Last Updated : 10 Jan, 2017 11:33 AM

 

Published : 10 Jan 2017 11:33 AM
Last Updated : 10 Jan 2017 11:33 AM

வெற்றியின் சூட்சுமம் ஆறு ‘ஆர்’கள்! - வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகம்

பிளஸ் டூ பொதுத்தேர்வு என்பது திருப்புமுனையை ஏற்படுத்தும். மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதும் பிளஸ் 2 பொதுத்தேர்வுதான். ஒவ்வொரு மாணவரின் தலைவிதியை நிர்ணயிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை எதிர்கொள்ள ‘தி இந்து’ மற்றும் எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியும் இணைந்து நடத்தும் ‘இனிது இனிது தேர்வு இனிது’ வழிகாட்டி நிகழ்ச்சி கடந்த 8-ம் தேதி வேலூர் சித்ரா மகாலில் நடைபெற்றது. வேலூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பிளஸ் டூ மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க காலை முதலே குவிந்தனர்.

இந்த நிகழ்ச்சியைத் தலைமை விருந்தினராக வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் குத்துவிளக் கேற்றித் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தேர்வு சம்பந்தமாகப் பல கருத்துகளை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். “தேர்வு என்பது நமது திறமைக்குச் சவால் விடும் வேலை. முறையான பயிற்சி இருந்தால் யாரும் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள முடியும். மாணவர்கள் தங்கள் பாடங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தால் எளிதாக இருக்கும். ஒட்டுமொத்தமாகச் சேர்த்து வைத்துப் படித்தால் படிக்க முடியாது. அன்றைய பாடங்களை அன்றைய தினமே படிக்க வேண்டும். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் இந்த வகையில் படித்தவர்கள்தான்” என்றார்.

தற்போதைய சூழலில் டிவி, செல்போன் போன்ற சாதனங்கள் கவனச் சிதறல்கள் ஏற்படுத்துவதைப் பற்றி பேசிய ஆட்சித் தலைவர் தேர்வை எதிர்கொள்ளவும் சில அறிவுரைகளை வழங்கினார். “கவனச் சிதறலை ஏற்படுத்தும் டி.வி.யைப் பார்க்க வேண்டுமா அல்லது டி.வி.யில் வரவேண்டுமா என்பதை மாணவர்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். மாணவர்களின் வாழ்க்கையில் பிளஸ் 2 தேர்வுதான் திருப்புமுனை. இப்போது கஷ்டப்பட்டுப் படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம். அதோடு எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம். கஷ்டப்பட்டுப் படிக்காமல் இஷ்டபட்டு படியுங்கள்” என்று மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், ‘ஜாலியாகப் படிங்கள், ஈசியாக ஜெயித்திடுங்கள்’ என்று அவர் குறிப்பிட்டபோது அரங்கில் அமைதியுடன் அவரது பேச்சைக் கவனித்துக்கொண்டிருந்த மாணவ-மாணவிகள் கைதட்டித் தங்கள் உற்சாகத்தை வெளிப் படுத்தினர். தேர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் அவர் சொன்ன ‘6 R’-களை அதாவது Read, Remember, Reproduce, Refer, Rectify, Revise ஆகிய சூட்சுமங்களை அனைவரும் மிகுந்த கவனத்தோடு குறிப்பெடுத்துக்கொண்டனர்.

ஆட்சியரைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பூபதி சிறப்புரையாற்றினார். பொதுத்தேர்வு என்றதும் மாணவர்கள் மனதில் எழும் அச்சம், தேர்வறையில் ஏற்படும் பதற்றம் என ஒவ்வொன்றாகப் பட்டியலிடத் தொடங்கினார். “பொதுவாகத் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு ஓர் இனம் புரியாத அச்சம் ஏற்படுவது இயல்பு. படித்தது எல்லாம் தேர்வெழுதும் சமயத்தில் நினைவுக்கு வரும் என்ற நம்பிக்கையோடு தேர்வறைக்குள் செல்லுங்கள். தேர்வு என்பது ஓர் இனிய அனுபவம். அதை நினைத்துப் பயப்படக் கூடாது. வகுப்பில் நடத்தப்படும் மாதிரித் தேர்வுகளைப் பொதுத்தேர்வுக்கான ஆயத்தக் களமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்றார்.

‘தி இந்து’ சென்னை மண்டல பொதுமேலாளர் டி.ராஜ்குமார் பேசுகையில், “மாணவர்களாகிய நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றுச் சாதனை படைக்கும்போது நீங்கள் மட்டுமின்றி உங்களின் பெற்றோர், பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள், உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அனைவரையும் நீங்கள் சந்தோஷப்படுத்துவீர்கள். உங்களின் வெற்றியின் தாக்கம் இவ்வாறு பல்வேறு தரப்பினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனித்துவத்துடன் விளங்கினால் சாதனை படைக்கலாம். எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள். மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக விருப்பம் இல்லாத படிப்பில் சேராதீர்கள்” என்று அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீ வித்யா கல்வி மையக் கவுரவ இயக்குநரும் கல்வியாளருமான எஸ்.பி.சுப்ரமணியன் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார். “வரலாற்றைப் படிப்பது எளிது, வரலாறு படைப்பது மிகவும் கடினம் என்று சொல்வார்கள். மாணவர்கள் வரலாறு படிப்பதுடன் வரலாறும் படைக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வித்யா கல்வி மையத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் என்.குமாரவேல், ஏ.திருமாறன், ஏ.பரீத் அஸ்லாம், ஆர்.மணிமாறன் ஆகியோர் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் எடுக்கப் பின்பற்ற வேண்டிய உத்திகளையும், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியின் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறைத் தலைவர் ஆர்.சங்கர் நன்றி கூறினார். விழாவின் முடிவில் மாணவ-மாணவிகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியையொட்டி எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் தயாரிப்பில் உருவான அறிவியல் மாதிரிகளின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த அறிவியல் மாதிரிகளை நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வத்தோடு பார்வையிட்டனர். நிகழ்ச்சியை ‘தி இந்து’ மற்றும் எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து மாஸ்டர் ஜெஇஇ நுழைவுத்தேர்வு பயிற்சி மையம், சென்னை அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக்சர் டிசைன் கல்லூரி ஆகியவை இணைந்து வழங்கின.

நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி!

நிகழ்ச்சியில் பங்கேற்ற வேலூர் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் எஸ்.என்.ஜனார்த்தனன் கூறுகையில், “இதுபோன்ற வழிகாட்டி நிகழ்ச்சி வேலூரில் முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது. அதுவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பல்வேறு ஆலோசனைகள் வழங்கிய பாட ஆசிரியர்களின் பேச்சு, பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நிச்சயம் நம்பிக்கையூட்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x