Last Updated : 09 Aug, 2016 11:42 AM

 

Published : 09 Aug 2016 11:42 AM
Last Updated : 09 Aug 2016 11:42 AM

சூரியனுக்கும் சூரியகாந்திக்கும் என்ன தொடர்பு?

விடியற்காலையில் வயல்களில் வரிசைகட்டி நிற்கும் சூரியகாந்திப் பூக்களெல்லாம் கிழக்கைப் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கின்றன. சூரியனின் முகம் தென்பட்டதும் அவர்களுக்கிடையிலான காதல் உரையாடல் ஆரம்பித்துவிடுகிறது. வானில் சூரியன் மெல்ல மெல்ல நகர ஆரம்பித்ததும் அது நகரும் திசையை நோக்கி இளம் மலர்கள் தங்கள் முகத்தைத் திருப்புகின்றன. சூரியன் மேற்கே மறைவதற்கு முன் அந்த நாளில் இறுதியாக ஒரு முறை அதைப் பார்க்கின்றன சூரியகாந்திப் பூக்கள்.

சூரியன் போன பிறகு, இரவில் மறுபடியும் தங்கள் முகத்தைக் கிழக்கு நோக்கித் தூக்கிவைத்துக்கொள்கின்றன அந்தப் பூக்கள், மறுநாள் காலையில் வரவிருக்கும் சூரியனை எதிர்நோக்கி.

புதிய பூக்களும் முதிர்ந்த பூக்களும்

அந்தப் பூக்கள் முதிரும்வரை இப்படியேதான் செய்துகொண்டிருக்கும். அதற்குப் பிறகு அந்தப் பூக்கள் சூரியனைப் பின்தொடர்வதில்லை. எப்போதும் கிழக்குப் பக்கமாகவே தங்கள் பார்வையை நிலைநிறுத்திக்கொள்கின்றன அந்த முதிர்ந்த பூக்கள், பூச்சிகளின் வரவை எதிர்நோக்கி. மகரந்தச் சேர்க்கைக்கு உதவிபுரிவதன் மூலம் புதிய பூக்கள் உற்பத்தியாக வழிவகுக்கின்றன அந்தப் பூச்சிகள். அந்தப் புதிய பூக்களும் சூரியனைப் பின்தொடர ஆரம்பிக்கின்றன.

இது ஒன்றும் காதல் அல்ல. இதற்குப் பெயர் கதிரொளித் தொடரியல்பு (Heliotropism). சூரியகாந்தியைப் போலவே மற்ற சில தாவரங்களும் இந்தப் பண்பைப் பெற்றிருக்கின்றன. ஆனால், இப்போதுவரை, சூரியகாந்தி எப்படி இவ்விதம் நடந்துகொள்கிறது என்பது ஒரு புதிர்தான்.

சமீபத்தில் ‘சயின்ஸ்’ ஆய்விதழில் வெளியிடப்பட்ட கட்டுரையொன்றில் சில ஆய்வாளர்கள் சிலர் ஒரு கண்டுபிடிப்பை முன்வைக்கிறார்கள். சூரியகாந்தியின் உயிர்க் கடிகாரமும், ஒளியை உணரும் இயல்பும் ஒன்றுக்கொன்று ஊடாடிச் செயல்படுவதால் இப்படி இருக்கலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். அவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும் மரபணுக்களை மேற்கண்ட ஒருங்கிணைந்த செயல்பாடு தூண்டிவிடுவதால் சூரியன் வானில் செல்லும் திசைக்கேற்றவாறு சூரியகாந்தியின் வளர்ச்சி நிகழ்கிறது. சூரியனின் திசையில் சூரியகாந்தியின் தண்டும் அதனால் வளைகிறது. முதிர்ந்ததும் மகரந்தச் சேர்க்கைக்குக் தயாராகும் விதத்தில் கிழக்கையே நோக்கியவாறு அந்தப் பூக்கள் விரதமிருக்க ஆரம்பிக்கின்றன.

சூரியனைப் பின்தொடர்வதால்

சூரியனைப் பின்தொடரும் சூரியகாந்தியைப் பின்தொடர்ந்தார்கள் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டேஸி ஹார்மர், ஹகோப் அடாமியன் என்ற இரண்டு தாவர உயிரியலாளர்களும் டேவிஸ் உள்ளிட்ட மற்ற ஆராய்ச்சியாளர்களும். இதற்காக, சூரியகாந்திகளை வயல்களில் கூர்நோக்கியது மட்டுமல்லாமல் தொட்டிகளிலும் தாவர வளர்ப்பு அறைகளிலும் வைத்து வளர்த்தும் ஆய்வு நடத்தினார்கள்.

சூரியனைப் பின்தொடர்வதால் இந்தத் தாவரத்துக்கு என்ன பலன் கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, தொட்டிகளில் வைத்து வெளிப்புறத்தில் வளர்க்கும் சூரியகாந்திகளுக்கு சூரிய ஒளி கிடைப்பதைத் தடுத்துப் பார்த்தார்கள். இதன் காரணமாக மற்ற சூரியகாந்திகளைவிடத் தொட்டி சூரியகாந்திகளின் வளர்ச்சி பின்தங்கியது. சூரியனைப் பின்தொடர்வதால்தான் வளர்ச்சி அதிகரிக்கிறது என்ற உண்மை தெரிந்தது. ஆனால், இந்த வளர்ச்சி எப்படி முடுக்கிவிடப்படுகிறது?

இரவு நேரத்தில் சூரியகாந்திகள், வெளிப்படையான எந்த அறிகுறியும் இல்லாமல், மறுபடியும் கிழக்கு நோக்கித் திரும்பிக்கொள்வதுதான் சூரிய காந்திக்கு உள்ளே ஒரு உயிர்க் கடிகாரம் செயல்படுகிறது என்பதற்கான சான்று. ஒரு அறைக்குள் வைத்து சூரியகாந்தியை வளர்த்து, சூரியன் வானில் செல்வதுபோல் செயற்கை ஒளியமைப்பை அறைக்குள் ஏற்படுத்திப் பார்த்தார்கள். பகல், இரவு என்ற இருவகையான ஒளியமைப்பையும் அறைக்குள்ளேயே நகலெடுத்தார்கள். 24 மணி நேரச் சுழற்சிக்கு ஏற்ப அந்தத் தாவரங்கள் செயல்பட்டன. போலியான பகலிரவு நேரச் சுழற்சியை 30 மணி நேரமாக ஆக்கியபோது தாவரங்கள் குழம்பிப் போயின. அப்போதும்கூட உண்மையான பகலிரவின் 24 மணி நேரச் சுழற்சிக்கு ஏற்பவே அவை கிழக்கு மேற்காகத் திரும்பின. தசையமைப்பு இல்லாமல் அவை எப்படித் திரும்புகின்றன?

கிழக்கும் மேற்கும்

இதற்கான விடை அவற்றின் தண்டுகளில் இருக்கிறது. மற்ற தாவரங்களைப் போலவே சூரியகாந்தியின் தண்டுகளும் இரவில்தான் அதிகம் வளர்கின்றன. ஆனால் ஒரு சிறிய வேறுபாடு. இரவு நேரத்தில் சூரிய காந்தியின் தண்டுகளில் மேற்கு பார்த்திருக்கும் பகுதிகள் வளர்கின்றன. இதனால் அவற்றின் பூக்கள் கிழக்கு நோக்கி வளைவதற்கு ஏதுவாகிறது. பகல் நேரத்தில் தண்டுகளில் கிழக்குப் பகுதிகள் வளர்கின்றன, சூரியன் மேற்கே செல்லும்போது பூக்களும் மேற்கே திரும்புவதற்கு ஏதுவாக. இப்படி எதிரெதிர் திசைகளின் தண்டுகளை டாக்டர் அடாமியன் சேகரித்து ஆய்வு மேற்கொண்டபோது ஒரு உண்மை தெரிந்தது. ஒளியுணர்வுக்கும் வளர்ச்சிக்கும் தொடர்புடைய பல்வேறு மரபணுக்கள் அந்தத் தண்டுகளின் எதிரெதிர்ப் பக்கங்களில் சுறுசுறுப்பாக இருந்தன.

அடுத்ததாக ஆய்வாளர்கள் கண்டறிய முயன்ற விஷயம், முதிர்ந்த பூக்கள் ஏன் கிழக்குத் திசையிலே நங்கூரமிட்டுக்கொள்கின்றன என்பதுதான். தொட்டிப் பூக்களை வைத்து இதற்காக ஒரு ஆய்வு நடத்தினார்கள். மேற்குப் பார்த்திருக்கும் பூக்களைவிட கிழக்குப் பார்த்திருக்கும் பூக்கள் சற்று அதிக வெப்பத்துடன் இருப்பதுடன் அதிக அளவில் பூச்சிகளை ஈர்ப்பதும் தெரியவந்தது. மேற்குப் பார்த்திருக்கும் பூக்களுக்குச் சூடேற்றிப் பார்த்தால் அப்போது நிறைய பூச்சிகள் அந்தப் பூக்களை நோக்கிக் கவர்ந்திழுக்கப்பட்டன.

இப்படிச் சில கேள்விகளுக்கான விடைகள் தெரிந்தாலும் இன்னும் சில கேள்விகள் புதிர்களாகவே இருக்கின்றன. ஒளி சமிக்ஞைகளையும் உயிர்க் கடிகாரத்தையும் வளர்ச்சியையும் ஒருங்கிணைத்துக்கொண்டு ஒவ்வொரு இரவும் சூரியகாந்திப் பூக்கள் சரியாகக் கிழக்கு நோக்கி எப்படித் திரும்பி நிற்கின்றன என்பது அப்படிப்பட்ட கேள்விகளுள் ஒன்று.

சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x