Last Updated : 24 Jan, 2017 10:47 AM

 

Published : 24 Jan 2017 10:47 AM
Last Updated : 24 Jan 2017 10:47 AM

சேதி தெரியுமா? - வளர்ச்சி விகிதம் குறைகிறது

‘சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund-IMF) வேர்ல்ட் எகனாமிக் அவுட்லுக்’ (World Economic Outlook) என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட அளவைவிட வளர்ச்சி விகிதம் குறையும் எனச் சொல்லப்பட்டுள்ளது. 7.6 சதவீதம் வளர்ச்சி விகிதம் இருக்கும் என முன்பு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் இந்தியாவில் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அதனால் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட அளவிலிருந்து 1 சதவீதம்வரை வளர்ச்சி விகிதம் குறையும் என சர்வதேச நாணய நிதியத்தின் இந்த அறிக்கை சொல்கிறது. இது ஐநாவின் துணை அமைப்பு. இதன் தலைமையகம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்த அமைப்பு 1945-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிரான்ஸைச் சேர்ந்த கிறிஸ்டின் லகார்ட் இதன் நிர்வாக இயக்குநராகச் செயலாற்றிவருகிறார். 189 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன.



பூமியின் ஆதாரப் பொருள்

பூமியின் உள்வட்டப் பகுதியில் இரும்பு, நிக்கலுக்கு அடுத்து குறிப்பிடத் தகுந்த அளவுக்கு சிலிக்கான் உள்ளதாக ஜப்பானைச் சேர்ந்த தொஹோகு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் உள்வட்டப் பகுதியில் என்ன பொருள் உள்ளது என்ற ஆய்வு பல ஆண்டுகளாக நடந்துவந்தது. இந்நிலையில் பூமியின் உள்வட்டப் பகுதியில் நிலவுகின்ற உயர் தட்பவெப்ப நிலையையும், அழுத்தங்களையும் மீண்டும் உருவாக்கி நடத்திய சோதனைகள் மூலம் இந்த ஆதாரப் பொருள் சிலிக்கான் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர். அதாவது உள் வட்டப் பகுதியில் 5 சதவீதம் சிலிக்கான் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. பூமியின் உள்வட்டப் பகுதி என்பது 1,200 கிலோமீட்டர் விட்ட அளவு கொண்டது. இதில் இரும்பு 85 சதவீதமும், நிக்கல் 10 சதவீதமும் உள்ளன. மீதி உள்ள 5 சதவீதம் என்ன பொருள் உள்ளது என்பதான தேடலுக்கு முடிவாக இந்த ஆய்வு வெளிவந்துள்ளது.



இந்தியாவில் குறையும் வேலைவாய்ப்பு

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organization -ILO) ‘வேர்ல்ட் எம்ப்ளாய்மெண்ட் சோஷியல் அவுட்லுக்’ (World Employment and Social Outlook) என்னும் தலைப்பில் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் வேலைவாய்ப்பு 2017-ம் ஆண்டு குறையும் எனக் கூறியுள்ளது. அந்த அறிக்கையின்படி 2017-ம் ஆண்டு வேலைவாய்ப்பற்றவர்கள் ஒரு லட்சம் பேர் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதேபோல 2018-ம் ஆண்டு இரண்டு லட்சமாக இது உயர வாய்ப்புள்ளது. இது ஐநாவின் முகமை அமைப்பு. இந்த அமைப்பு 1919-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் பொது இயக்குநராக அமெரிக்காவைச் சேர்ந்த கைரைடர் செயலாற்றிவருகிறார். இதன் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது. 186 நாடுகள் இதன் உறுப்பினர்கள்.



ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர் போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது. அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் சிலர் கைது செய்யப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து அவர்களை விடுதலை செய்யக் கோரியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை மெரினாவில் மாணவர்கள் முதலில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பிறகு தமிழகம் முழுவதும் இந்தப் போராட்டம் பரவியது. நெல்லை, மதுரை, திருச்சி, சேலம் எனப் போராட்டம் தீவிரம் அடைந்தது. சென்னை மெரினாவில் ஜனவரி 17-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எந்த அரசியல் கட்சியும் சாராது இந்தப் போராட்டம் நடந்துவருகிறது. ஈழப் போர் நிறுத்த ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய போராட்டம் இது.



சிபிஐக்குப் புதிய இயக்குநர்

மத்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த அனில் சின்காவின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்துப் புதிய இயக்குநராக அலோக் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், காங்கிரஸைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கமிட்டி இவரை இந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர் டெல்லி நகரக் காவல் ஆணையாளராகவும் திகார் சிறைச்சாலை தலைமை இயக்குநராகவும் ஏற்கெனவே பணியாற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x