Last Updated : 23 Nov, 2013 12:00 AM

2  

Published : 23 Nov 2013 12:00 AM
Last Updated : 23 Nov 2013 12:00 AM

வெண் புள்ளி பிரச்சினைக்கு புதிய முறை சிகிச்சை - ஸ்டான்லி மருத்துவமனை சாதனை

உடலில் தோன்றும் வெண் புள்ளி பிரச்சினைக்கு புதிய முறையில் சிகிச்சை அளித்து சாதனை புரிந்துவருகிறது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை.

சமீபகாலமாக அரசு மருத்துவமனைகள் தங்களின் ஆய்வுகளின் மூலம் புதிய சிகிச்சை முறைகளைக் கண்டறிந்து வருகின்றன. அந்த சிகிச்சை முறையால் பல நோய்களுக்கும் தீர்வு கண்டு சாதனை புரிந்து வருகின்றன. அதற்கு உதாரணமாகத் திகழ்கிறது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை. இங்கு வெண் புள்ளி பிரச்சினைக்குச் சிகிச்சை அளிக்க தனியாக ஒரு துறை தொடங்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு நிறக் குறைபாடால் உடலில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றுகின்றன. இதை முந்தைய காலங்களில் ‘வெண் குஷ்டம்’ என்றும் ‘வெள்ளைத் தழும்புகள்’ என்றும் தவறாக அழைத்து வந்தனர். 2010-ல் தமிழக அரசு வெளியிட்ட‌ அரசாணையில் இந்த வார்த்தைகளைத் தடை செய்து, ‘வெண் புள்ளிகள்’ என்று அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

வியாதியோ, குஷ்டமோ அல்ல!

உடலின் தோல் பகுதியில் வெண் புள்ளிகள் தோன்ற முக்கியக் காரணம், தோலுக்கு நிறம் தரும் ‘மெலனின்’ எனும் வேதிப்பொருளைச் சுரக்கும் அணுக்கள் இல்லாமல் போவதுதான். இது வியாதியோ, குஷ்டமோ அல்ல; தோலில் தோன்றும் நிற மாற்றமே. இந்தியாவில் 12 கோடி பேருக்கு இந்தப் பிரச்சினை உள்ளது. இது ஒருவர் மூலம் இன்னொருவருக்குப் பரவாது. பரம்பரை நோயும் அல்ல.

உடலில் உள்ள வெண் புள்ளிகளைக் காரணம் காட்டி சமூகத்தில் பலரும் ஒதுக்கப்பட்டு வந்தனர். திருமணம் நடப்பதிலும் சிக்கல் இருந்தது. முன்பெல்லாம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மருந்துகளோ அல்லது சிகிச்சை முறைகளோ பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது.

வெண் புள்ளிகள் உள்ளோருக்குத் தற்போது மகிழ்ச்சி யான செய்தி கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன முறை சிகிச்சைகள் மூலம் வெண் புள்ளிகளைக் குணப்படுத்த முடியும் என்று நிரூபித்துள்ளனர்.

முடி நரைப்பது போன்றதே

இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை சருமநோய் சிகிச்சைத் துறை தலைவர் பேராசிரியர் ரத்தினவேல், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

தலைமுடி நரைப்பது போன்றதுதான் தோல் நரைப்பதும். வெண் புள்ளியில் பரவும் தன்மை உடையது, பரவும் தன்மை இல்லாதது என்று இரண்டு வகை உள்ளன. இரண்டு வகைகளுக்கும் மருந்துகள் உள்ளன. அவற்றை ஆறு மாதம் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். இதிலேயே 60% பாதிப்பு தீர்ந்துவிடும். 40 சதவீதத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால்போதும்.

ஸ்டான்லியில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் கிடைத்த ஒரு தீர்வை வெண் புள்ளி சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறோம். ‘பைஃப்ளோரோயுரேசின்’ என்ற அந்தச் சிகிச்சை முறையில் புற்றுநோய்க்குப் பயன்படுத்தும் ஒரு மருந்தை வெண் புள்ளிகள் உள்ள இடத்தில் பயன்படுத்தி குணப்படுத்தலாம்.

இது தவிர, ‘பன்ச் கிராஃப்டிங்’, ‘ஸ்கின் கிராஃப்டிங்’, ‘மெலனைட் கல்ச்சர்’ போன்ற சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உடலில் வெண் புள்ளிகள் உள்ள இடத்தில் துளைகளிட்டு உடலின் வேறு ஒரு பகுதியில் இருந்து நிறம் தரக் கூடிய அணுக்களை எடுத்து வைத்து செய்யப்படுவது ‘பன்ச் கிராஃப்டிங்’.

தோலை எடுத்து ஆபரேஷன்

உடலில் வேறு ஒரு பகுதியில் இருந்து தோலை எடுத்து வெண் புள்ளிகள் உள்ள இடத்தில் வைத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை ‘ஸ்கின் கிராஃப்டிங்’.

வெண் புள்ளிகள் உள்ள இடத்தில் நிறம் தரக் கூடிய எந்த அணு இல்லையோ அதை வேறு ஒரு பகுதியில் இருந்து எடுத்து வைத்து வளர்ப்பது ‘மெலனைட் கல்ச்சர்’.

இதுமட்டுமின்றி, ‘டாட்டூயிங்’ எனப்படும் பச்சை குத்தும் முறை மூலம் வெண் புள்ளிகள் உள்ள இடத்தில் தோல் நிறத்தில் சாயம் பூசுதல் போன்ற பல்வேறு சிகிச்சைகள் மூலம் இதை குணப்படுத்தலாம்.

வெண் புள்ளிகள் உடலில் தோன்ற ஆரம்பித்தவுடனேயே சிகிச்சைக்கு வந்துவிட்டால் விரைவில் குணப்படுத்தலாம். இடைவிடாமல் சிகிச்சை எடுத்துக் கொள்வது, காலை ஏழு மணி வெயிலில் சிறிது நேரம் நிற்பது போன்றவற்றின் மூலம் வெண் புள்ளிகள் புதிதாக ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

இதற்கு சிகிச்சை அளிப்பதற்காகவே ஸ்டான்லியில் இரு மாதங்களுக்கு முன்பு தனியான ஒரு துறை ஆரம்பிக்கப்பட்டது. கடந்த மாதத்தில் மட்டும் வெண் புள்ளிகள் கொண்ட‌ 48 பேருக்குச் சிகிச்சை அளித்துள்ளோம்.

தனியார் மருத்துவமனைகளில் வெண் புள்ளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஒரு அங்குலத்துக்கு சுமார் ரூ.12 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இங்கு மிக மிகக் குறைவான கட்டணத்தில் தரமான‌ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x