Last Updated : 23 Apr, 2017 11:54 AM

 

Published : 23 Apr 2017 11:54 AM
Last Updated : 23 Apr 2017 11:54 AM

மக்கள் இசைக்கு உலக மேடை தந்த கல்பனா!

இந்திய சத்தியாகிரகம் நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை

துப்பாக்கி வெடிகுண்டு சத்தத்தைத் தொடர்ந்து ‘ஹே ராம் ஹே ராம்’ என்கிற குரல் ஒலியோடு திரையில் காட்சி விரிகிறது. பிஹாரின் பிதிஹர்வாவில் உள்ள கஸ்தூரிபா மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் கேமரா பயணிக்கிறது. அங்கு ஒரு பலகையில் “இந்தியாவுக்கு என்னை அறிமுகப்படுத்தியது பிஹார்தான்” என எழுதப்பட்டிருக்கும் காந்தியடிகளின் வாசகத்தோடு தொடங்குகிறது அந்தப் பாடல். சம்பாரண் சத்தியாகிரகப் போராட்டத்தின் நூற்றாண்டுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘சம்பாரண் சத்தியாகிரகம் தீம் சாங்’-ஐப் போஜ்பூரி பாடகி கல்பனா பாட்டோவாரி இசையமைத்துத் தயாரித்திருக்கிறார்.

சம்பாரணுக்குள் ஓர் இசைப் பயணம்

அவுரி சாகுபடிக்காகச் சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட சம்பாரண் விவசாயிகளின் வலியையும் காந்தியடிகள் அவர்களுக்காக முன்னெடுத்த சத்தியாகிரகப் போராட்டத்தையும் இந்தப் பாடல் இசை மூலமாகவும் காட்சி வடிவிலும் சித்தரிக்கிறது. இதற்காக சம்பாரண் சத்தியாகிரகப் போராட்டக் களமான சம்பாரண் விளைநிலங்களை இந்த இசை வீடியோ தேடிச் செல்கிறது. 1917-ல் காந்தியடிகளோடு உரிமைப் போராட்டத்தை அகிம்சை வழியில் முன்னிறுத்திய அப்பாவி விவசாயிகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் அடித்துத் துன்புறுத்திய ஆவணப் பதிவுகளும் காட்டப்படுகின்றன.

அன்று கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட விவசாயிகளின் பெண் பிள்ளைகள் இன்று பிஹாரின் பிதிஹர்வாவில் உள்ள கஸ்தூரிபா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள். அரசியல் விடுதலையைத் தாண்டி சமூக விடுதலை பெற எத்தனிக்கும் தவிப்பு அவர்களுடைய சுடர்விடும் கண்களில் தெரிகிறது. மறுபுறம் சம்பாரணின் தாய்மார்களையும் மூதாட்டிகளையும் கேமரா கண் தேடுகிறது. மவுனமாக அவர்களுடைய வறண்ட கண்கள் நம்மிடம் கேட்கும் கேள்வி, “எப்போது எல்லோருக்கும் விடிவு காலம்?”

புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சமர்ப்பணம்

இந்த இசை வீடியோவை உருவாக்கிய கல்பனா, ‘பிதேசா இன் பம்பாய்’ என்கிற ஆவணப்படத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். மும்பையில் வேலைபார்க்கும் கூலித் தொழிலாளர்களில் பெரும்பாலோர் பிஹார், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். நாள் முழுவதும் கடுமையாக உழைக்கும் இவர்களின் இரவு உடற்சோர்வும் உற்றார் உறவினரைப் பிரிந்த மன வலியும் நிறைந்தது. போஜ்பூரி மொழி பேசும் இம்மக்களுக்கு உற்சாகமூட்டப் பிரத்தியேகமாக மும்பையில் ஒரு கனவுத் தொழிற்சாலை இயங்கிக்கொண்டிருக்கிறது. அதில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர் கல்பனா பட்டோவாரி. மும்பையில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவே போஜ்பூரி இசையில் பல பாடல்களைப் பாடிவருகிறார் இவர்.

இசை இலக்கு

அசாமைச் சேர்ந்த கல்பனா, ஆங்கில மொழியில் இளங்கலைப் பட்டமும் கர்னாடக இசையில் புலமையும் பெற்றவர். ஆனால் நாட்டுப்புற இசை மீது கொண்ட ஈடுபாட்டினால் நாட்டுப்புற இசையமைப்பாளரும் பாடகியு மானார். குறிப்பாக போஜ்பூரி இசையில் தனித்தடம் பதித்தார். குடிசை வாழ் மக்கள் முதல் சர்வதேச அரங்குகள்வரை போஜ்பூரி இசையைக் கொண்டுசேர்ப்பதையே தன்னுடைய இசை இலக்காகக் கொண்டிருக்கிறார் கல்பனா.

எம்.டி.வி. கோக் ஸ்டூடியோ நிகழ்ச்சிகளிலும் பல லத்தின் அமெரிக்க நாடுகளிலும் பாடியதன் மூலம் உலக அரங்கில் உள்ள இசைக் கலைஞர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் இவரையும் போஜ்பூரி இசையையும் இப்போது நன்றாகத் தெரியும். தற்போது சத்தியாகிரகத்தின் நூற்றாண்டை முன்னிட்டு தீம் இசைப் பாடலை இயற்றியதன் மூலம் போஜ்பூரி மொழியின் தாய் மடிக்கும் ஆத்மார்த்தமாக இசை வணக்கம் செலுத்தியிருக்கிறார் இந்தக் கற்பனைப் பெண்.

சம்பாரண் சத்தியாகிரகம் தீம் சாங்குக்கு:>https://wn.com/champaran_satyagraha/ theme song

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x