Last Updated : 28 Feb, 2017 10:15 AM

 

Published : 28 Feb 2017 10:15 AM
Last Updated : 28 Feb 2017 10:15 AM

ஆங்கிலம் அறிவோமே - 149: பொதுவாக பொதுமைப்படுத்தக் கூடாது!

கேட்டாரே ஒரு கேள்வி:

Sit here என்ற வாக்கியத்தை passive voice-ஆக மாற்றிக் காட்டுங்களேன்.

ஆங்கிலத் திரைப்படங்களைத் தொலைக்காட்சியில் பார்க்கும் இரு வாசகர்களிடமிருந்து இரு கேள்விகள் வந்திருக்கின்றன. “ஆங்கிலப் படங்களில் ‘Bingo’ என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிக்கிறார்கள். இதற்கு என்ன பொருள்?”

Bingo என்பது ஒரு விளையாட்டு. அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டது. Lotto என்றும் இதைக் கூறுவார்கள்.

நீங்கள் பார்த்த திரைப்பட த்தில் இந்த விளையாட்டு இடம் பெறவில்லை என்றால் கீழே உள்ள அர்த்தத்தில் அதைப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

உங்களுக்குத் திருப்தி தரும் ஒரு விஷயம் நடந்துவிட்டால் நீங்கள் ‘Bingo’ என்று கூறிப் பரவசப்படலாம்.

ஒருவர் தனது ஊகத்தை வெளியிடுகிறார். அவர் மிகச் சரியாக ஊகித்துவிட்டார் என்று கருதினால் நீங்கள் ‘Bingo’ எனச் சொல்லி அவரைப் பாராட்டலாம்.



Catamaran எனும் ஆங்கில வார்த்தை கட்டுமரம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து வந்தது என்பார்கள். இப்படி எத்தனை வார்த்தைகள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்றன?

எண்ணிக்கையைக் குறிப்பிட முடியாது. பல மொழிகளில் சில வார்த்தைகள் ஒன்றாகவே அல்லது ஒன்று போலவே இருக்கும். அவை ஆங்கிலத்திலும் அப்படியே அல்லது கிட்டத்தட்ட அப்படியே பயன்படுத்தப்படும்போது பல மொழிகளும் ஒரிஜினாலிட்டிக்குச் சொந்தம் கொண்டாட வாய்ப்பு உண்டு.

என்றாலும் சில வார்த்தைகளின் அடிப்படை தமிழ்தான் என்பதை அழுத்தமாகவே குறிப்பிட முடியும். பந்தல் என்பதிலிருந்து pandal, சுருட்டு என்பதிலிருந்து cherrot. மிளகு தண்ணீர் என்பதிலிருந்து mulligatawny. அணைக்கட்டு என்பதிலிருந்து anicut, கயிறு என்பதிலிருந்து coir.



நண்பரே, கேட்டீர்களே ஒரு கேள்வி! Sit here என்பதை passive voice-ஆக மாற்ற முடியாது. Present tense-ல் உள்ள உத்தரவு வாக்கியங்களை passive voice-க்கு மாற்ற முடியாது. ஏனென்றால் அந்த வாக்கியங்களில் objects இல்லை. தோராயமாக ‘Be seated here’ என்பதுபோல passive voice-ல் மாற்றலாம்.

Do not smoke என்பதை ‘you are requested not to smoke’ எனலாம்.



Bolt from the blue என்றால் என்ன?

சிறிதும் எதிர்பாராதது, வியப்பளிப்பது. இதை bolt out of the blue என்றும் கூறுவார்கள்.

Bolt என்பது இங்கே thunderbolt என்பதைக் குறிக்கிறது. அதாவது இடி முழக்கம். Blue என்பது ஆகாயத்தைக் குறிக்கிறது. வானம் நீலமாகவும், நிர்மலமாகவும் இருக்கும்போது இடி முழக்கம் கேட்டால் உங்களுக்கு தூக்கிவாரிப்போடும்தானே.

‘Before’, ‘in front of’ ஆகிய இரண்டுக்கும் இடையே ஏதாவது வேறுபாடு உண்டா?

Before என்பது பொதுவாக இடத்தைக் குறிப்பதில்லை. நேரத்தைக் குறிக்கிறது. She arrived after 11.00 a.m. But she was asked to be in the seat before 10.00 a.m.

In front of என்பது இடத்தைக் குறிப்பது.

I was waiting in the queue. In front of me there were about 40 people.

The tall man who was sitting in front of me in the cinema hall was obstructing my view.

Before என்பதன் எதிர்ச்சொல் after. In front of என்பதன் எதிர்ச்சொல் behind.

வரிசையில் நிற்கும்போது உங்களுக்குப் பின் தாமதமாக வந்த ஒருவர் உங்களுக்கு முன்னால் சென்று நிற்கிறார். நீங்கள் இப்படிக் கூறி உங்கள் உரிமையை நிலை நாட்டிக்கொள்ளலாம். “I was here before you (உங்களுக்கு முன்பே நான் வந்துவிட்டேன்). So I should be in front of you in the queue (எனவே நான் வரிசையில் உங்களுக்கு முன்பாக நிற்க வேண்டும்)”.

இரு விதிவிலக்குகள். ஒரு பட்டியலில் உள்ள நிலையைக் குறிப்பிடும்போது before பயன்படுத்தப்படுகிறது. ‘A’ comes before ‘B’ in the list of alphabets.

முக்கியமான ஒருவருக்கு முன் வந்து சேரும் போதும் before பயன்படுத்தப்படுகிறது.

The mischievous college boy was brought before the Principal.

You have to appear before the Judge.

போட்டியில் கேட்டுவிட்டால்?

The Judge awarded............. to the plaintiff to the tune of Rs. 40,000/-.

a) fine

b) damage

c) damages

d) remuneration

e) amount

வழக்கின் தீர்ப்பில் வாதிக்கு (plaintiff) சாதகமாக ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறார் நீதிபதி என்கிறது வாக்கியம்.

‘சாதகமாக’ எனும்போது fine (அபராதம்) என்ற வார்த்தை பொருந்தாது. தவிர fine என்றால் imposed என்ற verb இடம்பெறுமே தவிர, awarded அல்ல.

Remuneration என்றால் சன்மானம். வழக்கின் தீர்ப்பில் யாரையும் யாருக்கும் சன்மானம் அளிக்கும்படி நீதிபதி கூறுவதில்லை. Amount என்றால் தொகை. Amount என்பதை awarded என்ற வார்த்தையோடு நேரடியாகத் தொடர்புபடுத்த முடியாது.

Damage என்றால் பாதிப்பு. இந்த வார்த்தையும் பொருந்தவில்லை.

Damages என்றால் நஷ்டஈடு. நீதிமன்றத் தீர்ப்போடு தொடர்புகொண்ட வார்த்தை இது. எனவே வாதிக்குப் பிரதிவாதி 40,000 ரூபாய் நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென்று நீதிபதி தீர்ப்பு கூறியிருக்கிறார்.

எனவே The Judge awarded damages to the plaintiff to the tune of Rs. 40,000/- என்பதுதான் சரியான விடை.

முரண் வாக்கியங்கள் வாசகர்களின் பங்களிப்பு

There is no excuse for incorect spelling என்ற வாக்கியத்தை இரு வாரங்களுக்கு முன்பு கேட்டிருந்தோம். எழுத்துப் பிழை இருப்பதை ஏற்றுக்கொள்ள மன்னிக்க முடியாது என்று கூறும் அந்த வாக்கியத்தில் incorrect என்ற வார்த்தை தவறாக அளிக்கப்பட்டிருந்தது. ஓர் ஆலோசனையைக் கூறும்போதே அதை மீறும்படியான ஒரு விஷயமும் அதே வாக்கியத்தில் இடம்பெறக்கூடும் என்பதை விளக்கக் கீழே உள்ள இரு வாக்கியங்களையும் கூடுதலாகக் குறிப்பிட்டிருந்தோம்.

A verb have to agree with its subjects.

Avoid using the same word over and over and over again

இதேபோன்ற முரண் வாக்கியங்களை வாசகர்களும் எழுதி அனுப்பலாம் என அறிவித்திருந்தோம். பல வாசகர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் கணிசமானவர்கள் கேட்க ஒரே மாதிரி இருக்கும் வார்த்தைகளை மாற்றிப் போட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான். எடுத்துக்காட்டு: A word of prize would be encouraging என்பதுபோல. இது தவறான வார்த்தையைக் கொண்ட வாக்கியமே தவிர, முரணான வாக்கியம் அல்ல.

கீழ்க்கண்ட வாசகர்களின் முயற்சிகள் நிச்சயம் பாராட்டத்தக்கவையாக இருக்கின்றன.

திருச்சியைச் சேர்ந்த எஸ்.செண்பகம் வாசகரின் வாக்கியங்கள் இவை.

The silence in the room was deafening.

I would give my right arm to be ambidextrous.

மதுரையைச் சேர்ந்த ஆர். ரஜினி பெலுவா ஷோபிகா அனுப்பியுள்ள வாக்கியம் இது.

All generalisations are wrong. (இதுவே ஒரு generalization!)

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கே.பி. ராமகிருஷ்ணன் அனுப்பியவை:

1. Thank God I'm an atheist.

2. May I ask a question?

3. Click start button to shut down the computer.

4. I distinctly remember forgetting that.

5. Include me out.

திருச்சியைச் சேர்ந்த முகம்மது அர்ஷத் அனுப்பியிருக்கும் வாக்கியங்கள் சுவாரஸ்யமானவை. குறிப்பாக இறுதி வாக்கியம்:

1. a sentence must start with a capital letter and end with a full stop

2. Because, ‘because' is a conjunction, a sentence should not start with because.

3. Shall we go for walking by an auto?

4. Stand in a straight circle.

5. Give me a red pen of any colour.

I think all the above four sentences are correct.

சிப்ஸ்

# Stab என்றால்?

கத்தியால் குத்துதல்

# ஜன்-தன் என்பதன் ஆங்கில வார்த்தையின் பொருள் என்ன?

அவை இந்திச் சொற்கள். JAN என்றால் மக்கள், DHAN என்றால் பணம் அல்லது செல்வம்.

# நான் (ஒடிசாவில் உள்ள) பூரிக்குச் சென்று பூரி சாப்பிட்டேன் என்பதை எப்படி எழுதுவது?

I ate poori in Puri (எந்த ‘p’க்கு capital letter பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் கவனியுங்கள்).

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x