Last Updated : 24 Jul, 2016 03:05 PM

 

Published : 24 Jul 2016 03:05 PM
Last Updated : 24 Jul 2016 03:05 PM

எங்க ஊரு வாசம்: பெட்டி பெட்டியா பலகாரம்!

கல்யாணத்துக்காக ஊரே ஒன்றுகூடி வேலை செய்யும். குழந்தை பெற்றவர்கள், பிள்ளைகளை மடியிலிட்டு உறங்கவைத்தவாறு இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். வயதான, வேலை செய்ய முடியாத கிழவிகள், “அடியே வெரசயா (சீக்கிரமா) குத்துங்க. நெலா நவண்டுக்கிட்டே மேக்கே போவுதில்ல” என்று தானியங்களைக் குத்துகிறவர்களை முடுக்கிவிடுவார்கள்.

மூங்கிச் சம்பா நெல் விதைச்சி

மூணு போகம் வெளைய வெச்சோம்

தோட்டச் சம்பா நெல் விதைச்சி

சூழ இருந்து தண்ணிப் பாச்சி

கருஞ்சுரான் நெல் விதைச்சி

காணி எங்கும் தண்ணிப் பாச்சி

வெள்ளக் கொட்டான் செங்கொட்டான்

விதவிதா நெல் விதைச்சி

அறுத்துக் களம் சேர்த்தோம்

அடிச்சி தூத்தி விட்டோம்

பதர் நீக்கி கொண்டுவந்து

பக்குவமா வீடு சேர்த்தோம்

அவிச்சிக் காயப்போட்டு அடிக்கடி கிண்டிவிட்டோம்

கூடிக் குத்துங்கடி குந்தாணி உடஞ்சிராம

பார்த்துக் குத்துங்கடி பக்குவமா கைசேர்த்து

என்று பாடிக்கொண்டே அடிக்கடி குலவை போடுவார்கள்.

இப்படி ஒரு வாரத்துக்கு நெல்லைக் குத்தி மூன்று மூட்டை, நான்கு மூட்டைக்கு அரிசியைச் சேர்ப்பார்கள். இனி பருப்பு சேகரிக்க வேண்டும். பருப்புகளிலேயே துவரம் பருப்புதான் முக்கியமாக இப்படி நல்ல நாளுக்கும் தீய நாளுக்கும் உதவும். ஒரு மூட்டை துவரம் பயற்றை எடுத்து, செம்மண்ணில் தண்ணீர் விட்டுப் பிசைந்து வீட்டின் ஒரு மூலையில் வைத்துவிடுவார்கள். காலையில் வைக்கும் பயற்றை மாலையில் மீண்டும் தண்ணீர் விட்டுப் பிசைந்து வைப்பார்கள்.

இப்படியே மூன்று நாள் வைத்து, மூன்றாவது நாள் காலையில் செம்மண்ணோடு இருக்கும் பயறை அள்ளிக் காயப்போடுவார்கள். பிறகு மற்ற காணப் பயறு (கொள்ளு), கல்லுப் பயறு, தட்டாண் பயறு, பச்சைப் பயறு ஆகியவற்றை அரை மூட்டை, ஒரு மூட்டை என்று எடுத்து பெரிய பெரிய கல் அடுப்பு கூட்டி, வரையோடுகளில் போட்டு வறுத்தெடுப்பார்கள்.பல் விளக்க நெல்உமி வறுத்த பயறு வகைகளை, கல்லும் மண்ணும் நீங்குவதற்காக, புடைத்து எடுப்பார்கள் பெரியவர்கள்.

குமரிகள் எல்லோரும் பெரிய, பெரிய சாக்குகளைக் கொண்டுவந்து மந்தையில் விரித்து, திருகைகளை அதில் தூக்கி வைத்து, ஒருவர் திருகைக் குழியில் பயறை அள்ளிப்போட, இன்னொருத்தி திருகையைச் சுற்றி அதை உடைப்பாள். இப்படிப் பயறு வகைகளை உடைத்துப் பருப்பாக்குவதற்கு இரண்டு நாள் ஆகும். இரவு நேரம் வறுத்த பயறு வகைகளின் மணம் ஊரெங்கும் தவழ்ந்து வர, சின்னப் பிள்ளைகள் எனக்கு, உனக்கு என்று ஓலைக் கொட்டானில் ஆளுக்கு ஒரு செறங்கா பயறை வாங்கிக்கொண்டு தின்றவாறே மந்தையில் அங்கும் இங்குமாக அலைவார்கள்.எண்பது வயதாகும் கோவிந்தம்மாள் மூட்டை, மூட்டையாக நெல் குத்தி அம்பாரமாகக் குவிந்திருக்கும் நெல் உமியைத் தீயிலிட்டுக் கருக்கிச் சாம்பலாக்குவாள்.

அந்தச் சாம்பலைப் பல் விளக்குவதற்காக ஊர்க்காரர்கள் கலயம் கலயமாக அள்ளிக்கொண்டு போய்க் கொல்லைப்புறத்தில் வைத்துக்கொள்வார்கள். பிறகு மசால் சாமான்களை வறுத்து, இடிக்க வேண்டும். பகலில் எல்லோரும் காட்டுக்குப் போய்விடுவதால் நெல்லைக் குத்துவது, பயறை உடைப்பது என்று எல்லா வேலைகளும் இரவில்தான். பாட்டும் கதையுமாக ஒரு சாமம் வரயிலும் நடக்கும். மந்தையைச் சுற்றியிருக்கும் மரங்களில் அடைந்திருக்கும் பறவைகள் எல்லாம் இவர்களை அதிசயமாகப் பார்த்தபடி இரவு நேரங்களில் இந்த மனிதர்கள் நம்மை இப்படித் தொந்தரவு செய்கிறார்களே.

நாம் இந்த மரத்திலேயே அடைந்திருப்போமா அல்லது வேறு மரம் தேடிச் செல்வோமா என்று யோசித்தவாறு மரத்துக்கு மரம் பறந்து பறந்து இவர்களைப் போலவே ஒரு சாமத்துக்குப் பிறகுதான் அடங்கும். நிலவும்கூடக் கொஞ்சமாய் வெளிறிப் போய் மேற்கில் சாய்ந்துகொண்டு போகையில்தான் இவர்கள் உறங்கப் போவார்கள்.மாப்பிள்ளை வீட்டுக்குப் புட்டுஇட்லி என்பது அப்போது யாருக்கும் தெரியாததாக இருந்தது. ஒரே தோசைதான். அடுத்து பணியாரம். இதற்காக உளுந்தப் பயறை உடைத்தெடுப்பார்கள்.

செம்மண் உருட்டிப் போடுவதால் துவரம் பருப்பு மட்டுமே தோலில்லாமல் இருக்கும். மற்ற பயறுகள் எல்லாம் தோலோடுதான் இருக்கும். ஆனால் வறுத்த பயறுகளின் வாசம் குழம்புச் சட்டிகளில் கடைசிவரை இருக்கும்.இனி மாவு உருண்டை, புட்டு, கொழுக்கட்டை என்று கல்யாணப் பலகாரங்கள் செய்யப் பச்சரிசியும், தினை மாவும் வேண்டும்.

நெல்லையும் தினையையும் எடுத்து, குத்தி, அரிசியாக்கி பெரிய பெரிய மொடாக்களில் நிறைத்து வைத்துக்கொள்வார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு அகன்ற பெரிய, பெரிய பனை ஓலைப் பெட்டிகளில் அதுவும் ஏழு, எட்டுப் பெட்டிகள்வரை பலகாரத்தைக் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும். அதோடு ஊருக்குள் இருக்கும் எல்லோருக்கும் இந்தப் பலகாரங்கள் பகிரப்படும். அதனால் இரண்டு மூட்டை தினையையும், ஒரு மூட்டை நெல்லையும் குத்துவார்கள். இப்படி அரிசி, பருப்பு, பயறு வகைகளைச் சேர்க்கவே ஒரு மாதம் ஆகிவிடும்.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x