Last Updated : 14 Feb, 2017 11:43 AM

 

Published : 14 Feb 2017 11:43 AM
Last Updated : 14 Feb 2017 11:43 AM

மெய்நிகருடன் கைகோக்கும் மருத்துவம்

பொழுதுபோக்குத் துறையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்த மெய்நிகர் தொழில்நுட்பத்தை (வெர்சுவல் ரியாலிட்டி) மருத்துவத் துறையில் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் தொடங்கியுள்ளன. கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் குழுவொன்று ‘விஷுவல் வெர்டிகோ’ (Virtual Vertigo) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு இத்தொழில்நுட்பத்தைப் பரீசிலித்து வருகிறது. சில குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட காட்சிகளைக் காணும்போது ஏற்படும் தலைசுற்றல், வாந்தி உணர்வைத்தான் ‘விஷுவல் வெர்டிகோ’ என்று கூறுகிறார்கள்.

பொருளா அல்லது நதியா?

சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்லும் ஒருவரை ‘விஷுவல் வெர்டிகோ’ பாதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பாதிக்கப்பட்ட அந்த நபரைப் பிரச்சினைக்குள்ளாக்குவது உண்மையிலேயே பல அடுக்குமாடித் தோற்றமா, அல்லது அங்கு அடுக்கிவைக்கப்பட்டுள்ள பொருட்களா அல்லது அந்தக் கட்டிடத்திலிருந்து பார்க்கும் நதியா என்பதை மருத்துவர்கள் துல்லியமாகக் கண்டறிவதில் பிரச்சினைகள் உள்ளன. ஏனெனில், ஒவ்வொரு நோயாளியையும் பாதிக்கும் சூழல் ஒவ்வொன்றாக இருக்கின்றன.

“ஒரு தருணத்தில் பாதிக்கும் ‘விஷுவல் வெர்டிகோ’வுக்கான காரணங்கள் குறித்து இன்னமும் எங்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கான மறுவாழ்வு சிகிச்சைகளும் போதுமான அளவில் இல்லை. இதற்காகத்தான் நாங்கள் வெர்சுவல் தொழில்நுட்பத்தை நாடுகிறோம்” என்கிறார் கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைப் பேராசிரியர் ஜியார்ஜினா பவல்.

மெய்நிகரின் பல அவதாரங்கள்!

மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் வேறுபட்ட மெய்நிகர்க் காட்சிகளை நோயாளிகளுக்குக் காண்பித்து, எந்தச் சூழல் நோயாளியைப் பாதிக்கிறது என்பதைக் கண்டறிய முடியும். அதற்கான பிரத்யேக சிகிச்சைகளையும் கைக்கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்ட உறுப்புப் பகுதியில் வலியிருப்பது போலத் தோன்றும் ‘ஃபேண்டம் லிம்ப்’ குறைபாட்டுக்கும் சிகிச்சையளிப்பதற்கு மெய்நிகர் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியும் என்பது தெரியவந்துள்ளது. மெய்நிகர் சிகிச்சைகள் மூலம், 12 அமர்வுகளுக்குப் பின்னர் ‘ஃபேண்டம் லிம்ப்’ குறைபாடுள்ள நோயாளிகளின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக லான்செட் ஆய்வறிக்கை கூறுகிறது.

தீவிர மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குள்ளானவர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கும் மெய்நிகர் தொழில்நுட்பம் பயன்படுமா என்பது குறித்து தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் எந்த நிலையில் மன அழுத்தம் உருவாகிறது என்பதைக் கண்டுபிடித்து, அந்தக் குறைபாடுகளைக் களைவதற்கு இத்தொழில்நுட்பம் உதவியாக இருக்கலாம். மனித மனம் எதிர்கொள்ளும் விதவிதமான பயங்களைக் களைவதற்கும் இத்தொழில்நுட்பம் உதவுகிறது. சிலந்திகள் சார்ந்த பயத்திலிருந்து வெளியே வருவதற்கு நியூயார்க்கைச் சேர்ந்த தொழில்முனைவோரான டிம் சுஸ்மான் ஒரு மெய்நிகர் செயலியை உருவாக்கியுள்ளார்.

தமிழில்: சங்கர் © தி இந்து (ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x