Last Updated : 07 Jan, 2017 10:31 AM

 

Published : 07 Jan 2017 10:31 AM
Last Updated : 07 Jan 2017 10:31 AM

2016: கவனம் பெற்ற உடல்நல நூல்கள்

கடந்த ஆண்டில் உடல்நலம், மருத்துவம், உணவு சார்ந்து பல்வேறு நூல்கள் வெளியாகி இருந்தன. அவற்றில் கவனம் ஈர்த்த நூல்கள்:

»ஆனந்தம் பண்டிதர் l பதிப்பாசிரியர்: கோ. ரகுபதி

காலனி ஆட்சிக் காலத்துக்கு முன்புவரை இந்திய மக்களிடையே பல்வேறு மருத்துவ முறைகள் புழக்கத்தில் இருந்துவந்தன. இந்தப் பன்மைத்தன்மை சரிவடைந்து, அலோபதியும் ஆயுர்வேதமும் முதன்மை இடத்தைப் பிடிக்கத் தீவிரமாக முயன்றுகொண்டிருந்தன. இந்தப் பின்னணியில் சித்த மருத்துவ நிபுணத்துவம் பெற்றிருந்த எஸ்.எஸ். ஆனந்தம் பண்டிதர், தான் நடத்தி வந்த ‘மருத்துவன்‘ இதழில் சித்த மருத்துவத்தின் மேன்மைகளைத் தொடர்ந்து பதிவுசெய்தார். அவை சார்ந்த பதிவுகள்-சாதி மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்ட ஆனந்தத்தினுடைய பிற எழுத்துக்கள் ஆகியவற்றுடன், அவரைப் பற்றிய விரிவான அறிமுகத்தையும் தருகிறது.

காலச்சுவடு பதிப்பகம், தொடர்புக்கு: 04652-278525

» மெல்லக் கொல்லும் பால் l டாக்டர் டி. ஜெகதீசன்

1900-களில் தினசரி நான்கு லிட்டர் பால் சுரந்த மாடுகள், செயற்கை மாட்டுத் தீவனங்களை உண்டு 1960-களில் தினசரி 10 லிட்டர் பால் சுரக்கத் தொடங்கின. தற்போது ஹார்மோன் ஊசியின் மூலம் கலப்பினப் பசுக்கள் தினசரி 30 லிட்டர் பால் சுரக்கின்றன. இதைத்தான் வெண்மைப் புரட்சி என்கிறார்கள். இந்த வெண்மைப் புரட்சி தந்த விபரீதங்களை இந்தப் புத்தகத்தில் பட்டியலிட்டிருக்கிறார் டாக்டர் ஜெகதீசன். அறுபது ஆண்டுகளுக்கு முன் கால்சியம் தேவைக்காக நம் முன்னோர் பால் குடிக்கவில்லை. ஆனால், இன்றைக்குக் கால்சியம் உள்ளிட்ட சத்துகளுக்காக மருத்துவர்களே பால் குடிக்கச் சொல்கிறார்கள். சென்னை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெகதீசன், பல்வேறு நோய்களுக்குப் பால் முக்கியக் காரணம் என்று அறிவியல்பூர்வமான வாதங்களை முன்வைத்திருக்கிறார்.

டி. ஜெகதீசன், தொடர்புக்கு: 044-28525759

» அந்தக் கால மருத்துவர்கள் l டாக்டர் சுதா சேஷய்யன்

தன் நோயாளிகளை விரைந்து சென்று காப்பாற்றுவதற்காக விமானம் வைத்திருந்த மருத்துவர் ரங்காச்சாரி, நோயாளி நடந்து வருவதைப் பார்த்தே நோயை யூகித்த மருத்துவர் குருசாமி, மருந்தே கொடுக்காமல் நோயைக் குணப்படுத்திய மருத்துவர் வி.கே. ராமச்சந்திரன், பாரதியாரின் நண்பரான மருத்துவர் நஞ்சுண்ட ராவ், காந்தியின் ஓட்டுநராகச் செயல்பட்ட மருத்துவர் டி.எஸ்.எஸ். ராஜன், பெரியாரின் நெருங்கிய நண்பராகவும் ஆன்மிகவாதியாகவும் இருந்த மருத்துவர் கடியால ராமச்சந்திரா, திராவிட இயக்கம் வேரூன்றக் காரணமாக இருந்த மருத்துவர் நடேச முதலியார் என அந்தக் காலத்தில் மக்களுக்கு அரிய சேவை ஆற்றிய மருத்துவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் 30 முக்கிய மருத்துவர்களைப் பற்றி பிரபலப் பேச்சாளரும் டாக்டருமான சுதா சேஷய்யன் எழுதிய நூல் இது.

வானதி பதிப்பகம், தொடர்புக்கு: 044-24342810

» தற்கொலை தடுப்பது எப்படி? l டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 2 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது நாட்டுக்கு, வீட்டுக்கு, சமூகத்துக்கு மிகப் பெரிய கேடு என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தற்கொலையைப் பற்றிய அடிப்படைப் புரிதல் பரவலாகத் தேவை. அதற்குச் சிறந்த வகையில் உதவுகிறது லண்டன் மருத்துவரும் பேராசிரியருமான எம்.எஸ். தம்பிராஜா எழுதியுள்ள இந்த நூல். தற்கொலையை மருத்துவ அறிவியல் ரீதியாகப் புரிந்துகொள்ள உதவும் இந்த நூல், அதைத் தடுத்து நிறுத்துவதற்குச் சாத்தியமான யோசனைகளையும் முன்வைக்கிறது.

கிழக்கு பதிப்பகம், தொடர்புக்கு: 044-42009603

» தூங்காமல் தூங்கி l எஸ். மாணிக்கவாசகம்

முப்பத்தைந்து ஆண்டுகளாக மயக்கவியல் (Anaesthesiology) மருத்துவராகப் பணிபுரிந்த மருத்துவர் எஸ். மாணிக்கவாசகத்தின் நினைவுக் குறிப்புகள் புத்தக வடிவம் பெற்றுள்ளன. அறுவை அரங்கம் ஒரு தனி உலகம். அதற்குள் பதற்றத்துடன் வரும் நோயாளிகளை மயக்க மருந்துகள் மூலம் முதலில் தூக்கத்தில் ஆழ்த்தி, அறுவை சிகிச்சை முடிந்தவுடன் அவர்களை இயல்புக்குக் கொண்டுவருவது என்பது இங்கே எழுதியிருப்பதைப் போல அவ்வளவு எளிமையானதல்ல. இது சார்ந்த நேரடி அனுபவங்களைப் பதிவு செய்த வகையில் தனித்துவம் மிக்கதாக மாறியுள்ளது இந்த நூல்.

சந்தியா பதிப்பகம், தொடர்புக்கு: 044-24896979

» அரிவாள் ஜீவிதம் l ஜோஸ் பாழூக்காரன் (தமிழில்: யூமா வாசுகி)

கேரளத்தின் வயநாடு பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடிகளின் மரபணுக்களில் அரிவாள் நோய் (Sickle cell disease) கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ரத்தச் சிவப்பணுக்களில் ஏற்படும் குறைபாட்டால் உருவாகும் இந்த நோய் தரும் வேதனையும் நவீன சமூகம் பழங்குடிகளுக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகளையும் ஒருசேரப் பேசுகிறது மாறுபட்ட இந்த நாவல்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தொடர்புக்கு: 044-26241288

» தாய்மை l லக்ஷ்மி

மறைந்த பிரபல நாவலாசிரியர் லக்ஷ்மி ஒரு மருத்துவர் என்பது பலரும் அறியாதது. டாக்டர் திரிபுரசுந்தரி என்ற பூர்விகப் பெயரைக் கொண்ட அவர், பூப்படைவது முதல் பிள்ளைப்பேறு வரையிலான மருத்துவ அறிவியல் கருத்துகளை எளிய முறையில் இந்த நூலில் விவரித்திருக்கிறார். பெண்கள் தங்கள் உடலைப் பற்றிய அறிவியல் உண்மைகளைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். அத்துடன் கருவுற்றிருக்கும் காலத்தில் தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளும் இந்தப் புத்தகத்தில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. இது எளிமையானதொரு வழிகாட்டி நூல் என்பதில் சந்தேகமில்லை.

சந்தியா பதிப்பகம், தொடர்புக்கு: 044-24896979

» நம் ஆரோக்கியம் நம் கையில் l டாக்டர் குணேசன்

நம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள், அவற்றில் உண்டாகும் நோய்களைப் பற்றி இந்த நூலில் தெளிவாக விளக்கியிருக்கிறார் பிரபல எழுத்தாளரான டாக்டர் கு. கணேசன். நோய்களை முன்கூட்டியே அறிவதற்கான வழிமுறைகள், தடுத்துக் கொள்வதற்கான மருத்துவம், குணப்படுத்தும் உணவுமுறைகள் என ஒரு நோய் மோசமடைவதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் ஒரே நூலில் கொடுத்திருக்கிறார்.

குமுதம் பு (து) த்தகம், தொடர்புக்கு: 044-26426124

» நோயை எதிர்க்கும் உணவுகள் l மேயோ கிளினிக் (தமிழில் ஷாகிர் அஸீம்)

உடலுக்கு ஆற்றலையும் மகிழ்ச்சியையும் தருவது உணவு. நம் மரபு வழக்கப்படி உணவே மருந்து, மருந்தே உணவு. ஒருவருடைய உடல்நிலைக்கு ஏற்ற சரியான உணவுதான், அவருக்கு ஏற்படவுள்ள நோய்களையும் தடுக்கும். பல்வேறு உணவு வகைகள், அவற்றின் நோய் எதிர்ப்பு ஆற்றல் பற்றி இந்தக் குறுநூல் விளக்குகிறது. கனிகள், காய்கறிகள், முழுதானியங்கள், மீன், கொட்டைகள் உள்ளிட்டவற்றை எப்படி, எந்த வகையில் தேர்வு செய்ய வேண்டுமென்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது. இதய ஆரோக்கியம், புற்றுநோய் எதிர்ப்பு, நீரிழிவுக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான தனி வகை உணவுகளையும் இந்த நூல் பரிந்துரைத்துள்ளது சிறப்பு.

அடையாளம், தொடர்புக்கு: 04332-273444

» தமிழர் மருத்துவம் l சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு நேர்காணல்

சித்த மருத்துவத் தாவரங்களைக் களத்திலும் சித்த மருத்துவச் செய்திகளை அச்சிலும் பதிவு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பவர் பாபநாசத்தைச் சேர்ந்த மூத்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு. சித்த மருத்துவம்தான் தமிழரின் ஆதி மருத்துவம் என்று பல்வேறு தரவுகள் மூலம் இந்தப் புத்தகத்தில் எடுத்துரைக்கிறார் மருத்துவர் மைக்கேல். அத்துடன், தாவர-உயிரினப் பன்மை நிறைந்த பொதிகை மலையின் தனிச்சிறப்பைப் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளார். குறிப்பாக இயல் தாவரங்கள் எப்படி நம் மண்ணைக் காக்கின்றன, மருந்தாகப் பயன் தருகின்றன என்பதையும் தெளிவாக விவரித்துள்ளார். இந்த நூலைத் தொகுத்து எழுதியவர்கள் தயாளன், ஏ. சண்முகானந்தம்.

தடாகம், தொடர்புக்கு: 89399 67179

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x