Published : 15 Dec 2013 02:49 PM
Last Updated : 15 Dec 2013 02:49 PM

தட்டியும் திறக்காத கதவுகள்

1900ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் உலகின் மிக உயரிய பரிசான நோபல் பரிசு, மூன்று அறிவியல் துறைகளுக்காக இதுவரை 561 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் வெறும் 16 பேர் மட்டுமே பெண் விஞ்ஞானிகள். இது 3 சதவீதம்கூட இல்லை. ஒட்டுமொத்தமாக இதுவரை வழங்கப்பட்ட 868 நோபல் பரிசுகளில், 45 பேர் மட்டுமே பெண்கள். இது சுமார் 5 சதவீதம்.

அறிவை விருத்தி செய்வதில் ஆண்களுக்குக் குறையாத மனவுறுதியுடன் பெண்கள் பங்காற்றினாலும், அவர்களது பங்களிப்பு அங்கீகரிக்கப்படவில்லை. ஆண்களுக்குப் புகழையும், பெருமை யையும் பெற்றுத் தந்த அறிவியல் துறை, பெண்களுக்குத் துரோகம் செய்துள்ளது என்று கூறலாம்.

உலக மக்கள்தொகையில் சரிபாதி இருந்தாலும் அங்கீகாரம் வழங்கப்படுவதில் மட்டும், பெண்கள் எப்பொழுதுமே புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அறிவியலின் வரலாறு முழுவதுமே இது உண்மையாக இருந்திருக்கிறது.

நெடுங்காலமாகப் பெண்களால் சிந்திக்க முடியாது, ஆராய்ச்சி செய்ய முடியாது, அறிவியல் ஆய்வுக்கூடங்களில் பெண்களுக்கு இடம் அளிக்க வேண்டியதில்லை என்ற கருத்து வலுவாக இருந்துவந்தது.

வரலாறு சொல்வது என்ன?

11ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றின் இடைப்பட்ட காலத்தில்தான் பல்கலைக்கழகங்களில் முதன்முதலாகச் சில பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். இத்தாலிய மருத்துவர் ட்ரோடுலா டி ருகியரோ, பதினொன்றாம் நூற்றாண்டில் சாலெர்னோ பள்ளியின் கௌரவப் பேராசிரியை பதவியை வகித்தார். மகப்பேறியல், மகளிர் நோய்கள் போன்ற மகளிர் மருத்துவம் தொடர்பாக ட்ரோடுலா எழுதியுள்ளார். அங்கு இத்தாலிய உயர்குடிப் பெண்களுக்கு அவர் கற்பித்தார். இங்கு படித்த பெண்களை 'சாலெர்னோ பெண்கள்' என்று குறிப்பிடுவது வழக்கம்.

‘முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட விஞ்ஞான நிறுவனங்களின் தலைமைப் பதவிகளை ஏற்பதற்கான அறிவுத் தகுதி பெண்களுக்கு இல்லை' என்ற கருத்து அறிவியல் மறுமலர்ச்சி நிகழ்ந்துகொண்டிருந்த 16, 17ஆம் நூற்றாண்டுகளில்கூட நிலவியது.

அறிவியல் மறுமலர்ச்சிகூடப் பெண்களின் பங்கேற்பு சுதந்திரத்துக்கு வழிகோலவில்லை. பெண்களுக்கு எதிரான கருத்துகளைப் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் ஆண் விஞ்ஞானிகள் அப்போது பரவலாக்கினர். குறிப்பாக அவர்களது கருத்துகளைப் பரப்பவும் வலுப்படுத்தவும் அப்பொழுது பரவலாகிக் கொண்டிருந்த அச்சிடப்பட்ட புத்தகங்கள் பெருமளவு உதவின.

கடந்த நூற்றாண்டில் அறிவியல் துறையில் பெண்கள் எப்படிப் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதற்குச் சில சிறந்த எடுத்துக்காட்டுகள் உள்ளன.

மேரி கியூரி, லிசே மெய்ட்னர், எம்மா நோதர் (அப்ஸ்டிராக்ட் அல்ஜீப்ரா துறையைக் கண்டறிந்தவர்) போன்ற மாபெரும் விஞ்ஞானிகள் சம்பளம் வாங்காமலும், பல்கலைக்கழகப் பதவி பெறாமலும் பல ஆண்டுகளுக்குப் பணிபுரிந்துள்ளனர்.

புதிய வெளிச்சம்

கடந்த நூற்றாண்டில் பெண்களுக்கு உருவாக்கப்பட்டிருந்த பல்வேறு தடைகள் தகர்க்கப்பட்டு முதல் பெண்கள் இயக்கம் உருவானபோதும், பெண்கள் ஆராய்ச்சி செய்ய ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் வாய்ப்பளிக்க ஆரம்பித்த காலத்திலும்தான், பெண் விஞ்ஞானிகளுக்குச் சில கதவுகள் திறக்கப்பட்டன. அந்தக் காலத்தில்தான் முன்னோடிகளான மேரி கியூரி, லிசே மெய்ட்னர் உருவாகினர். அதற்குப் பிறகு இரண்டாவது தலைமுறையாக 1960, 70களில் நோபல் பரிசு வெல்லும் திறமையைப் பெற்ற பெண் விஞ்ஞானிகளாக ஜெர்ட்டி கோரி, மெக்லின்டாக், டோரதி ஹாட்ஜ்கின், கோயபர்ட் மேயர், ரோசலிண்ட் பிராங்க்ளின், ஜோசெலின் பெல் ஆகியோர் வந்தனர் என்று பெண் விஞ்ஞானிகள் தொடர்பாக ஆராய்ந்த ஒரு எழுத்தாளர் குறிப்பிடுகிறார்.

கடந்த நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்த பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டபோதும், பெண் விஞ்ஞானிகளுக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளது. அதற்குச் சில உதாரணங்கள்:

கார்போஹைட்ரேட் என்ற மாவுப் பொருள், நொதிகள், சுரப்பிகளில் ஏற்படும் குறைபாடுகளால் குழந்தைகளைத் தாக்கும் நோய்களைப் பற்றி ஜெர்ட்டி கோரி ஆராய்ந்தார். 1947இல் நோபல் பரிசு கிடைக்கும் வரை அவருக்குப் பேராசிரியர் பதவி வழங்கப்படவில்லை. அணுக்கரு மாதிரியை உருவாக்கிய மரியா கோயபர்ட் மேயர் பல ஆண்டுகளுக்குத் தன்னார்வ அடிப்படையிலேயே பணிபுரிந்தார். கடைசியாக 1963ஆம் ஆண்டில் அவருக்குக் கிடைத்த நோபல் பரிசுதான், இயற்பியல் துறையில் கடைசியாகப் பெண்ணுக்குக் கிடைத்த நோபல் பரிசு. அறிவியலின் வரலாறு முழுவதும் காணப்படும் பெண் விஞ்ஞானிகளின் புறக்கணிப்புக்கு இவை சில எடுத்துக்காட்டுகள்.

புறக்கணிப்பு

இன்று உலகைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டுக்கொண்டிருக்கும் மரபணு ஆராய்ச்சி, மரபணு மாற்றம், மரபணு தொழில்நுட்பம் ஆகிய அனைத்துக்கும் அடிப்படை டி.என்.ஏ. எனப்படும் மரபணுவின் வடிவம் கண்டறியப்பட்டதுதான். மரபணுவின் வடிவம் இரட்டைத் திருகுகுழல் என்று ஜேம்ஸ் வாட்சன் முடிவுக்கு வந்தார். அவர் 1962ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெறக் காரணமாக இருந்தது இந்தக் கண்டுபிடிப்பு. ஆனால் இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின்னால் ரோசலிண்ட் பிராங்க்ளின் என்ற பெண் விஞ்ஞானியின் பங்களிப்பு இருக்கிறது. டி.என்.ஏ. தொடர்பான கண்டுபிடிப்பில் மறைக்கப்பட்ட பெண் விஞ்ஞானி அவர். ரோசலிண்டின் பங்கு இந்தப் பணியில் அங்கீகரிக்கப்பட்டு அவருக்கும் கூட்டாக நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை. அதற்குக் காரணமாக நோபல் பரிசு வழங்கத் தீர்மானித்தபோது, அவர் உயிருடன் இல்லை என்ற விதிமுறை காரணமாகக் கூறப்பட்டது. அன்றைக்கு விதிமுறை என்று கூறப்பட்டாலும், இப்போதுவரை அது போன்ற விதிமுறைகள் மாற்றப்படவில்லை. இவ்வளவு காலமாக பெண் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்படவில்லை என்பதே, அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படாததைக் கோடிட்டுக் காட்டுகிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x