Last Updated : 09 Jun, 2017 09:04 AM

 

Published : 09 Jun 2017 09:04 AM
Last Updated : 09 Jun 2017 09:04 AM

வேலையற்றவனின் டைரி 32: காதல்... ஒரு ‘அண்டர்ஸ்டாண்டிங்’ சார்!

நான் பெரும்பாலும் காதல் கதைகளே எழுதுவதால், ‘எனது லட்சக்கணக்கான வாசகர்களில் பாதிப் பேர் இளைஞர்கள்’ என்று எழுதத்தான் ஆசை. இருந்தாலும் மிதுன ராசிக்காரர்கள், வெள்ளிக்கிழமை பொய் சொன்னால், ‘கனவில் நயன்தாரா வரமாட்டார்’ என்பதால், எனது நூற்றுக்கணக்கான வாசகர்களில் பாதிப் பேர், திருமணமாகாத இளைஞர்கள்.

சில மாதங்களுக்கு முன்பு என்னைத் தொடர்புகொண்டு பேசிய ஒரு 24 வயது இளைஞன், எனது காதல் கதைகளை எல்லாம் எக்கச்சக்கமாகப் புகழ்ந்து பேச, நான் வழக்கம்போல் புல்லரித்துப்போனேன். “உங்கள நேர்ல பாக்கணும் சார்” என்றான். நேரில் பாராட்டுகளைக் கேட்டால், இன்னும் ‘கெத்து’ போதையாக இருக்கும் என்பதால், “வா இளைஞனே… வா” என்று அன்புடன் வரவேற்றேன், காத்திருக்கும் ஆபத்தை அறியாமல்.

கடற்கரையில் என்னைச் சந்தித்த இளைஞன், “லவ் இஸ் டார்ச்சர் சார்” என்று கூற… நான் “யாரையாச்சும் காதலிக்கிறியா தம்பி?” என்றேன்.

“இன்னும் அந்த ஸ்டேஜுக்கெல்லாம் போகல. ஃபேஸ்புக்ல மூவ் பண்ணிகிட்டிருக்கேன். ரெண்டு பேருகூட ஒரு அண்டர்ஸ்டாண்டிங் போய்கிட்டிருக்கு” என்றவுடன், “ஒரே சமயத்துல ரெண்டு பேர லவ் பண்றியா?” என்று அதிர்ந்தேன்.

“லவ் பண்ணல சார்… ஒரு அண்டர்ஸ்டாண்டிங்”

“அண்டர்ஸ்டாண்டிங்னா?”

“அது லவ்வுக்கு முந்தைய ஸ்டேஜ். ஃபேஸ்புக்ல பொண்ணுங்ககூட சாட் பண்றப்ப, சில பேரு நம்ப மேல ஆர்வமா இருக்காங்கன்னு தெரியும். கொஞ்சம் ட்ரை பண்ணா, லவ் பண்ணுவாங்கன்னு நம்பிக்கை கொடுக்கிற மாதிரி நடந்துப்பாங்க. அந்த மாதிரி ரெண்டு அண்டர்ஸ்டாண்டிங் போய்கிட்டிருக்கு. எல்லா அண்டர்ஸ்டாண்டிங்கும் லவ்வா மாறும்ன்னு சொல்ல முடியாது. ஆனா லவ் பண்றவங்க எல்லாம், அண்டர்ஸ்டாண்டிங்ல இருந்தவங்கதான்” என்று பையன் சொன்னது எனக்கு சரியாக அண்டர்ஸ்டாண்ட் ஆகாமல், “ரெண்டு பேருல நீ யார லவ் பண்ற?” என்றேன்.

“ரெண்டு பேருல யாரு என்னை ஓகே பண்றாங்களோ அவங்கள லவ் பண்ணுவேன். அதுக்குதான் ரெண்டு பேரையும் சேர்ந்த மாதிரி ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன். தனித்தனியா மூவ் பண்ணி, ஒருத்தி இல்லன்னு சொல்லி, அப்புறம் இன்னொரு பொண்ண மூவ் பண்ணி, டைம் வேஸ்ட் பாருங்க. என்னை ஒண்ணும் நீங்க தப்பா நினைச்சுக்கலையே?”

“சேச்சே…” என்ற நான் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல், கடல் அலைகளைப் பார்த்தேன். பையன் புத்திசாலி. நான் ஆர்வம் இழப்பதைப் புரிந்துகொண்டு, “காதல் கதைல உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல சார்” என்று ஒரு இன்ஸ்விங்கரை வீச… மிடில் ஸ்டம்ப் காலி. உடனே நான் உற்சாகத்துடன், “அப்புறம் சொல்லுப்பா” என்றேன். பையன், “ரெண்டு பேருல ஒண்ணு ஆந்திரா. ஒண்ணு இந்திக்காரப் பொண்ணு” என்று கூறியதிலிருந்து இந்திய ஒருமைப்பாட்டில் அந்த இளைஞனுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

“தம்பி… என்னைப் பொறுத்தவரைக்கும், முன்கூட்டியே ஒருத்தரக் காதலிக்கணும்னு திட்டமிடாம, ஒருத்தர்கூட நேர்ல, நட்பா ரொம்ப நாளா பழகிக்கிட்டிருக்கிறப்ப, ஏதோ ஒரு கணத்துல, அவங்கள நம்ம மனசுக்கு ரொம்ப நெருக்கமா உணர்றதுக்குப் பேருதான் காதல். அது எப்படிப்பா ஃபேஸ்புக்ல லவ் பண்றீங்க?”

“பொண்ணு பிடிச்சிருந்துதுன்னா, கொஞ்ச நாள் சாட்டிங்ல, புக்ஸ், மியூசிக்ன்னு ஜல்லியடிச்சுட்டு, ஒரு நாள் நைஸா ‘ஆர் யூ கமிட்டட்?’ன்னு கேக்கணும். அவங்க “பிரசென்ட்லி நாட் கமிட்டட்’ன்னு சொன்னா, நம்ம மூவ் பண்ணலாம்” என்று சொல்ல… நான், “ரெண்டு பேருல யாரு நம்பள லவ் பண்றாங்களோ, அவங்கள லவ் பண்ணலாங்கிறதுல்லாம் தப்பில்லையா?” என்றேன்.

“என்ன சார்… இப்படி இளைஞர்கள் மனசப் புரிஞ்சுக்காம இருந்தா எப்படி?” என்றவுடன் நான் சட்டென்று பேக்கடித்து, “நீ சொல்றதும் கரெக்ட்டுதான். அப்புறம் சொல்லு…” என்றேன்.

“நீங்க மூவ் பண்ற பொண்ணு, லவ் பிரேக் அப் ஆனவங்களா இருந்தாங்கன்னா ஈஸியா பிக் அப் பண்ணிடலாம். ஏன்னா அவங்க யார் தோள்லயாச்சும் சாஞ்சுக்க ஆள் தேடிகிட்டிருப்பாங்க. நம்ம தோள்தான் எப்பவும் வேக்கன்டா இருக்குமே” என்றவுடன் நான் அவன் தோளைப் பார்த்தேன். அங்கு யாரும் சாய்ந்திருக்கவில்லை.

“ஆனா அதுல ஒரு டேஞ்சர் இருக்கு. அவங்க எமோஷனலா உங்கள ரொம்ப டிபென்ட் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. அந்தப் பொண்ணு…”

“யாரு? ஆந்திரா பொண்ணா? இந்திக்காரப் பொண்ணா”

“இல்ல… மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு பெங்காலிப் பொண்ணு. அதுகூட கொஞ்ச நாள் அண்டர்ஸ்டாண்டிங் போய்ட்டுருந்துச்சு”

“எத்தனை அண்டர்ஸ்டாண்டிங்டா?” என்று நான் உள்ளுக்குள் கதறினேன்.

“அதோட லவ் பிரேக் அப் ஆகி ரொம்ப டிப்ரஷன்ல இருந்துச்சு. நான் சாட்ல நல்லா பேசினேன். அந்தப் பொண்ணு ‘நான் தற்கொலை பண்ணிக்கலாம்னு இருந்தேன். நீதான் என்னை சிரிக்க வச்சு, நார்மலுக்குக் கொண்டு வந்த’ன்னு சொன்னுச்சு. பின்னாடி அதுவே பிரச்சினையாயிடுச்சு. தினம் சாட்டிங்ல, ‘நான் ரொம்ப டிப்ரஸ்டா இருக்கேன். என்னை மோட்டிவேட் பண்ணு. சிரிக்க வை’ன்னு பயங்கர இம்சை. ஒரு நாள் மத்தியானம் ரெண்டு மணி வெயில்ல, சாட்ல வந்து, ‘இப்ப நீ என்னை சிரிக்க வை. எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு’ன்னு சொன்னவுடனே எனக்குப் பயமாயிடுச்சு” என்றவுடன் எனக்கே பயமாகிவிட்டது.

“தம்பி… மேட்டரு தற்கொலை அது, இதுன்னு போவுது. நாம இன்னொரு நாள் பேசலாமா?” என்ற எனக்கு நெற்றியில் வியர்த்தது.

“உங்களுக்கே வியர்க்குதே. எனக்கு அப்ப எப்படி வியர்த்திருக்கும்? யோசிச்சேன். நாளைக்குத் தற்கொலை பண்ணிக்கிச்சுன்னா நமக்குத்தானே பிரச்சினை” என்று சொல்ல… நான் பீதியுடன் மனதிற்குள், “நமக்குன்னு என்னை வேற ஏன்டா இதுல இழுக்கற?” என்றேன்.

“சரி… இதெல்லாம் நமக்கு ஒத்து வராதுன்னு கட் பண்ணிட்டேன்.”

“தம்பி… நீ முதல்ல எந்தப் பொண்ண லவ் பண்ணனும்ன்னு முடிவு பண்ணு. அப்புறம் பேசிக்கலாம்” என்று அனுப்பிவைத்துவிட்டு, “இனிமே காதல் கதை எழுதுவியா? எழுதுவியா?” என்று என்னை நானே திட்டிக்கொண்டேன்.

சென்ற வாரம் நான் ஃபேஸ்புக்கில் இருந்தபோது, சாட்டில் வந்த அந்த இளைஞன், இன்பாக்ஸில் சரசரவென்று பெண்பிள்ளை படங்களாக அனுப்பி, “இதுதான் சார்… அந்த ஆந்திரா பொண்ணு. இது அந்த ஹிந்திக்கார பொண்ணு” என்றவன், இன்னொரு பெண்ணின் ஒளிப்படங்களை அனுப்பினான்.

“இது வேற பொண்ணு மாதிரி இருக்கு” என்றேன். “இது புதுசா ஒரு கொச்சின் பொண்ணு. நேத்துலருந்து அண்டர்ஸ்டாண்டிங் ஆயிருக்கு” என்றான். “பழைய அண்டர்ஸ்டாண்டிங்ல்லாம் என்னாச்சு?” என்றேன். “அது அப்படியே அண்டர்ஸ்டாண்டிங்லயே இருக்கு” என்று கூற… நான் பயங்கர அண்டர்ஸ்டாண்டிங் ஆகி… சை…. கடுப்பாகி, லாக்அவுட் செய்தேன்.

இந்தப் பையனிடம் மிகவும் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இது குறித்தெல்லாம் அவனுக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. எந்த அளவுக்குக் குற்ற உணர்வு இல்லையென்றால் நேற்றிரவு, “தம்பி… இந்த மாதிரி நீ சொன்னத வச்சு ஒரு கட்டுரை எழுதலாம்னு இருக்கேன். எழுதட்டுமா?” என்று கேட்டேன். அவன், “தாராளமா பேர் போட்டே எழுதுங்க சார்” என்று சொல்ல… நான் அதிர்ந்தேன். தொடர்ந்து அவன், “நாளைக்கு நம்ப மீட் பண்ணலாமா?” என்று கேட்க… நான் திகிலுடன், “எதுக்குப்பா?” என்றேன்.

“இல்ல… இந்தியாவுல ஒடிஸான்னு ஒரு ஸ்டேட் இருக்காமே…” என்று ஆரம்பிக்க… நான், ‘ஆ…’ என்று அலறினேன்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x