், அந்தப் பயணம் தன்னை உலக வரலாற்றின் உதாரணப் பெண்ணாக மாற்றப்போகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. எல்லாப் பயணத்தைப் போன்று அதிலும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்.

புகழைத் தந்த பயணம்

அந்தக் காலகட்டத்தில் பறவையைப்போல் வானில் சிறகை விரிக்க வேண்டும் என்ற மனித குலக் கனவை நனவாக்கப் பல ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. சிலர் பாராசூட்களில் பறந்து தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்துகொண்டிருந்தனர். சிலர் காற்றில் மிதக்கும் பலூன்களில் மோட்டார் பொருத்தி இயக்க முயன்றுகொண்டிருந்தனர். இந்த மாதிரியான வானூர்திகளைக் கண்டுபிடித்த முன்னோடிகளில் ஒருவர் அல்பர்டோ சாண்டோஸ்-டூமொண்ட். பிரேசிலைச் சேர்ந்த இவர் பிரான்ஸில் கல்வி பயின்றவர். அங்கேயே தங்கித் தனது விமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவந்தார்.

சூடான காற்று நிரப்பப்பட்ட பலூனைக் கொண்டு இவர் வானில் பறந்துள்ளார். ரைட் சகோதர்கள் தங்களது கண்டுபிடிப்பைச் சோதனைசெய்து காட்டுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 1901-ம் ஆண்டு ஈபிள் டவரைத் தனது வானூர்தியில் பறந்தபடி சுற்றிவந்தவர். இந்தச் சாதனை அவருக்கு உலகப் புகழைத் தேடித் தந்தது.

டூமொண்ட் நம்பர் 6, நம்பர் 9 ஆகிய இரு வானூர்திகளைக் கண்டுபிடித்துள்ளார். அவர் இரண்டாவதாகக் கண்டுபிடித்த நம்பர் 9 வானூர்திதான் பெண்கள் வரலாற்றிலும் முக்கியத்துவம் பெற்ற சாதனமாக மாறியது. 1903-ம் ஆண்டு ஜூன் 27-ல் டூமொண்டை அகொஸ்தா சந்தித்தார். இந்தச் சந்திப்பு விமானத் துறை தொடர்பானது அல்ல. அகொஸ்தா ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானியும் அல்ல. அவர் 18 வயதுப் பெண். ஆனால், புதிய விஷயங்களைச் செய்யும் துணிச்சல் அவரிடம் இருந்தது. டூமொண்ட், அகொஸ்தாவுக்கு அவரது நம்பர் 9 வானூர்தியை இயக்கக் கற்றுக்கொடுத்தார்.

தனக்குப் பிடித்தமான பாரீஸ் நகரத்தில் தனக்குப் பிடித்த உணவு விடுதியில் டூமொண்ட் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது நம்பர் 9 வானூர்தியை வெளியே நிறுத்தியிருந்தார். வெளியே வந்த அகொஸ்தா டூமொண்ட்டின் நம்பர் 9 வானூர்தியை இயக்கிப் பார்க்க நினைத்தார். அவர் சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வர, அசாத்தியத் துணிச்சலுடன் அதில் பறக்கத் தொடங்கினார். வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணமாக அது மாறியது. ரைட் சகோதரர்கள் விண்ணில் பறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.

தாமதமாகக் கிடைத்த அங்கீகாரம்

கீழே இறங்கியதும் “மிஸ்டர் டூமொண்ட் இந்தப் பயணம் சிறப்பாக இருந்தது” எனச் சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார் அகொஸ்தா. அவரை ஆச்சரியத்துடன் பார்த்த டூமொண்ட், “நீ செய்திருப்பது ஒரு சாதனை. தனியாக விமானத்தை இயக்கி, வானில் பறந்த முதல் பெண் நீதான்” எனக் கத்தியிருக்கிறார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டுப் பத்திரிகையாளார்கள் வானில் பறந்த முதல் பெண் குறித்து செய்தி வெளியிட டூமாண்டை அணுகியிருக்கிறார்கள். ஆனால், டூமொண்ட் அப்படி எந்தச் சாதனையும் நிகழவில்லை என அகொஸ்தாவின் சாதனையைப் பத்திரிகையாளர்களிடம் மறைத்துவிட்டார்.

அந்தக் காலத்தில் பெண்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கவுரவத்துக்குரிய செயலாகப் பார்க்கப்படவில்லை. விஷயம் வெளியில் தெரிந்தால் தன் மகளுக்கு வரன் கிடைக்காமல் போய்விடும் என அகொஸ்தாவின் பெற்றோர் பயந்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக டூமாண்டும் அதை மறைத்துவிட்டார். ஆனால் அகொஸ்தாவுக்குத் திருமணமாகி 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சாதனை வெளியுலகுக்குத் தெரியவந்தது. வரலாறு அதை அங்கீகரித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x