Published : 28 Mar 2014 00:00 am

Updated : 07 Jun 2017 11:53 am

 

Published : 28 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Jun 2017 11:53 AM

விவாதம்: காமெடியின் களப்பிரர் காலம்

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த கலைஞர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் அதில் நகைச்சுவை நடிகர்களின் பெயர்கள் நிச்சயம் இடம்பெறும். கலைவாணர், டி.எஸ். பாலையா, நாகேஷ் என்று தொடங்கும் அந்தப் பட்டியலில் கடைசியாக இடம்பெறும் காமெடியன் வடிவேலுதான். அதன் பின்னர் நகைச்சுவை நடிகர்கள் யாரும் இல்லையா என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில் அவர்கள் உருவாக்கும் நகைச்சுவை சுவையாக இல்லை என்பதுதான்.

நகைச்சுவையில் இந்தியத் திரையுலகின் எந்தப் பகுதிக்கும் சவால் விடும் வகையிலான சிறந்த கலைஞர்களைக் கொண்டது தமிழ் சினிமா. என்றாலும் கடந்த சில வருடங்களாக நகைச்சுவை என்ற பெயரில் ஒப்பேற்றிக்கொண்டிருப்பவர்களை சிறந்த கலைஞர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. எனவேதான் நகைச்சுவை வறட்சி மிக்க இந்தக் காலகட்டத்தை ‘காமெடியின் களப்பிரர் காலம்’ என்று சொல்லத் தோன்றுகிறது.


சந்தானம், சூரி, தம்பி ராமையா, பிரேம்ஜி, சத்யன், கஞ்சா கருப்பு போன்ற பல நடிகர்கள் கடந்த சில வருடங்களாக இயங்கிவந்தாலும் அவர்கள் நடிக்கும் காட்சிகள் பெரும்பாலானவை கற்பனை வறட்சி கொண்டவையாகவும் வெறுப்பை ஏற்படுத்தும் விதமாகவும்தான் உள்ளன. நாயக நடிகர்களின் நண்பர்களாகப் படம் முழுவதும் வரும் பாத்திரங்களில் சந்தானம், சூரி இருவரும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்கள். குறிப்பாக ட்ராக் காமெடியாக இல்லாமல் ’கதையுடன் இணைந்த கதாபாத்திர’ங்களில் நடித்துவருகிறார்கள். முன்னவர் கவுண்டமணியையும் பின்னவர் வடிவேலுவையும் அப்பட்டமாக நகலெடுத்தாலும் அவர்கள் இருவரிடம் இயல்பாகவே இருந்த நகைச்சுவையில் பத்து சதவீதம்கூட இவர்களிடம் இல்லை. அரசியல் காரணங்களால் வனவாசத்திற்குச் சென்றுவிட்ட வடிவேலு ஏற்படுத்திய வெற்றிடத்தில் இந்த நடிகர்கள் வேரூன்றிவிட்டார்கள்.

லொள்ளு சபா காலத்தில் ‘யாரிந்த இளைஞர்?’ என்று திரும்பிப் பார்க்க வைத்த சந்தானம் சினிமாவில் நுழைந்தபோது சின்னச் சின்னப் பாத்திரங்களில் கவனம் ஈர்த்தார். லொள்ளு சபாவில் பெரிய நடிகர்களை இமிடேட் செய்து நடித்து வந்தவர், பிரதான நகைச்சுவை நடிகராகத் திரையில் வளர்ந்தபோது கவுண்டமணியின் பாணியையே பின்பற்றினார்.”யாருடா இவன் பன்னிக்கு பனியன் போட்ட மாதிரி?” “யாருடாது காக்கையை வறுத்து கல்லாவில் உக்கார வச்சது?” போன்ற வசனங்கள் கவுண்டரின் பாதிப்பில் உருவானவை என்றாலும், காட்சிகளின் ஓட்டத்தில் இயல்பாக வெளிப்படும் கிண்டலாக இல்லாமல் (உருவம் தொடர்பான கிண்டல் சரியா என்பது வேறு விவாதம்!) எப்படியாவது சிரிக்க வைக்க வேண்டும் என்ற பிரயத்தனத்துடன் எழுதப்படும் வசனங்களாக இவை அமைந்துவிடுகின்றன. தொடர்ந்து “யாருடா இவன் டேஷ் டேஷ் மாதிரி இருக்கான்” போன்ற வசனங்களைத்தான் சந்தானம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். அதில் பாதிக்கு மேல் சிரிப்பை வரவழைப்பதில்லை.

ராஜேஷ் இயக்கிய ‘சிவா மனசுல சக்தி’ என்ற படத்திலிருந்துதான் நாயகனுடன் எல்லாக் காட்சிகளிலும் வரும் சந்தானம் நடிக்கத் தொடங்கினார். அந்தப் படத்தில் பல காட்சிகள் மிகவும் நீளமான, வலிந்து சிரிக்க வைக்கும் காட்சிகளாக இருந்தன. ராஜேஷின் அடுத்த படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் சந்தானத்தின் காமெடி சந்தேகமில்லாமல் நன்றாகவே அமைந்தது. எனினும், எதிராளி தேமேயென்று பார்த்துக்கொண்டிருக்க சந்தானம் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவதைத் தொடங்கி வைத்தது இந்தப் படம் தான். அதன் பின்னர் வந்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திலும் இதே மாதிரியான காட்சிகள்தான். ராஜேஷ்- சந்தானத்தின் அடுத்த ’படைப்பான’ ’ஆல் இன் ஆல் அழகுராஜா’வில் சாயம் முற்றிலும் வெளுத்தது. ஒரு காட்சியில்கூட சிரிப்பு வரவில்லை என்று ரசிகர்கள் திரையைக் கிழிக்காத குறை.

சூரியின் கதையும் கிட்டதட்ட இதே தான். பரோட்டா கடையில் “இது தப்பாட்டம்..மொதல்லேருந்து கோட்டைப் போடு” என்ற வசனத்தை இயல்பாகப் பேசியதன் மூலம் கவனம் ஈர்த்த இவரும் பிற்பாடு நகைச்சுவை என்ற பெயரில் ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கிறார். பிரேம்ஜி போன்றவர்கள் இந்தக் கணக்கில்கூட வர மாட்டார்கள்.

கலைவாணர் காலத்திய நகைச்சுவைக் காட்சிகளில் வர்க்க ஏற்றத்தாழ்வின் முரண், வருத்தம் தோய்ந்த நகைச்சுவையில் வெளிப்படும். எளிய மனிதர்களைச் சுரண்டும் மேல்தட்டு வர்க்கத்தினரை எள்ளி நகையாடும் கலைவாணர் தன்னையே கோமாளியாகக் காட்டிக்கொள்ளத் தயங்கியதில்லை. அவரை அடுத்து சந்திரபாபு, நாகேஷ் தொடங்கி அற்புதமான பல கலைஞர்கள் தமக்கே உரிய பாணிகளில் வெற்றிபெற்றனர்.

எழுபதுகளின் இறுதியில் இருந்த வெற்றிடத்தைப் போக்கியதுடன் திரைப்படங்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுக்கு உயர்ந்தவர் கவுண்டமணி. அவரது நகைச்சுவை குறித்துப் பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரது அபாரமான டைமிங்கும் பேச்சில் கொங்கு மண்ணின் ராகமும் இன்றும் ரசிக்கத்தக்கவை. வடிவேலுவின் இயல்பான வசன உச்சரிப்பு, உடல் மொழி, ’மதுரைத் தமில்’ போன்றவை அவரது வெற்றியை உறுதி செய்தன. இவர்களுக்குப் பின்னர் வளர்ந்திருக்கும் நடிகர்கள் படம் முழுவதும் தலை தெரிய வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, நகைச்சுவையை வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து பல படங்கள் நடிப்பதையும் ஒரு காரணமாக சொல்லமுடியாது. கவுண்டமணி- செந்தில் இணை வருடத்துக்கு 50 படங்கள்கூட நடித்தது. அவற்றில் பல காட்சிகள் வயிற்றைப் பதம் பார்ப்பவை. சம்பந்தப்பட்ட நடிகர்கள் உழைக்கவில்லை என்றால் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது. திரைக்கடலில் மூழ்கி மறைந்தவர்கள் ஏராளம்.

இவ்வளவுக்குப் பிறகும் அதிர்ஷ்டவசமாக , கவுண்டமணி (49-ஓ), வடிவேலு (ஜ.பு. தெனாலிராமன்), விவேக் (நான்தான் பாலா), சந்தானம் (வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்) ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் படங்கள் இந்த ஆண்டு வெளிவர இருக்கின்றன. இருண்ட காலத்துக்குப் பின்னர் கொஞ்சம் நம்பிக்கை வெளிச்சம் தரும் செய்தியாக இதைக் கருதலாம்!

(கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து வாசகர்கள் தங்கள் எதிர்வினைகளை எழுதி அனுப்பலாம்.)


காமெடிகாமெடி நடிகர்கள்கவுண்டமணிசெந்தில்சந்தானம்வடிவேலுஎன்.எஸ்.கிருஷ்ணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x